விழுப்புரம் மாவட்டத்தில் மயிலம் பகுதியில் சிறிய மலைக் குன்றின் மீது உள்ள முருகப்பெருமான் கோயில் சூரபத்மன் நல்லறிவு பெற்ற தலமாகப் போற்றப்படுகிறது. முருகப் பெருமானை அவர் ஏறி வரும் மயிலோடு தொடர்புபடுத்தியுள்ள தலம் இது ஒன்றே. மயில் போல் காட்சி தருவதால் இம்மலைக்கு ‘மயூராசலம்' என்று பெயர் வந்தது. அதுவே மருவி தற்போது, ‘மயிலம்' என்று அழைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
முருகப் பெருமானுக்கு, தான் வாகனமாக வேண்டும் என சூரபத்மன் வேண்டினான். ‘வராக நதியின் வடகரையில் மயில் வடிவம் கொண்ட மலையாக நின்று தவமியற்றினால் உன் விருப்பம் நிறைவேறும்' என்றார் முருகப் பெருமான். அதன்படி மயில் உருவ மலையாகி சூரபத்மன் தவம் செய்த இடமே இத்தலம்.
மலையின் வடபுறம் உயர்ந்து இருப்பதுபோல இக் கோயிலில் உள்ள மயிலும் வடக்கு நோக்கிய முகத்துடனேயே நிற்கிறது. தவத்துக்கு உரிய திசை, வடக்கு. சூரபத்மன் இங்கு வடக்கு நோக்கித் தவமிருந்து முருகப் பெருமானின் வாகனமாக மாறியதால், அதே திசையை நோக்கியபடி அமரும் பெருமை இங்குள்ள மயில் வாகனத்துக்கு கிடைத்திருக்கிறது.
நொச்சி மரங்கள் சூழ்ந்த இம்மலைக்கோயி லில் வள்ளி தெய்வானையுடன் முருகன் கல்யாணக் கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். பொம்மையாபுரம் மடாதிபதி சிவ ஞான பாலய சுவாமிகளின் மடம் இங்கு உள்ளது. இவரது முன்னோர் இக்கோயிலை உருவாக்கினர்.
மயிலம் முருகப் பெருமானை வழிபட்டால் பணப்பிரச்சினை தீரும், திருமணம் கூடும் என்பது ஐதீகம். திண்டிவனத்திலிருந்து தெற்கே 10 கிமீ தொலைவில் பாண்டிச்சேரி செல்லும் பாதையில் இக்கோயில் அமைந்துள்ளது.