ஆனந்த ஜோதி

சொக்​கத் தங்​கம் எது?

சுவாமி சதேவானந்த சரஸ்வதி 

உடலில் உயிர் இருக்​கும் வரை ஒரு பொருள் மீதான பற்று தொடர்ந்து கொண்டே இருக்​கிறது. உற்​றார், உறவினர், பதவி, பணம் என்று ஒரு​வருடைய விருப்​பம் நாளுக்கு நாள் அதி​கரித்த வண்​ணம் காணப்​படு​கிறது. இவையெல்​லாம் நிலை​யானவை என்று யாராலும் உறு​திபட கூற இயலாது. உறு​தி​யான பொருள் பரம்​பொருளே. ஒருவருக்கு பிரச்சினை ஏற்படும் போது மட்டுமே இறை சிந்தனை வருகிறது. அப்போது நமக்கு அவர் மிக மிக நெருக்கமானவராகத் தெரிகிறார்.

இந்த உணர்வே கடவுளுடன் நமக்கிருக்கும் பிரிக்க முடியாத, நிலையான, அழிவற்ற உறவை பலப்படுத்தும்.தானம், தர்மம், வழிபாடு, ஜபம், தியானம், ஆலய தரிசனம், மகான்களின் சமாதிகளை வணங்குதல் ஆகியன அருளாளர்கள் பயணித்த பாதை. உலக மாயைகளில் சிக்காமல் இருக்க ஆதிசங்கரர், ராமானுஜர், மாத்வர் போன்ற பேரருளாளர்களின் ஆன்ம போதனைகளை பின்பற்ற வேண்டும். இவை 24 காரட் சொக்கத் தங்கத்துக்கு ஒப்பானவை. இறை நம்பிக்கை என்ற வைரம் நமக்கு இப்போது தேவை. இறைவனிடம் சரணடைவோம். சொல், செயல், சிந்தனை எல்லாம் பிரார்த்தனையில் நிறையட்டும்.

பக்தியும் நம்பிக்கையும் நம்முள் வளரட்டும். ஆனந்தம், அமைதி மனதில் குடிகொள்ளட்டும். இதன் பலனால் இந்த “உலகத்தில் இருப்பதெல்லாம் இறைவனே” என்ற உண்மையை உணர்ந்து உலகத்துடன் இணங்கி வாழ்வோம். விளக்கொளி மட்டுமே இருளை அகற்றும். அதைப்போல் உள்ளொளி பெருக்குவதன் மூலமே மனதிலுள்ள அறியாமை அகலும். இதுவே ஆன்ம ஒளி. இதுவே உண்மையான புரட்சி.

இலக்கும் பாதையும் புலனாகியபின் தொடர்ந்து பயணிப்பது முக்கியம். தினமும் ஆன்ம சாதனை செய்வதே உயர்வுக்கு வழி. பத்து நிமிடம் இறை வழிபாட்டுக்கு ஒதுக்கினால்கூட போதும். தினமும் வீட்டில் பூஜை மணி ஒலிப்பதால் மட்டுமே மனதில் நிம்மதியும் நிறைவும் குடிகொள்ளும். இப்போதே, இங்கேயே, இந்த மனித உடலில் இன்பமுடன் வாழ வழி தேடுவதே புத்திசாலித்தனம்.

ஓர் ஆன்மிக சொற்பொழிவாளர் தன்வாழ்நாளில் பலமுறை பல இடங்களில் உபன்யாசம் செய்த புண்ணியத்தால் சொர்க்கத்துக்கு சென்றார். அங்கு அழகிய தோட்டம், வாகனம், பணியாளர்கள் என மாளிகையில் வசித்தார். மகிழ்ச்சியுடன் இருந்தவர் தனது பக்கத்து வீட்டைப் பார்த்தார் அந்தவீடு இவருடைய மாளிகையைவிட பல மடங்கு பெரியதாக இருந்தது.

அவரும் மிகவும் வசதியாக 3 வாகனங்கள், பல பணியாளர்கள் என்று இருந்தார். அவர் நிறைந்த புண்ணியம் செய்திருப்பார் என்று சொற்பொழிவாளர் நினைத்துக் கொண்டார். ஒருநாள் பக்கத்து வீட்டுக்காரரை சந்திக்க நேர்ந்தது. பூர்வ ஜென்மத்தில் அவர் இவருக்கு பக்கத்து தெருவில் குடியிருந்த ஆட்டோ ஓட்டுநர்.

சொற்பொழிவாளருக்கு மிகவும் வருத்தமாகி விட்டது. இந்திரனிடம் இந்த ஏற்றத் தாழ்வு குறித்து கேட்டார். இந்திரன் சொற்பொழிவாளரிடம், ‘‘உங்கள் சொற்பொழிவை ஆன்மிக நாட்டம் கொண்ட வயதான ஒருசிலர் மட்டுமே கேட்டனர். அதில் ஓரிருவர் தூங்கினர்.

ஆனால் ஆட்டோக்காரர் வாகனத்தை மிக குறுகலான சந்துகள், மேடு பள்ளம் இவற்றில் படுவேகமாக ஓட்டி, ஆட்டோ மற்றும் சாலையில் பயணித்தவர்களுக்கு உயிர் பயத்தை ஏற்படுத்தினார். இதனால் கடவுள் நம்பிக்கையற்ற பயணிகளும்கூட உயிர்பயத்தில் கடவுளின் நிரந்தர பக்தர்களாக மாறினர். இறை நம்பிக்கை யற்றவர்களையும் பக்தர்களாக மாற்றிய புண்ணியத்தால் தங்களைவிட வசதியாக ஆட்டோக்காரர் சொர்க்கத்தில் வாழ்கிறார்” என்றார்.

SCROLL FOR NEXT