தங்க நிற ஆடையில் தங்க கிரீடத்துடன் காசி திருத்தலத்தில் அருள்பாலிக்கும் அன்னபூரணியை தரிசிக்க, தினந்தோறும் எண்ணற்ற பக்தர்கள் வருகை புரிகின்றனர். வற்றாத உணவை அளிக்கும் அட்சயப் பாத்திரத்தை ஏந்தி இருப்பதால் சக்தி தேவி ‘அன்னபூரணி’ என்று போற்றப்படுகிறாள்.
வாராணசி பகுதியில் முன்பொரு காலத்தில்கடும் பஞ்சம் நிலவியது. அப்போது, அன்னைசக்திதேவி, திருமாலிடம் வேண்டி, அட்சயப் பாத்திரத்தைப் பெற்று, அனைவருக்கும் உணவளித்து வந்தாள். இன்றும் அன்னபூரணி கோயிலில் காலை 11 மணி அளவில் அனைவருக்கும் அன்னதானம் அளிக்கப்படுகிறது.
நாட்டுக்கோட்டை நகரத்தார் மற்றும் பல சமூக ஸ்தாபனங்கள், நிதி அளித்து, அன்னதானம் நடைபெறுகிறது. உலகில் அனைவருக்கும் அமுது படைக்கும் இறைவனுக்கே அன்னமளிக்கும் தங்க அன்னபூரணி, காசி திருத்தலத்தில் அருள்பாலிப்பது பாரத தேசத்துக்கே பெருமை என புராணங்கள் உரைக்கின்றன. எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருப்பதாக தைத்ரிய உபநிஷத்தில் (அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னம்) கூறப்பட்டுள்ளது.
திருமால் ‘அட்சய’ என்று கூறி முதலில் அன்னமிட்டதால், அன்னபூரணியின் பாத்திரம் அட்சய பாத்திரம் என்று அழைக்கப்படுகிறது. பிரம்மதேவரின் தலையைக் கொய்ததால், சிவபெருமானை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. மேலும் சிவபெருமானின் கரத்தில் அந்தக் கபாலம் ஒட்டிக் கொண்டது. பல இடங்களில் சிவபெருமான் பிட்சாடனராக, உணவு பெற்றபோதும் அந்தக் கபாலம் அவருடைய கையை விட்டு அகலவில்லை.
நிறைவில் அன்னபூரணி தமது அட்சய பாத்திரத்தில் இருந்து சிவபெருமானுக்கு உணவிட்டதால், அவரது கையில் இருந்து கபாலம் நீங்கியது. காசி நகரில் தேவதத்தன், தனஞ்செயன் என்ற சகோதரர்கள் வசித்து வந்தனர். தேவதத்தன் பெரும் செல்வந்தனாக இருந்தான்.
ஆனால் தனஞ்செயன் வறுமையில் வாடினான். தினமும் மணிகர்ணிகை படித்துறைக்குச் சென்று கங்கையில் நீராடி, காசி விஸ்வநாதரையும், விசாலாட்சி அம்பாளையும் தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான் தனஞ்செயன். ஒருநாள் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, பசியுடன் முக்தி மண்டபத்தில் அமர்ந்திருந்தபோது, தனக்கு ஏன் இந்த வறுமை நிலை என்று நினைத்து கவலை கொண்டான். தன்னை அன்னதோஷம் பிடித்ததற்கான காரணத்தை யோசித்தவாறு அங்கேயே உறங்கினான்.
அப்போது அவனது கனவில், சந்நியாசி ஒருவர் தோன்றி, ‘தனஜ்செயா.. முன்பு காஞ்சி மாநகரத்தில் சத்ருதர்மன் என்ற ராஜகுமாரன் இருந்தான். அவனது தோழன் ஹேரம்பன். இருவரும் வேட்டைக்கு சென்று, காட்டில் வழி தவறினர். கடும் பசியால் தவித்தனர். அவர்களைக் கண்ட முனிவர் ஒருவர், தனது ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்றார்.
இருவருக்கும் அன்னம் வழங்கி உபசரித்தார். சத்ருதர்மனுக்கு, அந்த அன்னம் அமுதமாகத் தோன்றியது. அந்த உணவை ஹேரம்பன் விரும்பவில்லை. சிறிதளவு உண்டுவிட்டு மீதம் இருந்த அன்னத்தை எறிந்தான். அப்படி அன்னத்தை அவமானப்படுத்தியதால் ஹேரம் பனான நீ இப்போது தனஞ்செயனாக பிறந்திருக்கிறாய். அன்னத்தை அவமதிக்காமல், அமுதமாக நினைத்த சத்ருதர்மன் இப்போது தேவதத்தனாகப் பிறந்து, பெரும் செல்வந்தனாக உள்ளான். முறையாக விரதம் இருந்து அன்னபூரணியை சரணடைந்து வணங்கினால், உனது அன்னதோஷ நிலை மாறி, எல்லாம் இன்பமயமாகும்” என்றார்.
அதன் பின்னர் தனஞ்செயன், அன்னபூரணி விரதத்துக்கு உண்டான நெறிமுறைகளை அறிந்துகொண்டு காமரூபம் என்ற இடத்தை அடைந்தான். அங்கு மலையடிவார ஏரிக்கரையில் தேவ கன்னியர் பூஜை செய்து கொண்டிருந்தனர். ‘யாரை பூஜை செய்கிறீர்கள்?’ என்று அவர்களை தனஞ்செயன் கேட்டான்.
