ஆயர்பாடியில் நந்தகோபர் - யசோதை தம்பதியின் மகனாக கண்ணன் என்ற திருநாமத்துடன் மகாவிஷ்ணு வளர்ந்தார். சிறு பாலகனாக இருந்த கண்ணன், அங்கு பலவித விளையாடல்களை செய்தருளினார். அதில் ஒன்று வெண்ணெய்யை கவர்ந்து செல்லுதல் ஆகும். இதனால் கோபியர் அனைவரும் கண்ணன் மீது மிகுந்த கோபம் கொண்டனர்.
இதுதொடர்பாக யசோதை பிராட்டியிடம் முறையிட்டனர். வீட்டைவிட்டு கண்ணன் வெளியில் செல்வதைத் தடுக்க, கயிறால் பிணைத்து ஓர் உரலுடன் கண்ணனைக் கட்டிவைத்தாள் யசோதை. அப்போது கூட கண்ணனின் விளையாட்டு குறையவில்லை. உரலுடன் இரு மரங்களுக்கு இடையே புகுந்து இரண்டு தேவர்களுக்கு சாப விமோசனம் அளித்துள்ளார். கண்ணனின் வயிற்றில் கயிறு இறுகி அதன் தடம் ஏற்பட்டது.
கண்ணன் வயிற்றில் ஏற்பட்ட வடு, உலகில் உள்ள அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதனாலேயே கண்ணன், ‘தாமோதரன்’ என்று அழைக்கப்பட்டான். ‘தாம + உதரன் = தாம்பு (கயிறு), உதரன் (வயிறு உடையவன்) கயிற்றால் கட்டப்பட்ட வயிற்றை உடையவன்’ என்ற பொருளில் தாமோதரன் என்று அழைக்கப்படுகிறார் கண்ணன்.
தாமோதரன் தரிசனம் வேண்டி, இங்கிருந்த காட்டில் மகரிஷிகள் தவம் இருந்தனர். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கிய கண்ணன், இத்தலத்தில் மூலவர் தாமோதரன் என்ற திருநாமத்துடன் 4 கரங்களில் சங்கு, சக்கரம், வரத அஸ்தம், ஊறு அஸ்தத்துடன் நின்ற கோலத்தில் சாளக்கிராம ஹாரம், தசாவதார ஹாரம் அணிந்து அருள்பாலிக்கிறார்.
உற்சவர் மந்தஸ்மித பாரிஜாதன் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இத்தலம் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக அறியப்படுகிறது. பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெறும்போது, அவரது வயிற்றில் தழும்பு இருப்பதைக் காணலாம். தாமோதரப் பெருமாள் நெற்றியில் கஸ்தூரி திலகமிட்டு அருள்பாலிக்கிறார்.
பொதுவாக பெருமாள் நெற்றியில் திருமண், ஸ்ரீசூர்ணத்துடன் அருள்பாலிப்பது வழக்கம். முன்பொரு காலத்தில் மத்வ சம்பிர தாயத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு ஆராதனை செய்து வந்ததாகவும், பின்னர் வைணவர்களுக்கு தானமாக வந்ததால் இத்தலம் ‘தானமல்லபுரம்’ என்று அழைக்கப்பட்டதாகவும், பின்னர் அதுவே மருவி ‘தாமல்’ என்று ஆனதாவும் தெரிகிறது.
ஒவ்வொரு மாதமும் ரோகிணி நட்சத்திர தினத்தில் பெருமாளுக்கு ராஜ அலங்கார சேவை நடைபெறும். திருமாலழகி, விஷ்ணு
சுந்தரி, தனிகோயில் நாச்சியார் ஆகிய திருநாமங்களுடன் தாயார் சேவை சாதிக்கிறார். வெள்ளிக்கிழமைகளில் நெய்விளக்கு ஏற்றி தாயாரை தரிசித்தால் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும் என்பது ஐதீகம். இத்தலத்தில் வில்வம், புன்னை தலவிருட்சங்களாகவும், விபுல சரஸ், சர்ப்ப தீர்த்தங்கள் நீர்நிலைகளாகவும் உள்ளன. கிபி 556-ம் ஆண்டு பல்லவர் கால செப்பேடுகளில் தாமல் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
கொலுசு காணிக்கை: இத்தலத்தில் பெருமாளுக்கு கொலுசு காணிக்கை செலுத்துவது மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாக உள்ளது. குழந்தைப் பேறு வேண்டி இத்தலத்தில் பிரார்த்தனை செய்தவர்கள், வேண்டுதல் நிறைவேறியதும் இங்கு வந்து கொலுசு காணிக்கை செலுத்துவது வழக்கமாக உள்ளது. தினமும் கோயில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சித்திரை மகாசாந்தி ஹோமம், கோடை உற்சவம், வைகாசி வசந்த உற்சவம், ஆனிலட்சார்ச்சனை, கருடசேவை, அன்னக்கூடை பாவாடை உற்சவம், ஆடி தாயார் திருவிளக்கு பூஜை, ஆவணி பவித்ர உற்சவம், கிருஷ்ண ஜெயந்தி உற்சவம், ஐப்பசி தீபாவளி, கார்த்திகை ஆஞ்சநேயர் லட்சார்ச்சனை, மார்கழி ஆண்டாள் போகி உற்சவம், மாசி மகம், பங்குனி உத்திர வைபவம் ஆகிய திருவிழாக்கள் இங்கு கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன.
கூடுதல் விவரங்களை 9629406140, 9944812697, 9894574694 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு அறியலாம். ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ள திருப்புட்குழி ஸ்ரீ விஜயராகவ பெருமாள் (இருந்தான்), தாமல் தாமோதர பெருமாள் (நின்றான்), திருப்பாற்கடல் ஸ்ரீரங்கநாத பெருமாள் (கிடந்தான்) என மூவரையும் ஒரே நாளில் தரிசனம் செய்வது சிறந்த கிரக பரிகாரமாகக் கூறப்படுகிறது.
அமைவிடம்: சென்னை - வேலூர் நெடுஞ்சாலையில் 85 கிமீ தொலைவிலும், காஞ்சிபுரத்தில் இருந்து 15 கிமீ தொலைவிலும், திருப்புட்குழியில் இருந்து 3 கிமீ தொலைவிலும் உள்ளது தாமல் திருத்தலம்.