பொங்கல் திருவிழா, தமிழர் திருநாள், உழவர் திருநாள் என்று விழாக் கோலம் பூண்டு காணப்படும் தை மாதம், பல்வேறு சிறப்புகளைக் கொண்டுள்ளது. தைப்பூசம், தை அமாவாசை தினத்தில் கோயில்களிலும், நீர் நிலைகளிலும் பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்படுவது வழக்கம்.
ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை சிறப்பான நாளாகவும் திதியாகவும் கருதப்படுகிறது. நம் முன்னோருக்கு திதி தர்ப்பண காரியங்கள் செய்வது நாம் காலம் காலமாக கடைபிடித்து வரும் கடமைகளில் ஒன்றாகும், அப்படி வருடம் முழுவதும் வரும் அமாவாசையில் நம்மால் திதி கொடுக்க முடியவில்லை என்றாலும், வருடத்தில் ஒரு முறையாவது நமது முன்னோருக்கு திதி கொடுப்பது நமது குடும்பம் வளம் பெறவும், நமது சந்ததிகள் நலம் பெறவும், நம் வாழ்க்கையில் பல நல்ல நிகழ்வுகள் நடக்கவும் உறுதுணையாக இருக்கிறது, சரியாக திதி கொடுத்து வரும் குடும்பங்களில் அடுத்தடுத்து நல்ல காரியங்கள் சிறப்பாக நடைபெறுவதை நாம் பார்க்கிறோம், நம் முன்னோருக்கு வணக்கம் செலுத்த செலுத்த அவர்களது ஆன்மா நம்மை ஆசிர்வதித்துக் கொண்டே இருக்கும், இதனால் நம் வாழ்க்கை பல்வேறு வகையில் மேம்படுகிறது, ஜனவரி மாதம் 29-ம் தேதி அமாவாசை தினம், திருவோணம் நட்சத்திரமும், வியதிபாதம் நாமயோகமும் கூடிய அருமையான நாளாக அமைந்துள்ளது.
திதி கொடுக்க பிரதானமாக கூறப்படும் தை அமாவாசையில் மகாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரமாக கருதப்படும் பரசுராமர் தன் தாய்க்கு திதி கொடுத்த இடம் என்பதால், ‘தட்சிணகயா’ என்று போற்றப்படும் திருவனந்தபுரத்தில் உள்ள ‘திருவல்லம்’ தலம், திதி மற்றும் பிதுர் காரியங்கள் செய்வதற்கு ஒரு சிறந்த இடமாகும். பரசுராமர் ஷேத்ரம் என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது.
ஒருவர் இறந்த பின்பு அவரது சந்ததியினர் அவருக்கு செய்யக்கூடிய பிதுர் காரியங்கள் மற்றும் கொடுக்கக் கூடிய திதி (தர்ப்பணம்) மூலமே அவரது ஆத்மா சாந்தி அடையும். ஆகவே அனைவரும், தை 16-ம் தேதி (ஜனவரி 29) புதன்கிழமை, அமாவாசை தினத்தில், நமது மூதாதையருக்கு திதி கொடுத்து அவர்களை நல்ல நிலையை அடையச் செய்து நாமும் நமது வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை அடைய வேண்டும். இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் திதி கொடுப்பதற்கான சிறந்த இடங்கள் மேட்டூர், காவிரி, பவானி கூடுதுறை, கொடுமுடி, தனுஷ்கோடி போன்ற இடங்கள் இருந்தாலும் அதிகமான பலன் கொடுப்பது பரசுராமர் கோயில்தான். அமாவாசை அன்று வீட்டில் படையலிட்டு சைவமாக சமைத்து, இனிப்பு பதார்த்தங்களுடன் ஒரு வேட்டி சேலை எடுத்து வைத்து நமது முன்னோரை வணங்க வேண்டும். பின்னர், அவற்றை பிறருக்கு தானமாக கொடுப்பது மிகச்சிறந்த புண்ணியமாகும்.
தை அமாவாசை அன்று நம்மால் முடிந்தவரை பிறருக்கு அன்னதானம் செய்வது நம் வாழ்க்கையில் முன்னேற்றத்துக்கு மிகச்சிறந்த பலன் தரும். இது போன்ற நாட்களை விட்டு விட்டால் மீண்டும் கிடைப்பதற்கு ஒரு வருடம் ஆகும். ஆனால் வரக்கூடிய தை அமாவாசையில் நம் முன்னோரின் அருளைப் பெற்று, நம் குலதெய்வத்தின் அருள் பெற்று பல்லாண்டு வளத்துடன் வாழ்வோமாக..!
- தம்பிரான் ரிஷபானந்தர் சுவாமிகள்