வேலூர் மாவட்டம் வாணியம்பாடி (வாணியம்மைபாடி) அதிதீஸ்வரர் கோயில் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய திருத்தலமாக கூறப்படுகிறது. பல்லவப் பேரரசர்களால் கட்டப்பட்ட இக்கோயிலில், கலைகளில் சிறந்து விளங்க சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
ஒருசமயம் பிரம்மதேவர் தனது மனைவி கலைமகளிடம், “உலகத்திலேயே படைக்கும் தொழில் புரியும் நான் தான் பெரியவன் என்பதால் மும்மூர்த்திகள் என்று கூறும்போது, பக்தர்கள், பிரம்மதேவர், திருமால், சிவபெருமான் என்று என்னை முன்னிலைப்படுத்தி கூறுகின்றனர்” என்றார். இதைக் கேட்டு கலைமகள் நகைத்ததும், கோபமுற்ற பிரம்மதேவர் கலைமகள் பேச்சற்று போகும்படி சபித்தார்.
பிரம்மதேவரின் இச்செயல் கண்டு வருந்திய கலைவாணி, பூலோகம் வந்து சிருங்கேரியில் தவம் செய்தாள். கலைவாணியைப் பிரிந்த பிரம்மதேவர், தேவர்கள் மூலம் அவளைத் தேடத் தொடங்கினார். தேவர்களை வைத்து யாகம் செய்ய முற்பட்டார். ஆனால், மனைவி இல்லாமல் யாகம் செய்தால் அது பலன் தராது என்று தேவர்கள் கூறினர். அதனால் அனைத்து திசைகளிலும் தேடிய பின்னர் அவளை சிருங்கேரியில் கண்டுபிடித்து தன்னுடன் அழைத்துச் சென்றார்.
செல்லும் வழியில் பாலாற்றின் வடகரையில் அமைந்துள்ள சிவன் கோயிலில் தங்கினர். சிவபெருமானும் மலைமகளும் இவர்களை இன்முகத்துடன் வரவேற்றனர். பிரம்மதேவர், தனது மனைவிக்கு பேச்சுத்திறனை மீண்டும் வரவைக்குமாறு சிவபெருமானையும் மலைமகளையும் வேண்டினார். சிவபெருமானும் மலைமகளும் கலைவாணிக்கு பேசும் திறனை அளித்தனர். மேலும் ஹயக்ரீவர் முன் வீணை வாசிக்குமாறு கூறினர். கலைகளுக்கு எல்லாம் அதிபதியாகிய கலைவாணியை பாடுமாறும் பணித்தனர்.
கலைவாணியும் பேசும் சக்தி பெற்று தன்னுடைய இனிமையான குரலில் பாடி, வீணைவாசித்தார். வாணி பாடிய திருத்தலம் என்பதால் இவ்வூர் வாணியம்பாடி என்று அழைக்கப்படுகிறது. கலைவாணிக்கு பேசும் திறனை அளித்தது இத்தலத்தில் கோயில் கொண்டிருக்கும் அதிதீஸ்வரரும் பெரிய நாயகி அம்மனும்தான். இத்தல ஈசன் அதிதீஸ்வரர் சுயம்புவாய் தோன்றியவர். மேற்கு நோக்கி பக்தர்களுக்கு அருள்புரிகிறார். பெரியநாயகி அம்மன் தெற்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கிறாள்.
இங்கு கலைமகள் கிழக்கு நோக்கி அமர்ந்து வீணை வாசித்தபடி தனிசந்நிதியில் அருள்கிறாள். இங்கு சங்கரனும், நாராயணனும் இணைந்த சங்கர நாராயணர், பைரவர், தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கு தனிசந்நிதி உண்டு. இங்குள்ள தட்சிணாமூர்த்தி மான், மழு ஏந்தி, யோக பட்டை, சின் முத்திரையுடன் நந்தி மீது அமர்ந்து அருள்பாலிப்பது சிறப்பு.
இத்தலத்து சங்கர நாராயணரை பிரதோஷ தினத்தில் அபிஷேகம் செய்து வழிபட்டால், அதன் பலன் நூறு மடங்காக கிட்டும். இங்குள்ள பைரவரை ராகு காலங்களில் வழிபட்டால், சர்ப்ப தோஷங்கள் விலகும். சனிக்கிழமைகளில் செய்யும் பைரவ வழிபாட்டால் ஏழரைச்சனி, கண்டச் சனி, அர்த்தாஷ்டம சனி, அஷ்டமத்து சனி ஆகிய சகல சனி தோஷங்களும் அகன்று நற்பலன் கிடைக்கும்.
நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். அதிதீஸ்வரர், பெரியநாயகி அம்மன், கலைவாணி ஆகியோருக்கு தனித்தனியே 5 விளக்குகள் ஏற்றி வழிபட்டால், கல்வி அறிவு பெருகும், பேச்சாற்றல் கூடும், அனைத்திலும் வெற்றி கிட்டும் என்பது நம்பிக்கை.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கல்வியில் ஊக்கம் கொண்டவர்களாகவும், கலைகளில் சிறந்தும் விளங்குவர். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட தோஷங்கள் விலக இத்தல ஈசனை வழிபட்டால் உரிய பலன் கிடைக்கும். பேச்சுக் குறைபாடு இருந்தால் நிவர்த்தி ஆகும்.
காஷ்யப முனிவரின் மனைவி அதிதி, புனர்பூச நட்சத்திர நாளில் இத்தலத்தில் விரதம் இருந்து தேவர்களைப் பெற்றாள் என்று புராணங்கள் கூறுகின்றன. புதுவீடு புகுதல், குழந்தைகளை பள்ளியில் சேர்க்க, மளிகை பொருட்கள் வாங்குவதற்கும் புனர்பூச நட்சத்திர நாள் சிறப்பான தினமாக கருதப்படுகிறது. தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வுக்கு முன்னர் இத்தல ஈசனை வழிபடுவர்.
அமைவிடம்: வேலூரிலிருந்து 65 கிமீ, ஜோலார்பேட்டையிலிருந்து 16 கிமீ தொலைவில் உள்ளது.