சல்லா விஸ்வநாத சாஸ்திரி ஆதிசங்கர பகவத்பாதர், 2,500 ஆண்டுகளுக்கு முன்பு பூவுலகில் அவதரித்து, பாரத தேசம் முழுவதும் விஜய யாத்திரை மேற்கொண்டு, சைவம், சாக்தம், வைணவம், காணபத்யம், சௌரம், கௌமாரம் ஆகிய 6 வகை பக்தி மார்க்கங்களை வேத நெறியின் அடிப்படையில் நிறுவி, அத்வைத சித்தாந்தத்தை நிலைபெறச் செய்து, காஞ்சி தலத்தில் ஸர்வக்ஞபீடமேறி, ஸ்ரீகாமகோடி பீடத்தை நிறுவினார். அதில் ஆச்சார்யராக வீற்றிருந்து, ஜகத்குருவாய் விளங்கி, உலக நன்மை கருதி பல தலங்களில் மகா யந்திர பிரதிஷ்டைகளை செய்தருளினார்.
அவ்விதம் ஆதிசங்கரர், ஸ்ரீசக்ரப் பிரதிஷ்டை செய்துள்ள தலங்களில் திருஆனைக்கா எனும் கஜாரண்ய க்ஷேத்ரமும் முக்கியமான ஒன்றாகும். திருச்சிராப்பள்ளிக்கு அருகில், திருவானைக்காவில் உபயகாவேரி மத்தியில் வேதமே வெண்ணாவல் மரமாக நின்று, தவம் செய்வதாக ஸ்தல புராணம் கூறுகிறது.
பஞ்சபூத தலங்களில் நீர்தலமாக சிறப்படைந்த திருவானைக்காவிலுள்ள ஸ்ரீஜம்புகேஸ்வர சுவாமி கோயிலில் பராசக்தியான, உலகன்னை ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி எனும் நாமதேயத்துடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள்.
ஆதிசங்கரர் தமது தென்னாட்டு விஜய யாத்திரையில் இத்தலத்துக்கு விஜயம் செய்தபோது உலக நன்மையை கருதி, அம்பாள் சந்நிதியில் தவமிருந்த அம்பாளுக்கு நேர் அபிமுகமாக மகா கணபதியை பிரதிஷ்டை செய்தார். உக்கிரமாக இருந்த அம்பாளை சாந்தமாக்கி, சாந்தமான ஸ்ரீபரதேவதையின் கலையை நவரத்னமயமான 2 ஸ்ரீசக்ரங்களில் பிரதிஷ்டை செய்தார். இந்த 2 ஸ்ரீசக்ரங்களுக்கே ‘தாடங்கம்’ (கர்ணாபரணம்) என்றுபெயர். அவ்விரண்டு காதணிகளையும் ஆதிசங்கரர் அம்பாளுடைய திருச்செவிகளில் அணிவித்தார்.
ஆதிசங்கரர், தமது சௌந்தர்யலஹரி என்ற தேவி ஸ்தோத்திரத்தின் 28-வது சுலோகத்தில், அமுதத்தைப் பெற தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, எழுந்த விஷத்தை, உலகை காக்கும் பொருட்டுப் பருகியும், சிவபெருமான் ஜீவித்திருப்பது அம்பிகையின் காதணிகளின் மகிமையால்தான் (தவ ஜனனி தாடங்க மஹிமா) என்று போற்றியுள்ளார்.
ஸ்ரீஅகிலாண்டேஸ்வரியின் சக்தி முழுமையும் இவ்விரு காதணிகளிலேயே பிரதிஷ்டை செய்விக்கப்பட்டிருப்பதால், இவற்றைச் சாற்றியே ஸ்ரீஅம்பாளுக்கு ஒவ்வொரு நாளும் நித்யபூஜை, உற்சவங்கள் நடைபெற்று வருகின்றன. இத்தாடங்கப் பிரதிஷ்டையின் காரணமாக ஸ்ரீஆதிசங்கரரின் அஷ்டோத்தரசத அர்ச்சனைக் கோவையில் 'ஸ்ரீசக்ராத்மக தாடங்க போஷி தாம்பாமநோரதாய நம:' என்ற நாமாவளியும் விளங்குகிறது.
ஸ்ரீஅம்பாளுடைய அபிமுகத்தில் ஸ்ரீவிநாயகரின் அருகில் ஆதிசங்கரரும் தவக்கோலத்துடன் இன்றும் எழுந்தருளியிருப்பது இதற்கு சான்றாக விளங்குகிறது. ஸ்ரீசக்ரதாடங்க பிரதிஷ்டை நடைபெற்றபோது, அகிலாண்டேஸ்வரி அம்பாள் சந்நிதிக்கு அருகே ஸ்ரீசங்கரமடமும், தோட்டமும் நிர்மாணம் செய்யப்பட்ட செய்தி, ஸ்ரீஜம்புகேஸ்வரம் தேவஸ்தானத்தார் சமர்ப்பித்த ஆவணங்களில் காணப்படுகிறது.
ஆதிசங்கரர் முதல் அவர் வழி வந்த ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதிகள் பன்முறை உரிய நேரங்களில் காதணிகளை ஜீர்ணோத்தாரணம் மற்றும் பிரதிஷ்டை செய்து வந்துள்ளனர் என்பதை பழமையான வரலாற்று ஆவணங்கள் நமக்கு அறிவிக்கின்றன. 1686-ம் ஆண்டில் (அக்ஷய தமிழ் வருடம்) காஞ்சி மடத்தில் 59-வது பீடாதிபதி ஸ்ரீபகவந்நாம போதேந்திர சரஸ்வதி சுவாமிகள், 1757-ம் ஆண்டில் (ஈஸ்வர தமிழ் ஆண்டு) 62-வது ஆச்சாரியர், ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், 1846-ம் ஆண்டில் (பராபவ தமிழ் ஆண்டு) , 64-வது பீடாதிபதி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் 65-வது பீடாதிபதி ஸ்ரீசுதர்ஸன மஹா தேவேந்திர சரஸ்வதி சுவாமிகள், 1908-ம் ஆண்டு (பிலவங்க தமிழ் ஆண்டு) மற்றும் 1923-ம் ஆண்டில் (ருத்ரோத்காரி தமிழ் வருடம்) 68-வது பீடாதிபதி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், 1992-ம் ஆண்டில் (பிரஜாபதி தமிழ் வருடம்)69-வது பீடாதிபதி ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் 70-வது பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தாடங்க பிரதிஷ்டை வைபவத்தில் பங்கேற்றுள்ளனர்.
தேவஸ்தான நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 70-வது பீடாதிபதி, ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இந்த ஆண்டு (குரோதி) தாடங்க பிரதிஷ்டை வைபவத்தில் பங்கேற்க உள்ளார். மாசி 1-ம் தேதி (13-02-2025) திருவானைக்கா தலத்துக்கு சுவாமிகள் எழுந்தருளி கலாகர்ஷணம் செய்வித்து தாடங்க ஜீர்ணோத் தாரணத்துக்கான ஏற்பாடுகளை செய்தருள்வார். மாசி 4-ம் தேதி (16-02-2025) முற்பகல் 11.41 மணிக்கு மேல் 12 மணிக்குள்ளான நேரத்தில் அம்பிகையின் தாடங்க பிரதிஷ்டை மஹோற்சவத்தில், சுவாமிகள் பங்கேற்று நிகழ்ச்சியை நடத்தி வைப்பார்.
- கட்டுரையாளர்: ஸ்ரீகாரியம், காஞ்சி காமகோடி பீடம்.