தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சக்கரபாணி பெருமாள் கோயிலில் திருமால் முக்கண்ணுடன் எழுந்தருளியுள்ளார். சோழர் காலத்தில் எழுப்பப்பட்ட இத்தலம் பாஸ்கர ஷேத்ரம் என்று அழைக்கப்படுகிறது.
ஜலந்தராசுரன் என்பவனை அழிக்கும் பொருட்டு சாரங்கபாணி சுவாமி திருச்சக்கரம் ஒன்றை அனுப்பினார். அந்த சக்கரம் பாதாள உலகில் உள்ள அசுரர்களை அழித்தது. மேலும் காவிரியில் பூமியைப் பிளந்து கொண்டு வெளியே வந்தது. அப்போது பிரம்மதேவர் கும்பகோணம் காவிரிக் கரையில் அமர்ந்து யாகம் செய்துக் கொண்டிருந்தார். அந்த திருச்சக்கரம் பிரம்மதேவர் கையில் வந்து அமர்ந்தது.
மகிழ்ச்சி அடைந்த பிரம்மதேவர், திருச்சக்கரத்தை காவிரிக் கரையிலேயே பிரதிஷ்டை செய்து பூஜித்து, ஆராதனைகள் செய்தார். அந்த திருச்சக்கரம் மிகவும் ஒளி உடையதாக இருக்கக் கண்டு சூரியதேவனுக்கு பொறாமை ஏற்பட்டது. தன்னைவிட ஒளி பொருந்தியதாக ஒரு பொருள் இருப்பதா என்று நினைத்து தனது ஒளியை மேலும் கூட்டினான். அவனது ஒளி அனைத்தையும் திருச்சக்கரம் தன்னுள் அடக்கிக் கொண்டது. சூரியதேவன் இப்போது ஒளியிழந்து பலமற்றவனாக ஆனான். தனக்கு மீண்டும் ஒளி கிடைக்க திருச்சக்கரத்தை சரணடைந்தான்.
வைகாசி மாத பௌர்ணமி தினத்தில் திருச்சக்கரத்தில் இருந்து மூன்று கண்களுடனும் எட்டு கைகளுடனும் அக்னிமயமான கேசத்துடனும் சக்கரராஜன் தோன்றினார். இந்த நன்றிக்காக சக்கரராஜனுக்கு கோயில் கட்டினான் சூரியதேவன். காவிரியில் திருச்சக்கரம் தோன்றிய இடத்தை இப்போது சக்கரதீர்த்தம் என்றும் சக்கர படித்துறை என்றும் அழைக்கிறார்கள்.
கோயிலுக்குள் உள்ள தீர்த்தத்துக்கு அமிர்த புஷ்கரிணி என்று பெயர். இத்தீர்த்தம் காசியை விட கூடுதல் மகிமை கொண்டது. சுதர்சனவல்லி (விஜயவல்லி) தாயாருடன் சக்கரபாணி சுவாமி பெருமாள் இத்தலத்தில் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார். சக்கரபாணி சுவாமி சந்நிதியின் வடபுறம் விஜயவல்லி தாயாருக்கு தனி சந்நிதி உள்ளது.
பிரகாரத்தில் லட்சுமி நரசிம்மர், தும்பிக்கை ஆழ்வார், பஞ்சமுக ஆஞ்சநேயர் அருள்பாலிக்கின்றனர். இக்கோயில் அதன் அழகிய தூண்களுக்காக பிரசித்தி பெற்றது. ராஜா சரபோஜிக்கு ஏற்பட்ட நோய் இத்தல பெருமாளால் குணமானது. அதன் காரணமாக ஒரு வெண்கல படம் ஒன்று இத்தலத்தில் உள்ளது.
சூரியதேவன், பிரம்மதேவன், அக்னிதேவன், மார்க்கண்டேயர், அகிர்புதன்ய மகரிஷி ஆகியோர் இத்தலத்தில் வழிபாடு செய்துள்ளனர். இத்தல பெருமாள் முக்கண்ணுடன் எழுந்தருளி இருப்பதால், பூ, துளசி, குங்குமம் ஆகியவற்றுடன் வில்வ அர்ச்சனையும் செய்யப்படுகிறது. இத்தலத்தில் சுதர்சன ஹோமம் செய்தால் சிறப்பான பலன்களைத் தரும்.
மாதம்தோறும் மகம் மற்றும் சித்திரை நட்சத்திரங்களில் கருட சேவை நடைபெறும். அட்சய திருதியை, ரதசப்தமி தினங்களில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும், வைகாசி விசாகத்தில் தெப்ப உற்சவம் மிகச் சிறப்பாக நடைபெறும். அட்சய திருதியை அன்று பெரிய தெருவில் நடைபெறும் 12 கருட சேவையில் இத்தல பெருமாளும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 12 கருட சேவை கும்பகோணத்தில் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப் பிறகு வரும் திருதியை (அட்சய திருதியை) தினத்தில் காலையில் 12 கருட சேவை விழா கொண்டாடப்படும்.
கும்பகோணம் பெரிய தெருவில் சாரங்கபாணி பெருமாள், சக்கரபாணி பெருமாள், ராமசுவாமி பெருமாள், ராஜ கோபால சுவாமி, வராக பெருமாள், வெங்கட்ராயர் அக்ரஹாரம் பட்டாபிராமர், மல்லுக தெரு சந்தான கோபால கிருஷ்ணன், நவநீத கிருஷ்ணன், புளியஞ்சேரி வேணுகோபால சுவாமி, மேலக்காவேரி வரதராஜப் பெருமாள், நவநீத கிருஷ்ணன், சோலையப்பன் தெரு ராமசுவாமி பெருமாள் கோயில் உற்சவ மூர்த்திகள் கருட வாகனத்தில் எழுந்தருளுவது வழக்கம்.
இத்தலத்தில் 2015-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. 70 ஆண்டுகளுக்குப் பிறகு 2017-ம் ஆண்டு இத்தலத்தில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. 97 ஆண்டுகளுக்குப் பிறகு 2019-ம் ஆண்டு ரதசப்தமி தினத்தில் சுவாமி சூரியபிரபையில் வீதியுலா வந்தார். மகாமக குளம், பொற்றாமரை குளம், காவிரியில் நீராடிய பலன்களையும் மகாமக குளத்தை ஒட்டிய 11 கோயில்களை தரிசித்து கிட்டிய பலன்களையும் சக்கரபாணி சுவாமியிடம் சமர்ப்பித்தால் வேண்டிய அனைத்தையும் சக்கரபாணி சுவாமி பெருமாள் அருள்வார்.
சூரியதேவன் இத்தல மூர்த்தியிடம் சரண் புகுந்ததால், இத்தல மூர்த்தியை வழிபட்டால் நவகோள்களால் ஏற்படும் இன்னல்கள் நீங்கும். ஏழரை சனி, அஷ்டமத்து சனி, ராகு தசை, கேது தசை ஆகியவற்றால் ஏற்படும் தடைகள் விலகும். இத்தலத்தில் பிரகாரத்தை சுற்றி வந்தால் திருமண பாக்கியம், தேர்வில் வெற்றி, குழந்தைப் பேறு கிட்டும்.
அமைவிடம்: கும்பகோணம் ரயில் நிலையத்தில் இருந்து வட மேற்கு நோக்கி 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.