வணிக வீதி

‘ஜாப் டைப்பிங்’,  ‘டிரான்ஸ்லேஷன்’ | சம்பளம் பத்தலையா? - 7

சோம வள்ளியப்பன்

‘மெடிக்கல் ட்ரான்ஸ்க்ரிப்சன்’,  ‘லீகல் டிரான்ஸ்பிரிப்ஷன்’  என்பதெல்லாம் எனக்கு சற்று அச்சமாகத்தான் இருக்கிறது. ஆனால், வேறு ஏதேனும் தட்டச்சு செய்யும் வேலை இருந்தால் சொல்லுங்கள். செய்து விடுவேன் என்பவர்களுக்காக, இணையம் வழியாக வீட்டிலிருந்தே செய்யக் கூடிய வேறு சில வேலைகளும் இருக்கின்றன.

கையால் எழுதப்பட்டவை அல்லது ஏற்கெனவே வேறு ஏதோ புத்தகத்திலோ, தகவல் அறிக்கையிலோ இருப்பவற்றை எல்லாம் ஒன்று சேர்த்து, புதிதாக தட்டச்சு செய்ய (ஜாப் டைப்பிங்) வேண்டும், ஒரு கோப்பு உருவாக்க வேண்டும் என்ற தேவை உள்ளவர்கள் இருக்கிறார்கள். சில நகல் எடுக்கும் (ஜெராக்ஸ்)  கடைகளில் தட்டச்சு செய்து கொடுப்பதற்கு ஆட்கள் உண்டு. பல இடங்களிலும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யக் கூடியவர்கள் இருப்பார்கள். தமிழில் தட்டச்சு செய்யக் கூடியவர்கள் கொஞ்சம் குறைவுதான். எல்லாக் கடைகளிலும் இருக்க மாட்டார்கள்.

          

தட்டச்சு செய்து கொடுக்க, பக்கத்துக்கு ரூ.20 முதல் ரூ.70 வரை வாங்குபவர்கள் இருக்கிறார்கள். சில கடைகளில் கொடுத்தால், உடனடியாக திரும்பக் கிடைக்குமா என்பது சந்தேகம். ‘`ஏற்கெனவே நிறைய இருக்கு சார்.  மூணு, நாலு நாள் ஆகும். போன் பண்ணுங்க” என்பார்கள்.

அதுவும் கையெழுத்து பிரதி பக்கங்கள் கூட என்றால் கேட்கவே வேண்டாம்.  சில சமயங்களில் நாம் போகும் நேரம் கடை பூட்டியிருக்கும். சாப்பிட போயிருப்பார்கள். தவறுகள் இருந்தால் மீண்டும் கொண்டுபோய்கொடுக்க, காத்திருக்க வேண்டும். அந்த சிரமங்கள் இல்லாமல், வாடிக்கையாளர்களுக்கு வசதியாக, பலரும் இப்போது வீட்டில் இருந்தபடியே தட்டச்சு செய்து கொடுக்கிறார்கள். 

சென்ற அத்தியாயத்தில் பார்த்தது போலதான். இணையம் வழி, வீட்டுக் கணினிக்குள்  தட்டச்சு செய்ய வேண்டிய ஆவணங்கள் வந்துவிடும்.  அல்லது கொரியரில் அனுப்புவார்கள். வீட்டில் நமக்கு தேவையான சில வேலைகளை செய்துகொண்டே,  அவ்வப்போது  மற்றும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வேலையை முடித்து அனுப்பலாம். பக்கத்துக்கு இவ்வளவு என்று காசு கேட்கலாம்.  புத்தகம் எழுதுபவர்கள் கையால் எழுதிக் கொடுத்ததை இவ்வாறு தட்டச்சு செய்வது தவிர, அவற்றை புத்தக வடிவில் ‘ஃபார்மட்’ செய்து கொடுப்பதற்கும் தனிக் காசு.

கல்லூரிகளில் முதுகலை மற்றும்  முனைவர் பட்ட ஆய்வுகளுக்கு எல்லாம்  200, 300, 400 பக்கங்களுக்கு சரியாக தட்டச்சு செய்து, அட்டவணைகளை பொருத்தி, படங்கள் வைத்து, பக்க  எண்கள் போட்டு, குறிப்பிட்ட  வகையில் ஆயத்தம் (ஃபார்மட்) செய்து கொடுக்க வேண்டும்.  இது கல்லூரிக்கு கல்லூரி,  பல்கலைக் கழகத்துக்கு பல்கலைக்கழகம்  வேறுபடும்.

இப்படியாக சில பல ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்துக்கு செய்து பழக்கப்பட்டவர்கள்,  அந்தக் கல்லூரியில் படிக்கும், ‘இந்த வேலையை செய்து தாருங்கள்’ என்று கேட்கும் மாணவர்களை விட, அந்த ’ப்ராஜெக்ட் ரிப்போர்ட்’ அல்லது ’பிஎச்டி தீசிஸ்’ எந்த முறையில் ஆயத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதைத்  தெரிந்து வைத்திருப்பார்கள்.

