ஆனந்த ஜோதி

அம்பாசமுத்திரம் புருஷோத்தம பெருமாள்

வெ.கணேசன்

அலங்காரப்ரியன் என அடியார்களால் அன்போடு அழைக்கப்படும் பரந்தாமன் எழுந்தருளியுள்ள திருத்தலங்களில் பல்வேறு தனித்துவங்களைக் கொண்டு விளங்கும் தலமாக அம்பாசமுத்திரம் புருஷோத்தம பெருமாள் கோயில் விளங்குகிறது. 1,000 ஆண்டுகளுக்கும் மேலான புராதனப் பெருமை மிக்கது இவ்வூர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் இரு கரை நெடுகிலும் பழமையான கோயில்கள் பல உள்ளன. தாமிரபரணி தொடங்குமிடத்தில் உள்ள முதல் பெருமாள் கோயில் என்ற பெருமையை அம்பாசமுத்திரத்தில் உள்ள அலமேலுமங்கைத் தாயார் உடனுறை புருஷோத்தமப் பெருமாள் அருள்பாலிக்கும் கோயில் பெற்றுள்ளது.

தாமிரபரணியின் வடகரைத் தலமாகவும், நாலாபக்கமும் ‘பச்சைப் பசேல்’ என நெல் வயல்கள் சூழ்ந்த இடத்தின் மத்தியில் உயர்ந்த திருமதில்களுடன் கிழக்குப் பார்த்த வண்ணம் சாலக் கோபுர வாசல் அமைப்புடனும் இக்கோயில் அமைந்துள்ளது. பிரதான கிழக்குப் பக்க வாயிலில் வயல் வெளிகள் அமைந்துள்ளதால் பக்தர்கள் வடக்குப் பக்க வாசலையே தினமும் உபயோகித்து வருகின்றனர்.

முகமண்டபம், மகாமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை என்ற கட்டமைப்பில் சிறந்த கலையம்சத்தில் கற்றளியாக கோயில் கட்டப்பட்டுள்ளது. முகமண்டபத்தில் பலிபீடம், செப்புக் கவசம் போர்த்திய கொடிமரம், கருடாழ்வார் சந்நிதி ஆகியவை உள்ளன. தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கருடாழ்வாருக்கு திருமஞ்சனம் ஆகும் அபிஷேக நீரை எடுத்துச் சென்று அருந்தினால், பூரண நலம் பெறுவர் என்பது ஐதீகம்.

மகாமண்டபத்தில் வேணுகோபாலன், ஸ்ரீஆஞ்சநேயர், விஸ்வக்சேனர், நம்மாழ்வார், ராமானுஜர் ஆகியோரோடு பத்து ஆழ்வார்கள் எழுந்தருளியுள்ளனர். அர்த்த மண்டப வாசலில் துவார பாலகர்கள் உள்ளனர். சக்கோணமான கருவறையில் மூலவராக பஞ்ச ஆசனத்தில் தனது இடக்கரத்தால் அலமேலுமங்கைத் தாயாரை பிடித்தபடி மடியில் அமர்த்தி புருஷோத்தமப் பெருமாள் சேவை சாதிக்கிறார்.

பீடம், கமலம், கார்கோடகன் நாகம், கருடன், அவரது கழுத்தில் உள்ள கட்டில் என பஞ்ச ஆசனங்களின் மீது எட்டு திருக்கரங்கள் தாங்கி இடது காலை மடக்கியும், வலது காலை கருடாழ்வாரின் கையில் வைத்தும் அமர்ந்த கோலத்தில் பெருமாள் சேவை சாதிக்கிறார். தனது அஷ்ட கரங்களில் சங்கு, சக்கரம், கேடயம், கத்தி, வில், அம்பு, வரத ஹஸ்தம் மற்றும் ஒரு கரத்தால் இடது மடியில் அமர்ந்திருக்கும் அலமேலு மங்கைத் தாயாரை தாங்கியபடி பெருமாள் அருள்பாலிப்பது தனிச்சிறப்பு.

பரந்தாமன் தலையின் மேல் கார்கோடகன் நாகம் தன் ஏழு தலைகளுடன் படமெடுத்து குடைபிடித்த வண்ணம் அரண்போல் நிற்கிறது. தாயார் தனது இடக்கரத்தில் தாமரை மலரை ஏந்திய வண்ணம் அருள்பாலிக்கிறார். தல விருட்சம் வில்வம். தீர்த்தம் - முக்குண்ட தீர்த்தம். மூலவர் விமானம் இந்திர கல்யாண விமானம் ஆகும். வைகானஸ ஆகம விதிப்படி நாளும் இரு கால பூஜை நடைபெறுகிறது.

ஏறத்தாழ 57 வருடங்களுக்கு பிறகு கடந்த 2023-ம் ஆண்டு வைகாசிமாதம் புனர்பூச நட்சத்திரத்தில் மகா சம்ப்ரோக்ஷணம் (24-05-2023) நடைபெற்றது. ஏப்ரல் 1-ம் நாளன்று காலை உதய வேளையில் சூரியக் கிரணங்கள் மூலவர் மேல் பட்டு கருவறையே பொன்மயமாய் ஜொலிப்பது காணக் கிடைக்காத காட்சியாகும். சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 10 நாள் பிரம்மோற்சவ வைபவத்தில் தாமிரபரணியில் தீர்த்தவாரி நடைபெறுவது சிறப்பம்சம்.

சுவாதி, திருவோணம் நட்சத்திர நாட்களில் மூலவருக்கும், கருடாழ்வாருக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும். ஆடி சுவாதியும், மார்கழி திருவோணமும் உற்சவ நாட்களாகும். புரட்டாசி சனிக்கிழமைதோறும் கருடசேவை புறப்பாடு நடைபெறும். கார்த்திகை மகாதீபம், மார்கழி 30 நாட்கள் திருப்பள்ளியெழுச்சி, வைகுண்ட ஏகாதசி, தை, புரட்டாசி திருவோண தினத்தில் சுவாமி புறப்பாடு, வைகாசி புனர்பூசநாளில் வருஷாபிஷேகம் என அநேக உற்சவங்கள் ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. கூடுதல் விவரங்களை 9488473477 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு அறியலாம்.

அமைவிடம்: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து 1கிமீ தொலைவில் உள்ளது இத்தலம்.

SCROLL FOR NEXT