விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் இருந்து 12 கிமீ தொலைவில் உள்ள தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில், தென் தமிழக பஞ்சபூதத் தலங்களுள் ஆகாயத் தலமாக விளங்குகிறது. இக்கோயிலுக்கு 1,000 ஏக்கர் நிலம் தானமாக அளிக்கப்பட்டதால் இத்தலம் தேவதானம் என்று அழைக்கப்படுகிறது. தென் தமிழகத்தின் பஞ்சபூதத் தலங்களாக ஐந்து திருத்தலங்களைக் குறிப்பிடுவர். அவற்றில் ஆகாயத் தலமாக திகழ்வது தேவதானம்.
மற்றவை: சங்கரன்கோவில் (நிலம்), தாருகாபுரம் (நீர்), கரிவலம் வந்த நல்லூர் (நெருப்பு), தென்மலை (காற்று). மகா சிவராத்திரி தினத்தில் இந்த ஐந்து கோயில்களுக்கும் சென்று வழிபடுவது நற்பலன்களைத் தரும் என்பது ஐதீகம். தேவதானம் கோயிலில் உள்ள சரக்கொன்றை மரத்தடியில் ஈஸ்வரரை தியானித்து தவம் இருந்ததால், அம்பிகை ‘தவம் பெற்ற நாயகி’ என்று அழைக்கப்படுகிறார்.
பாண்டிய நாட்டின் ஆளுகைக்கு உட்பட்ட குறுநில பகுதி சேத்தூர். ஒரு முறை விக்கிரம சோழன் சேத்தூரின் மீது படையெடுத்தான். இதை எதிர் கொள்ள முடியாத சேத்தூர் படைகள், தேவதானம் பெரிய கோயிலில் தஞ்சம் அடைந்தன. அன்று இரவு, சேத்தூர் மன்னரின் கனவில் தோன்றிய இறைவன், சோழர் படையை முற்றுகை இடுமாறும், சிவகணங்களுடன் தானும் போரில் கலந்து கொண்டு உதவுவதாகவும் அருளினார். அதன்படியே சோழர் படை தோற்கடிக்கப்பட்டது (இப்படி இறைவனே வந்து சேவகம் புரிந்ததால், சேத்தூர் அரசர்கள் ‘சேத்தூர் சேவகப் பாண்டியர்' எனச் சிறப்பு பெற்றனர்).
போரில் வெல்ல முடியாத மன்னரை சூழ்ச்சியால் வெல்ல முடிவு செய்தான் சோழன். சேத்தூர் அரசர் தினமும் திருக்குளத்தில் நீராடி, புதிய ஆடை (நித்தியகோடி) அணிந்து இறைவனை வழிபடுவது வழக்கம். இதைப் பயன்படுத்தி நித்தியகோடிக்கு பதிலாக நச்சு தோய்ந்த ஆடையை அணியச் செய்து, சேத்தூர் அரசரைக் கொல்வதே சோழனின் திட்டம்.
அதற்கான ஏற்பாடுகளையும் செய்தான். இந்த நிலையில் சேத்தூர் அரசரின் கனவில் தோன்றிய இறைவன், மறுநாள் நித்தியகோடி அணிவதைத் தவிர்த்து அதை, லிங்கத் திருமேனிக்கு சாத்துமாறு ஆணையிட்டு, அவரது உயிரைக் காப்பாற்றினார். எனவே இவ்வூர் ஈசனுக்கு, ‘நச்சாடை தவிர்த்தார்' என்று பெயர்.