அதற்கு அவர்கள் சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது, அவரது பசிப்பிணி தீர்க்க ஆதிசக்தி, அன்னபூரணி வடிவம் எடுத்து அவருக்கு உணவிட்டது, அதனால் ஈசனின் பிரம்ம ஹத்தி தோஷம் நீங்கியது என்று அனைத்தையும் கூறினர். மேலும் அன்னபூரணியை வணங்குவதற்கான விரத முறைகளையும் தனஞ்செயனுக்கு எடுத்துரைத்தனர். அவர்களின் ஆலோசனைப்படி, தனஞ்செயன் காசி திருத்தலத்துக்கு வந்து அன்னபூரணியை வணங்கி அவளது அருள் பெற்றான்.
அன்னபூரணி, ‘இந்த விரதத்தை யார் மேற் கொண்டாலும், அவர்களுக்கு அன்னத்துக்கு குறைவிருக்காது. அனைவருக்கும் அருள்
பாலிக்க நான் காசி திருத்தலத்துக்கே வருகிறேன். எனக்காக ஈசனின் கோயிலுக்கு தென்புறத்தில் ஒரு கோயில் எழுப்பினால், நான் அங்கு வந்து அமர்ந்து அனைவருக்கும் அருள்கிறேன்’ என்றாள். அன்னபூரணியின் அருளால் வற்றாத செல்வத்துக்கு அதிபதியானான் தனஞ் செயன். அவன் எழுப்பிய கோயில்தான் அன்னபூரணி கோயில் ஆகும்.
அனைத்தும் மாயை: ஒருசமயம் கயிலையில் சிவபெருமான், பார்வதி தேவிக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தில், ‘உணவு உட்பட அனைத்தும் மாயையே’ என்று ஈசன் கூறினார். உடனே பார்வதி தேவி, ‘உண்டு உயிர் வளர்க்கும் உணவு எப்படி மாயை ஆகும்?’ என்று மறுப்பு தெரிவித்துவிட்டு கோபத்துடன் வெளியேறுகிறாள். சக்தி இல்லாமல் உலகில் வளர்ச்சி ஏதும் இன்றி, பஞ்சம் ஏற்பட்டது.
துயரத்தில் ஆழ்ந்த உயிர்களைக் காப்பதற்காக அன்னை அன்னபூரணியாகத் தோன்றினாள். இவளே ஈசனின் பிரம்மஹத்தி தோஷத்தை போக்கியவள். தன்னை நாடி காசி திருத்தலத்துக்கு வருபவர்கள் அனைவருக்கும் மொழி, மதம், இனம் கடந்து அன்னம் அளித்துக் கொண்டிருக்கிறாள் அன்னபூரணி. அன்னபூரணியை தரிசித்தால், வாழ்நாள் முழுவதும் உணவுக்கு குறைவு இருக்காது என்பது ஐதீகம்.
இல்லத்தில் அன்னபூரணி வழிபாடு: வீட்டில் பூஜை அறையில் சுவாமி படத்தின் முன்னர், ஒரு குடம் அல்லது சொம்பில் நிறைய நீர்விட்டு, மாவிலை வைத்து, அதன் மேல் முழு தேங்காயை வைத்து, தேங்காயை அன்னபூரணியாக பாவித்து அலங்காரம் செய்ய வேண்டும். வாழை இலையில் அரிசியை பரப்பி, அதன் மேல் அலங்கரித்த அன்னபூரணி கலசத்தை வைத்து, வழிபாட்டை தொடங்க வேண்டும். சிறு சிறு கிண்ணங்களில் பால், தயிர், பச்சரிசி, கல் உப்பு, சர்க்கரை வைத்து அன்னபூரணிக்கு படைத்து, அவளை வெண்ணிற மலர்களால் அர்ச்சிக்க வேண்டும்.
இதனால் அந்த ஆண்டு முழுவதும் அஷ்ட லட்சுமிகளும் இல்லத்தில் வாசம் செய்வர் என்பது நம்பிக்கை. சிறந்த ஆற்றல், அமைதி, நல்லிணக்கம் ஆகியவற்றை அளித்து, பயம் மற்றும் கோபத்தை நீக்குவாள் அன்னபூரணி என்பது ஐதீகம். கடந்த 1977-ம் ஆண்டில் வாராணசி தேவி அன்னபூரணி கோயிலின் கும்பாபிஷேகத்தை சிருங்கேரி சாரதா பீடத்தின் 35-வது சங்கராச்சாரியார் ஜகத்குரு ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்தசுவாமிகள் நடத்தினார்.
தற்போது 48 ஆண்டுகளுக்குப் பிறகு பிரம்மாண்ட அளவில் முறையான சம்பிர தாயங்களுடன், 36-வது சங்கராச்சாரியார் ஜகத்குரு ஸ்ரீபாரதி தீர்த்த சுவாமிகளின் வழிகாட்டுதலின்படி சிருங்கேரி இளைய சங்கராச் சாரியார் ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமிகள் குடமுழுக்கு வைபவத்தை நடத்தி வைத்தார். சிருங்கேரி மடம் வழங்கிய அன்னபூரணி தேவியின் புதிய விக்கிரகத்தின் பிராண பிரதிஷ்டை, சிருங்கேரி சாரதா பீடம் சார்பில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தங்க சிகர கோபுரத்தின் மகா கும்பாபிஷேகம் மற்றும் ஸ்ரீ விஸ்வநாதருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினார்.
விழாவை ஒட்டி கணபதி ஹோமம், சஹஸ்ர சண்டி மகா யக்ஞம், கோடி குங்கும அர்ச்சனை, மகாருத்ர யக்ஞம், சதுர்வேத பாராயணம், லோக கல்யாண பாராயணம் உட்பட பல சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவுக்காக கோயில் கோபுரம் ரூ.3.5 கோடி செலவில் 4.5 கிலோ தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இவ்விழாவில் 500-க்கும் மேற்பட்ட வேத பண்டிதர்கள் பங்கேற்றனர்.