ஒரு தனியார் நிறுவனம், தனது பங்குகளின் ஒரு பகுதியை முதன் முதலாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் நடைமுறை ஆரம்ப பங்கு வெளியீடு (ஐபிஓ) எனப்படுகிறது. தொழில் அல்லது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்தல், கடன்களை அடைத்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக நிதி திரட்ட ஐபிஓ வெளியிடப்படுகிறது. அதன் பிறகு அந்த நிறுவனத்தின் பங்குகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு வர்த்தகமாகும். இதன் மூலம் பங்குதாரர்களுக்கு அந்த நிறுவனத்தில் உரிமை மற்றும் லாபத்தில் பங்கு பெற வாய்ப்பு ஏற்படுகிறது.
சமீப காலமாக ஐபிஓ வெளியிடும் நிறுவனங்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இது சாமான்ய சிறு முதலீட்டாளர்களிடமும், நிறுவன முதலீட்டாளர்களிடமும் அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக, சிறிய நிறுவனமோ அல்லது
பெரிய நிறுவனமோ ஐபிஓ என வந்துவிட்டால் முதலீட்டாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு விண்ணப்பிக்கும் போக்கு அதிகரித்திருக்கிறது. இதனால் பங்குகள் வெளியீட்டைப் போல பல மடங்கு விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன.
உதாரணமாக, எல்.ஜி. எலக்ட்ரானிக்ஸ் இண்டியா நிறுவனத்தின் ஐபிஓ (சுமார் ரூ.11,000 கோடி) கடந்த மாதம் வெளியானது. தொடங்கிய ஆறரை மணி நேரத்தில் வெளியிட்ட பங்குகளைக் காட்டிலும் கூடுதல் பங்குகள் வேண்டி விண்ணப்பங்கள் குவிந்தன. இந்தியச் சந்தையில் கடந்த 17 ஆண்டுகளில் இந்த அளவுக்கு விரைவாக அதிகமான விண்ணப்பங்களைப் (oversubscribed) பெற்ற நிறுவனம் இதுவாகும். இறுதியில் வெளியீட்டைப் போல 54 மடங்கு விண்ணப்பம் குவிந்தது.
உள்நாட்டு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் எண்ணற்ற சிறு முதலீட்டாளர்கள் இந்தியாவின் ஐபிஓ சந்தையில் அதிகாரம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். இதன் மூலம் வெளிநாட்டிலிருந்து வரும் முதலீட்டைச் சார்ந்துதான் பங்குச் சந்தை இருக்க வேண்டும் என்ற நிலை வெகுவாக மாறியிருக்கிறது.
2021-ம் ஆண்டில் வெளியான ஐபிஓ-க்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடு சுமார் 43.3 சதவீதமாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அவர்களின் பங்கு 25.2 சதவீதமாக குறைந்துள்ளது. மீதமுள்ள 74.8 சதவீதம் உள்நாட்டு முதலீட்டாளர்களின் பங்கு ஆகும். பிரைம் டேட்டாபேஸ் நிறுவனத் தரவுகளின்படி, 2024-ம் ஆண்டு உள்நாட்டு முதலீட்டாளர்கள் ஐபிஓக்களில் ரூ.97,900 கோடி முதலீடு செய்தனர்.
வெளிநாட்டு நிறுவனங்களின் பங்களிப்பு ரூ.79,000 கோடி. உள்நாட்டு முதலீட்டாளர்களின் பங்கேற்பு தொடர்ந்து வளர்ந்து, 2025-ம் ஆண்டில் மொத்த ஐபிஓ மதிப்பில் தோராயமாக 75%-ஐ எட்டியுள்ளது. அதாவது, ரூ.1 லட்சம் கோடியை தாண்டி எந்த ஆண்டிலும் இல்லாத அதிகபட்ச விகிதத்தைத் தொட்டிருக்கிறது.
உள்நாட்டு முதலீட்டாளர்களின் வலுவான பங்கேற்பு பங்குச் சந்தையை ஒரு கவர்ச்சிகரமான தளமாக மாற்றியிருக்கிறது. அதோடு வளர்ந்து வரும் இந்தியப் பொருளாதாரத்தில் இருக்கும் வாய்ப்புகளின் மூலம் பயன்பெற விரும்பும் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான முதலீடுகளைப் பெற இதை நன்கு பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றன.
