கெருகம்பாக்கம் ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் கோயில், கேது பகவானின் பரிகாரத் தலமாக போற்றப்படுகிறது. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் இத்தலத்தில் எமகண்ட நேரத்தில் காலை 9 முதல் 10.30 வரை ஸ்ரீகேது பகவான் பரிகார ஹோமம் நடைபெறுகிறது. சென்னை அருகே போரூர் - குன்றத்தூர் சாலையில் கெருகம்பக்கம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து 1 கிமீ தொலைவில் ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. கோயிலுக்குள் நுழைந்ததும் ‘ஆதி காமாட்சி’ தரிசனம் நமக்கு கிடைக்கும்.
இடதுபுறம் உள்ள ஸ்ரீ சங்கடஹர கணபதியை தரிசித்து விட்டு உள்ளே சென்றால், கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் ஸ்ரீ நீலகண்டேஸ்வரரை தரிசிக்கலாம். பெரிய பாணத்தோடு அருள்பாலிக்கிறார். இந்த பாணம் ஸ்ரீ கேது பகவானின் தலையாக கூறப்படுகிறது. ஆவுடையாருக்கு கீழே நீர்விழும் இடத்தில் கேது பகவானின் வால் பகுதி இருப்பதாக அர்ச்சகர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் ஈசனை வழிபட்டால், அவரே கேது தோஷத்தை முற்றிலும் நீக்குவதாக ஐதீகம்.
அம்பிகை, ஸ்ரீகாமாட்சி (திரிநேத்ரதாரி) என்ற திருநாமத்துடன் 4 கரங்களுடன், முக்கண் கொண்டு அருள்பாலிக்கிறார். ஸ்ரீசக்கரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அம்பிகை, முன் இரு கரங்களில் அங்குசம், பாசம், கீழ் இரு கரங்களில் அபய, வரத முத்திரை கொண்டு அருள்பாலிக்கிறார். வெளிபிரகாரத்தில் உட்கோயில் வாசலுக்கு இடதுபுறம் நாகராஜர் சந்நிதி உள்ளது. கேது தோஷம் உள்ளவர்கள் 5 செவ்வாய்க்கிழமைகளில் இங்கு எமகண்ட நேரத்தில் 2 கொள்ளு தீபங்கள் ஏற்றி வழிபட்டால் தோஷம் விலகும் என்பது ஐதீகம்.
இத்தலம் அருகே மற்ற நவக்கிரக பரிகாரத் தலங்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. (கொளப்பாக்கம் - சூரியன், போரூர் - குரு, கோவூர் - புதன், பூந்தமல்லி - செவ்வாய், குன்றத்தூர் - ராகு, சோமங்கலம் - சந்திரன், மாங்காடு - சுக்கிரன், பொழிச்சலூர் - சனி, கெருகம்பாக்கம் - கேது) 50 வருடங்களுக்கு முன்பு, காஞ்சி மகாஸ்வாமி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இவ்வூரில் தங்கியிருந்து, நித்ய பூஜைகள் செய்து இத்தல சுவாமி, அம்பாளை தரிசித்துள்ளார்.