ஆனந்த ஜோதி

ராமபக்தி சாம்ராஜ்ஜியம்

கே.சுந்தரராமன்

ஒரு சொல், ஒரு வில், ஒரு இல் என்று வாழ்ந்து காட்டிய பரம்பொருள் ஸ்ரீராமபிரான். சரணம் என்று வந்தவர்களுக்கு அபயம் அளிப்பவர் ஸ்ரீராமபிரான். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று வாக்கு தவறாதவராக இருந்து, தீயவர்களை ஒரு வில்லால் வீழ்த்தி, ஜென்மம் முழுவதும் மகாலட்சுமியுடன் பயணித்து இல் வாழ்க்கையில் சிறந்து விளங்கியவர். பாரத தேசம் முழுவதும் அவர் திருவடிகள் பதிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கம்பரால் தமிழில் எழுதப்பட்ட ராமாயணம், தலை சிறந்ததோர் இலக்கியமாகப் போற்றப்படுகிறது. அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம் ஆகிய இலக்கியங்களில் ராமபிரான் போற்றப்படுகிறார். தமிழகத்தின் மதுரைப் பகுதியை ஆட்சி புரிந்த மதுரை நாயக்கர்கள் காலநாணயங்களில் வில் அம்புடன் நின்ற நிலையில் உள்ள ராமர் உருவம் பதித்திருப்பதைக் காணலாம். ராமபிரான் பெயரிலேயே தாய்லாந்து மன்னர்களின் பெயர்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ராம ராஜ்ஜியத்தில் அனைத்து உயிர்களும் நற்குணங்களைப் பெற்று, அனைத்திலும் முழு திருப்தி அடைந்து, ஆனந்தம் நிறைந்து சீரும் சிறப்புமாக வாழ்ந்தனர். ராம பக்தர்கள் நேர்மையுடனும், இறைநம்பிக்கையுடன் இருந்து அனைத்திலும் வெற்றி பெற்றனர். மக்கள் முழுமையாக திருப்தி அடைந்து, ஆனந்தம் நிறைந்தவர்களாக இருந்தனர்.

யாருக்கும் துன்பம் என்பதே இல்லை. ராமர் ஆட்சி புரிந்தபோது அத்தகைய ராஜ்ஜியம் நடந்தது. நல்லொழுக்கமுள்ள அரசராக ஸ்ரீராமர் அயோத்தியின் சிம்மாசனத்தில் ஏறி மிக உயர்ந்த தர்மத்தின்படி ஆட்சி செய்யத் தொடங்கியபோது இத்தகைய நிகழ்வுகள் நடைபெற்றதாக வால்மீகி முனிவர் எழுதிய ஸ்ரீமத் ராமாயணத்தில் (யுத்த காண்டம் - பட்டாபிஷேக சர்க்கம்) கூறப்பட்டுள்ளது.

ராம ராஜ்ஜியம் என்பது தர்மத்தின் ஆட்சி என்றும் இறைவனின் ராஜ்ஜியம் என்றும் கூறப்படுகிறது. ஸ்ரீ ராமபிரான், அனைத்து துறைகளிலும் பிரகாசித்தார். ஸ்ரீ ராம ராஜ்ஜியம் எந்த குற்றமும், போரும் இல்லாத சிறந்த சமுதாயத்தை அடையாளப்படுத்துகிறது. அனைத்து நல்குணங்களையும் உடையவராக ராமபிரான் விளங்கி, அனைவரது வாழ்விலும் அமைதி, செழிப்பை ஏற்படுத்தி, நீதி தவறாத ஆட்சி புரிந்து, அனைவரும் சமம் என்ற நிலையை உருவாக்கி அனைவரது வாழ்விலும் ஒளியேற்றி வைத்தார்.

ஒவ்வொருவருக்கும் ஸ்ரீராமபிரான் சிறந்த முன்மாதிரியாக இருந்துள்ளார். அவரது திருவடித் தாமரைகளில் சரண் புகுந்தால், அனைவருக்கும் அமைதி, இன்பம், செழிப்பு, பூரண திருப்தி, வீடின்பம் உள்ளிட்ட அனைத்து வளங்களும் கிட்டும். வால்மீகி ராமாயணத்தின் முதல் அத்தியாயத்தில் நாரத முனிவர் வால்மீகி முனிவரிடம் கூறும்போது, ‘ஸ்ரீராமபிரான் தனது ஆட்சிக் காலத்தில் குடிமக்களிடம் ஒரு மன்னரைப் போல நடந்து கொள்ளவில்லை. மாறாக ஒரு பக்தரைப் போல வணங்கி சேவை செய்தார்” என்கிறார்.

ஒரு நல்லொழுக்கமுள்ள, சிறந்த அரசராக இருந்து, அரசாட்சி புரிந்தார். ஒரு தந்தை தனது குழந்தைகளை கவனித்துக் கொள்வதைப் போல, மக்களுக்கு சேவை செய்தார். ஒரு தேசத்துக்கு எப்படி நல்லாட்சியை வழங்குவது, தர்மநெறியின்படி ஆட்சி புரிந்து எவ்விதம் மக்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்வது என்பதை ஸ்ரீ ராமபிரான் அனைவருக்கும் உணர்த்தினார். ராமபிரானின் பக்தி சாம்ராஜ்ஜியத்தில் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியுடனும் வளமுடனும் இருப்பர் என்று வால்மீகி முனிவர் ராமாயண காவியத்தை நிறைவு செய்கிறார்.

SCROLL FOR NEXT