முன்பெல்லாம் நிறுவனங்கள் தொழில் விரிவாக்கத்துக்காக பங்குகளை வெளியிட்டு நிதி திரட்டின. ஆனால், இப்போது வெளியிடப்படும் பல ஐபிஓ-க்கள் அந்த நிறுவனங்களில் தொடக்கத்தில் முதலீடு செய்த நிறுவனர்களும், நிறுவனங்களும் தாங்கள் வைத்திருக்கும் பங்குகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதப் பங்குகளை (Offer for Sale) அதிக விலைக்கு விற்பதற்கான வழியாக மாறி இருக்கிறது. இது சிறு முதலீட்டாளர்களுக்கும், சாமான்ய மக்களுக்கும் பலனளிப்பதாகத் தெரியவில்லை.
கூடுதல் மதிப்பு: ஐபிஓ சந்தை உற்சாகத்துடன் செயல்பட்டாலும் சாத்தியமான அபாயங்களையும் கொண்டிருக்கிறது. சமீபத்தில் ப்ளூம்பெர்க் வெளியிட்ட அறிக்கையில், "ஐபிஓ வெளியிடும் சில நிறுவனங்களின் மதிப்பீடு யதார்த்த நிலைக்கு ஒவ்வாத வகையில் உள்ளது. குறைவான மதிப்பு கொண்ட சில ஐபிஓக்கள்கூட 100 மடங்குக்கும் அதிகமான விண்ணப்பங்களைப் பெற்றிருக்கின்றன” என்று குறிப்பிட்டிருக்கிறது.
ஐபிஓ-வுக்கு வரவேற்பு இருந்தாலும் பங்குச் சந்தையில் பட்டியலிடும் சமயத்தில் பெரும்பாலான பங்குகள் வெளியீட்டு விலையை விட குறைவான விலைக்கே பரிவர்த்தனை ஆவதாக ப்ளூம்பெர்க் நிறுவனம் சுட்டிக் காட்டியிருக்கிறது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஐபிஓ பங்குகள் பட்டியலிடப்பட்ட முதல் மாதத்தில் 29% நிறுவன பங்குகள் சரிவைச் சந்தித்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
கடந்த நிதியாண்டில் பட்டியலிடப்பட்ட ஐபிஓ-க்களில் சுமார் 34 பங்குகள் வெளியீட்டு விலையைக் காட்டிலும் மிகவும் குறைவான விலைக்குப் பட்டியலிடப்பட்டன. இதுமட்டுமில்லாமல் 10 நிறுவனங்களின் பங்குகள் குறைந்த விலையில் பங்குச் சந்தையில் நுழைந்ததோடு அந்த ஆண்டு முழுவதுமே வழங்கப்பட்ட விலையைக் காட்டிலும் குறைவான விலையிலேயே இருந்தன.
ஏறக்குறைய 24 நிறுவனங்கள் அதிகமான விலைக்குப் பட்டியலிடப்பட்டாலும் ஒரு சில மாதங்களிலேயே அந்த லாபம் எல்லாம் ஒன்றுமில்லாமல் போனது. இப்போது வெளியாகும் பல ஐபிஓ-க்களைப் பார்க்கையில் அதன் முக மதிப்பு (Face Value) ரூ.1, 2 என்று குறிப்பிடப்பட்டு இருந்தாலும் அதனுடைய வழங்கல் விலை பல மடங்கு அதிகமாக நிர்ணயிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. இவற்றில் சில ஐபிஓ பங்குகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும்போது அதிக விலைக்குப் பட்டியலிடப்படுகிறது.
சிறு முதலீட்டாளர்களுக்கு பாதிப்பு: இப்போது ஐபிஓ-வுக்கு விண்ணப்பிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும்போது குறிப்பிட்ட அளவு லாபம் கிடைத்ததும் விற்றுவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் உள்ளனர். இதைப் புரிந்துகொள்ளாத சிறு முதலீட்டாளர்கள், ஐபிஓ மூலம் ஒதுக்கீடு கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில், பட்டியலிட்ட பிறகு ஓடிப்போய் அந்த பங்குகளை அதிக விலைக்கு வாங்கி விடுகிறார்கள்.