எழுதியவற்றில் பிழை திருத்தம் செய்து தருவது, தகுந்த படங்கள் வைத்துக் கொடுப்பது,  அட்டைப் படங்கள் தயாரித்துக் கொடுப்பது, போன்ற சேவைகளையும் இணையம் வழி செய்து கொடுப்பவர்கள் உண்டு. தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மட்டுமல்ல இன்னும் வெவ்வேறு மொழிகளில் இருந்து வெவ்வேறு மொழிகளுக்கு மாற்றம் செய்து கொடுக்கும் ‘டிரான்ஸ்லேஷன்’ வேலைகளும் இணையம் வழி நடக்கின்றன. அப்படிப்பட்ட வேலைகளுக்கு, ஒரு பக்கத்துக்கு இவ்வளவு, ஒரு வாக்கியத்துக்கு இவ்வளவு என்றல்ல, ஒவ்வொரு சொல்லுக்கும் இவ்வளவு என்று காசு வாங்குகிறார்கள்.

இதுபோன்ற வேலைகளுக்கு ஒரு வார்த்தைக்கு 50 காசு முதல் 1, 2 ரூபாய்கள் வாங்குபவர்கள் கூட உண்டு. நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் இந்த 650 சொற்கள் கொண்ட கட்டுரையை மொழிமாற்றம் செய்வதற்கு, ரூ.350 முதல் ரூ.700 வரை சம்பாதிக்கலாம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 

ஐந்தாவது அத்தியாயத்தில், ’பேபி சிட்டிங்’ மற்றும் ஆண், பெண் நர்சுகளுக்கு சொல்லப்பட்டது நினைவிருக்கலாம். பார்ப்பதற்கு எளிதாக தோன்றுகிற,  ஆனால், நன்கு சம்பாதிக்கிற வாய்ப்பு இருக்கிற  எல்லா வேலைகளிலுமே, வெளிப்படையாகத் தெரியாத ஏதோ சில குறிப்பிட்ட ‘வேலை திறன்கள்’ இருக்கும்.

இந்த வேலைகளிலும் அப்படி உண்டு. தவறே இல்லாமல் செய்வது.  தவறு வந்து விட்டால் உடனடியாக சரி செய்து கொடுப்பது.  குறிப்பிட்ட நேரத்துக்கு கொடுத்து விடுவது.  தான் செய்கிற வேலைக்காக பகிரப்படுகிற ஆவணங்களை, தகவல்களை வேறு எதற்கும் பயன்படுத்தாதது என்பன சில அடிப்படையான திறன்கள் மற்றும் தேவைகள். எந்த நேரத்தில் செய்யலாம் என்பதில்  சலுகை. 

நாள் ஒன்றுக்கு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செய்யலாம்,  வண்டி வாகனங்கள் ஏறி, போக்குவரத்து நெரிசலில் ஓடிப்போய், யாரோ ஒருவருடைய அலுவலகத்தில் அமர்ந்து செய்ய வேண்டாம். வீட்டில் இருந்தே செய்யலாம்.  வேலைக்கான ஊதியத்தை நாம் தீர்மானிக்கலாம்.  ஓய்வு அல்லது சொந்த வேலைகள் இருக்கிற நேரங்களில் எவருடைய அனுமதியும் கேட்காமல், புதிய வேலைகள் எடுத்துக்கொள்ளலாம் என்பது போல இப்படிப்பட்ட, வீட்டிலிருந்து செய்து கொடுக்கும் வேலைகளில் பல வசதிகள் உண்டு.

இவற்றை முழு நேரமாக செய்வதற்கும் வாய்ப்பு உண்டு. ‘நான் ஏதோ ஒரு வேலை செய்கிறேன். சம்பாத்தியம் போதவில்லை’ என்று நினைப்பவர்களும் கூடுதல் வருமானத்திற்காகச் செய்யலாம். இல்லை என்று நினைப்போர்க்கு இல்லை. இருக்கும் என்று தேடுவோருக்குக் கிடைக்கும். வேலைகளும், வருமானமும். ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்று நம் சங்க கால தமிழ்ப் புலவர் கணியன் பூங்குன்றனார் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பே, எல்லாம் நம் ஊர்தான் எனும் பொருள்பட பாடினார்.

அதற்கு ஏற்ப, இக்காலத்தில் நம் மக்கள், வெளியூர்களுக்கும் அயல் நாடுகளுக்கும் சென்று பணி செய்கிறார்கள். சம்பாதிக்கிறார்கள். இன்னும் ஒரு படி மேலே போய், நேரடியாகப் போய்த்தான் செய்ய வேண்டும் என்பதில்லை என்றாக்கி இருக்கிறது இணையம். வேறு எந்தச் சாலையையும் விட அதிக அளவில் இணையம் வழி வாய்ப்புகள் கிடைக்கின்றன. வாழ நினைத்தால் வாழலாம், செய்ய நினைத்தால் செய்யலாம்.

- writersomavalliappan@gmail.com

SCROLL FOR NEXT