ஆனந்த ஜோதி

கலைகளுள் மேன்மை பொருந்திய பஞ்ச பட்சி சாஸ்​திரம்

கே.சுந்தரராமன்

கலைகளுள் மிகவும் மேன்மை பொருந்​தி​யதாக போற்​றப்​படும் பஞ்ச பட்சி சாஸ்​திரம், சிவபெரு​மானால் பார்​வ​திதே​வி​யிடம் கூறப்​பட்​டதாக ஐதீகம். இந்தக் கலையை அறிந்​திருந்​தால், அனைத்​தி​லும் வெற்றி காணலாம் என்று சான்​றோர் பெரு​மக்கள் கூறு​வர். பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பாக காகபுஜண்டர் அருளிய ஜோதிட உயிர் நிலை சாஸ்திரமே பஞ்ச பட்சி சாஸ்திரம். பஞ்ச என்றால் 5 என்றும், பட்சி என்றால் பறவை எனவும் பொருள்படும். இதன்படி ஐந்து பறவைகளை வைத்து 27 நட்சத்திரங்களுக்கு பலன் சொல்வது பஞ்சபட்சி சாஸ்திரம் எனப்படும்.

வல்லூறு (அஸ்வினி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிஷம்), ஆந்தை (திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம்), காகம் (உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம்), கோழி (அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம்), மயில் (திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி) என நட்சத்திரங்கள் வகைப் படுத்தப்பட்டுள்ளன.

பஞ்ச பட்சி சாஸ்திரப்படி 24 மணி நேரத்தை பத்து ஜாமங்களாக பிரிக்கிறார் காகபுஜண்டர். பகல் பொழுதில் 5 ஜாமம். இரவு பொழுதில் 5 ஜாமம் என வகைப்படுத்துகிறார். (ஒரு ஜாமம் என்பது 2 மணி நேரம் 24 நிமிடங்கள் ஆகும்). பறவைகள் செய்யும் தொழில்கள் அரசு, ஊண், நடை, துயில், சாவு என வகைபடுத்தப்பட்டுள்ளன.

காரிய வெற்றியின் அடிப்படையில் அரசு நேரத்தில் 100 % வெற்றி கிடைக்கும் என்றும், ஊண் நேரத்தில் 70 % வெற்றி கிடைக்கும் என்றும், நடை நேரத்தில் 50 % வெற்றி கிடைக்கும் என்றும், துயில் நேரத்தில் 25 % வெற்றி கிடைக்கும் என்றும் அறியப்படுகிறது. மேலும் சாவு நேரத்தில் எந்த முக்கியமான காரியத்தையும் செய்ய வேண்டாம் என்றும், படுபட்சி நேரத்தில் புதிதாக தொடங்கப்படும் எந்த வேலையையும் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பண்டைய நாட்களில் அரசர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த பஞ்ச பட்சி சாஸ்திரத்தை, பின்னர் மந்திரிகள், மேல் தட்டு மக்கள் பயன்படுத்தினர். காலப்போக்கில் பல சூட்சும இடங்களில் மிக உயர்ந்த மதிப்பாக இந்த சாஸ்திரம் பயன்படுகிறது. சாதாரண மக்களும் பயன் பெறும்படி இந்து தமிழ் திசை வாசகர்களுக்காக மகாகுரு சிவவாக்கியர் தம்பிரான் சுவாமிகளின் சீடர், தம்பிரான் ரிஷபானந்த சுவாமிகள் பஞ்ச பட்சி பலன்களை கணித்து நூலாக வெளியிட்டுள்ளார்.

இதில் கோயில்களுக்கு செல்வது, முக்கியமான சந்திப்புகள், நற்காரியங்கள் தொடங்குவது, புதிய முயற்சிகள் மேற்கொள்வதற்கான நல்ல நேரம் கணித்து கூறப்பட்டுள்ளது. மேலும், 365 நாட்களுக்கு அன்றைய நாள், திதி, நாமயோகம், கரணம், நட்சத்திரம் என பஞ்ச அங்கமும் கணித்து கூறப்பட்டுள்ளது.

அமாவாசை, பௌர்ணமி, வ்யதீபாதம், தமிழ் மாதம் முதல் நாள், அன்னதானம் செய்ய வேண்டிய நாட்களும்கணித்து கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 2025-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரையிலான பஞ்ச பட்சி பலன்கள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. இந்த டைரி ஒவ்வொருவர் வாழ்விலும் ஓர் அங்கமாக செயல்படும் என்பது திண்ணம். இந்நூல் ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்பது தனிச்சிறப்பு.

பஞ்சபட்சி பஞ்சாங்கம் (ரிஷபானந்தரின் பொக்கிஷம்- பஞ்சாங்கமும் பஞ்சபட்சி சாஸ்திரமும்) பகுதி 1; தம்பிரான் ரிஷபானந்தர்; இந்து தமிழ் திசை பதிப்பகம்; கேஎஸ்எல் மீடியா லிமிடெட், கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை 600002; விலை: ரூ.90; தொடர்புக்கு: 044-35048001, 7401296562, 7401329402

SCROLL FOR NEXT