அவ்வாறு பட்டியலிடப்பட்டபோது பங்குகளை வாங்கிய முதலீட்டாளர்களில் ஸ்மார்ட்டாக இருப்பவர்கள், சிறிதளவு லாபம் கிடைத்ததும் விற்று விட்டு வெளியே வந்து விடுகின்றனர். ஆனால், நாளடைவில் அதன் விலை இன்னும் அதிகரிக்கும் என எண்ணி சிலசிறு முதலீட்டாளர்கள் விற்காமல் வைத்திருக்கின்றனர். ஆனால், பங்குச் சந்தையில் நுழையும்போது அதிக விலைக்கு பட்டியலாகும் நிறுவனப் பங்குகள் அதிக மதிப்பீடு கொண்டதாகி விடுகிறது. இதனால், அத்தகைய பங்குகள் அடுத்த ஓரிரு ஆண்டுகளுக்கு உயராமல் அங்கேயே இருக்கும். இதனால் பாதிக்கப்படுவது சிறு முதலீட்டாளர்கள்தான்.
வரும் 2026-ம் நிதியாண்டில் சுமார் ரூ.2 லட்சம் கோடிக்கான ஐபிஓ வெளியீட்டுக்காக நிறுவனங்கள் வரிசை கட்டி காத்திருக்கின்றன. எனவே எல்லா நிறுவனங்களின் ஐபிஓவுக்கு பின்னாலும் ஓடுவதற்குப் பதிலாக, தெரிவு செய்யப்பட்ட ஐபிஓ பங்குகளில் முதலீடு செய்வதும், வலுவான நிதி அறிக்கையைக் கொண்டிருக்கும் நிறுவன ஐபிஓ பங்குகளில் முதலீடு செய்வதும் நல்ல பலனைக் கொடுக்கும்.
கடந்த ஓரிரு ஆண்டுகளாக வெளியாகும் ஐபிஓக்களில் பெரும்பாலும் லாபம் அடைவது அதன் நிறுவனர்களும் ஆரம்பத்தில் அந்நிறுவனங்களில் முதலீடு செய்த முதலீட்டு நிறுவனங்களும்தானே தவிர சாமான்ய, சிறு முதலீட்டாளர்கள் இல்லை. இதில் சில விதிவிலக்குகள் இருக்கலாம், ஆனால் அதுவே விதி ஆகிவிடாது.
எனவே, எல்.ஜி., ஹூண்டாய் உள்ளிட்ட பிரபலமான நிறுவனங்களைத் தவிர சிறு நிறுவனங்களின் ஐபிஓ-க்களை வாங்குவதை தவிர்க்கலாம். ஒருவேளை அந்த சிறு நிறுவனத்தின் மீது நம்பிக்கை இருந்தால், பட்டியலிடப்பட்ட பிறகு அதன் செயல்பாடுகள், நிறுவனப் பங்குகளின் விலை மதிப்பீடு ஆகியவற்றை ஆராய்ந்து பின்னர் முதலீடு செய்யலாம். அல்லது ஏற்கெனவே சந்தையில் உள்ள நல்ல நிறுவன பங்குகளில் முதலீடு செய்யலாம்.
இப்போதைக்கு, ஐபிஓ கொண்டாட்டம் முழு வீச்சில் அரங்கேறி வருகிறது. பங்குச் சந்தையும், இந்திய நிறுவனங்களும் இந்த அலையில் சவாரி செய்ய தயாராக இருப்பதாகத் தெரிகிறது. எனவே, சிறு முதலீட்டாளர்கள் தாங்கள் கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதித்த பணத்தை முதலீடு செய்யும்போது அதிகக் கவனத்தோடும் எச்சரிக்கையோடும் இருந்தால் முதலுக்கு மோசம் இருக்காது. இல்லையெனில் நாளடைவில் பல மடங்கு நஷ்டத்தைச் சந்திக்க வேண்டி வரும்.
- sidvigh@gmail.com