பாரத தேசத்தில் வாழ்ந்த மகான்களுள் அருணகிரிநாதரும் ஒருவர். திருவண்ணாமலைத் திருத்தலத்தில் கிபி 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்து, முருகப் பெருமானின் அருளை பரிபூரணமாகப் பெற்ற இவர், ஆறுமுகப் பெருமானுக்கு திருப்புகழ், திருவகுப்பு, கந்தரந்தாதி, கந்தர் அநுபூதி, கந்தரலங்காரம், வேல் விருத்தம், மயில் விருத்தம் முதலிய 6 நூல்களை படைத்தருளினார்.
இவற்றில் மிகவும் சிறிய அளவில் கந்தர் அநுபூதி இருந்தாலும், பொருளில் பெரியது. கந்தன் என்ற சொல்லுக்கு பகைவர்களின் ஆற்றலை வற்றச் செய்பவர், ஆறுருவும் ஒன்றாய் இணைந்தவர், ஆன்மாக்களுக்கு பற்றுக் கோடாய்த் திகழ்பவர் என்று பொருள் கொள்ளலாம்.
அநுபூதி என்பதற்கு ஆன்மா இறையோடு ஒன்றியிருப்பது என்பது பொருளாகும். உலகப்பற்று இருக்கும்போதே, பற்றுக் கோடாயிருக்கும் கந்தனைப் பற்றிக் கொண்டால், பந்தத்தில் இருந்து விடுபட்டு ஆன்மா அவனோடு ஒன்றி அவனருகில் திளைத்திருக்கும் என்பது கந்தர் அநுபூதி உணர்த்தும் பொருளாகும்.
51 பாடல்களைக் கொண்டு விளங்கும் இந்நூலுக்கு பதவுரை, பொருளுரை, விரிவுரை ஆகியவற்றை அளித்துள்ளார் ஆசிரியர் இராதா கிருஷ்ணன் மாது. பாடல்கள் விளக்கத்தின் இடையிடையே பேரா சிரியர் இரா.இராதாகிருஷ்ணன், கி.வா.ஜகந்நாதன், கிருபானந்த வாரியார் சுவாமிகள், திருபட்டுச்சாமி ஓதுவார் ஆகியோரின் கருத்துகள் பயன்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கந்தரநுபூதி (மூலமும் உரையும்); முனைவர் இராதா கிருஷ்ணன் மாது; விலை: ரூ.120; அகஸ்தியர் பதிப்பகம், தெப்பக்குளம், திருச்சி; போன்: 043127000, 044-42187750, 8220470061
ஆன்ம லாபம் தரும் திருவாசகம்: அனைவரையும் மிக எளிதில் வயப்படுத்தி பக்தி வெள்ளத்தில் படியச் செய்யும் நூலாக திருவாசகம் விளங்குகிறது. இந்நூல் மாணிக்கவாசகப் பெருமானுடைய பேரன்பின் பிழம்பாகத் திகழ்கிறது. தன்னை ஒருமுறை ஓதுவோரையும் உள்ளம் உருக்கி ஒளி கூட்டுகிறது. ஒவ்வொரு பாடலும் தேனாக இனித்து இறைவனின் அனுபவத்தை விளக்குகிறது. திருவாசகத்தை அனைவரும் பொருள் உணர்ந்து ஓதிப் பயன் பெறும் வகையில் பேராசிரியர் ஆ.ஆனந்தராசன் இந்நூலை படைத்துள்ளார். ஒவ்வொரு பதிகமும் முடியும் இடத்தில் அதன் பொருள்நிலையை புலப்படுத்தும் விளக்கவுரை கொடுக்கப்பட்டுள்ளது.
சிவபுராணம், கீர்த்தித் திருவகவல், திருவண்டப் பகுதி, திருவெம்பாவை, திருவம்மானை, திருச்சாழல், திருவுந்தியார், குயிற்பத்து, திருப்பள்ளியெழுச்சி, அடைக்கலப்பத்து, திருக்கழுக்குன்றப் பதிகம், கண்ட பத்து, குழைத்த பத்து, உயிருண்ணிப் பத்து, அச்சப் பத்து, பிரார்த்தனைப் பத்து, யாத்திரைப் பத்து, எண்ணப்பதிகம், திருப்புலம்பல், திருவெண்பா, பண்டாய நான்மறை, திருப்படையாட்சி, ஆனந்தமாலை, அச்சோப்பதிகம் உள்ளிட்ட பதிகங்களையும் அதன் விளக்கவுரையையும் அனைவரும் உணரும் வண்ணம் ஆசிரியர் தெளிவுபடுத்தியுள்ளார்- கே.சுந்தரராமன்
திருவாசகம்; பேராசிரியர் ஆ.ஆனந்தராசன்; விலை: ரூ.240; நர்மதா பதிப்பகம், சென்னை; தொடர்புக்கு: 9840226661, 9840932566.
திருவஹீந்திரபுரம் புகழ்மாலை: 108 வைணவ திவ்ய தேசங்களில் நடுநாட்டுத் திருப்பதியாக திருவஹீந்திரபுரம் விளங்குகிறது. ஸ்ரீமத் நிகமாந்த மகாதேசிகன் இத்தலத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக எழுந்தருளியிருந்து ஸ்ரீதேவநாதனை தரிசித்து, பல கிரந்தங்களை தமிழ், வடமொழி, பிராக்ருத மொழியில் இயற்றியுள்ளார். இத்தலத்தில் எம்பெருமானுக்கு நடைபெறும் வேத பாராயண சேவையின் பலன் உலகில் உள்ள அனைவருக்கும் கிடைக்க ஸ்ரீவேத பரிபாலன ஸபை முழு முயற்சியுடன் செயல்பட்டு வருகிறது.
இச்சபை மூலம் வேத வித்வான்கள் கௌரவிக்கப்படுவது, வேத பாராயண கைங்கர்யபரர்களுக்கு சன்மானம், வஸ்திரம் சமர்ப்பிப்பது, ததீயாராதனை, பெருமாளுக்கு தளிகை சமர்ப்பிப்பது, நூல்கள் வெளியிடுவது உள்ளிட்ட சேவைகள் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீபாதுகா சஹஸ்ரம், ஸ்ரீதேசிகன் வைபவம், லகு திருவாராதன கிரமம், ஸ்ரீதேசிக பிரபந்தம் உள்ளிட்ட நூல்களை வெளியிட்ட சபை, திருவஹீந்திரபுரம் திருத்தலத்தின் சம்ப்ரோஷணத்தை முன்னிட்டு, திருவஹீந்திரபுரம் தலத்துப் பாட்டின் இரண்டு வகை வியாக்கியானங்கள், தெளிவுரை, வண்ண வரைபடங்கள், வர்ணனையுடன், இருந்தண் மாநிலம் என்ற இந்நூலை வெளியிட்டுள்ளது. இந்நூல் ஸ்ரீ உ.வே.முகுந்தாச்சாரியார் ஸ்வாமி, என்.கே சேஷாத்ரி ஸ்வாமி குடும்பத்தினர், கருடபுரம் வரதராஜன் தேசிகன், ஸ்ரீமதி கௌஸ்துபா, ஸ்ரீமான் ரகுராமன் உள்ளிட்டோரின் சீரிய முயற்சியில் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இருந்தண் மாநிலம்; ஸ்ரீதேவநாதன் சந்நிதி மஹா சம்ப்ரோக் ஷண மலர்; ஸ்ரீவேத பரிபாலன ஸபா, திருவஹீந்திரபுரம்; tvpm.vps@gmail.com, tvpvpsabha@gmail.com