சேத்தூர் அரசர், நித்தியகோடியை லிங்கத் திருமேனியில் அணிவித்த அதே நேரம் சோழ மன்னனின் பார்வை பறிபோனது. இதனால் வருந்திய சோழன் இறைவனிடம் மன்றாடினான். ‘சேத்தூரில் ஒரு கோயில் அமைத்து வழிபட்டால் ஒரு கண்ணும், தேவதானம் சென்று வழிபட்டால் மற்றொரு கண்ணும் பார்வை பெறும்!' என்று அருளினார் இறைவன். அதன்படியே சேத்தூரில் திருக்கண்ணீஸ்வரர் கோயில் எழுப்பி வழிபட்டு ஒரு கண்ணிலும் பிறகு, தேவதானம் வந்து வழிபட்டு மறு கண்ணிலும் பார்வை பெற்றான் சோழன்.
புலவர் ஒருவர், ‘சேத்தூர் தல வரலாறு' எனும் தனது நூலை பெரியகோயிலில் அரங்கேற்றினார். அப்போது, ‘இந்த நூலில் குறை உள்ளது!' என்று வாதிட்ட சந்திரா அமுதன் என்ற புலவர் , ‘‘இறைவனின் அங்கீகாரம் இல்லாமல் நூலை ஏற்க முடியாது!'' என்றார். அப்போது, திடீரென பெருமழை பெய்தது.
அதையே இறைவனின் அங்கீகாரமாக ஏற்கலாம் என்று அவையினர் கூறியும் சந்திரா அமுதன் ஏற்கவில்லை. இதனால் கலங்கிய புலவர், மனதார பிரார்த்தித்தார். அப்போது, அம்பாளின் சந்நிதியில் வசித்த கிளி, அவரது கரத்தில் இருந்த பூச்செண்டு, மோதிரம் ஆகியவற்றை தனது அலகால் கவ்வியபடி பறந்து வந்து, புலவரிடம் கொடுத்து, ‘சரி...சரி!' என்றது. இதைக் கண்டு அனைவரும் வியந்தனர். சந்திரா அமுதனும், புலவரது நூலை ஏற்றார். புலவருக்கு 'பொன்னாயிரக் கவிராயர்' என்ற பட்டமும் கிடைத்தது.
சேர நாட்டுடனும் இத்தலம் தொடர்புடையது என்று கூறப்படுகிறது. கேரள சிவன் கோயில்களில் கொடி மரத்தின் அருகில் ஆமையின் வடிவம் அமையப் பெற்றிருக்கும். இது, ‘கோயிலுக்குள் செல்லும்போது ஐம்புலன்களையும் அடக்க வேண்டும்!' என்பதை உணர்த்தும்.
இத்தகைய அமைப்பு தமிழகத்தில் தேவதானம் பெரிய கோயில், வில்லிப்புத்தூர் வைத்தீஸ்வரன் கோயில், ராஜபாளையம் பெத்தவநல்லூர் மாயூரநாதசுவாமி கோயில் முதலான சில தலங்களில் மட்டுமே உள்ளது. எனவே, இந்தக் கோயில்கள், பந்தள மகாராஜாக்களின் கட்டுப்பாட்டில் இருந்து, பிறகு, பந்தளம் சேர நாட்டுடன் இணைந்ததன் விளைவாக சேத்தூர் குறுநில மன்னர்களது கட்டுப்பாட்டுக்கு வந்ததாகக் கூறுவர்.
சோழ மன்னனின் சதியை முறியடித்து அவனுக்கு தக்க பாடம் புகட்டியதால் இங்கு வழிபடுவோருக்கு எதிரிகளின் சதியை முறியடிக்கும் வரம் கிடைக்கும். கண் கெடுத்தவர், கண்கொடுத்தவர், கொழுந்தீஸ்வரர் என மூன்று சிவன் சந்நிதிகள் இங்குள்ள குன்றின் மேல் உள்ளன. இந்த சந்நிதிகளை வழிபட்டால் பார்வை குறைபாடு நீங்கும் என்பது ஐதீகம். சிலருக்கு புண் ஏற்பட்டு ஆறாத தழும்புகள் இருந்தால் கொழுந்தீஸ்வரரை 11 வாரங்கள் தொடர்ந்து பூஜித்தால் ஆறாத தழும்புகள் மறையும்.
- அ.பேச்சியப்பன்