வணிக வீதி

புதிய சியாரா டாடா அறிமுகம்

செய்திப்பிரிவு

டெல்கோ நிறுவனம் (இப்போது டாடா மோட்டார்ஸ்) கடந்த 1991-ம் ஆண்டு சியாரா எஸ்யுவி காரை அறிமுகம் செய்தது. இதுதான் உள்நாட்டில் தயாரான முதல் எஸ்யுவி கார். 1997-ல் இதன் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், புதிய சியாரா காரை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது.

இது விரைவில் விற்பனைக்கு வர உள்ளது. பழைய சியாரா காரை நினைவுபடுத்தும் வகையிலும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆகிய 2 வகைகளிலும் கிடைக்கும். மின்சார காரும் கிடைக்கும். இதன் ஆரம்ப விலை ரூ.17 லட்சமாகவும் அதிகபட்ச விலை ரூ.22 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

          

39,506 கிராண்ட் விதாரா வாபஸ்: மாருதி சுசூகி நிறுவனத்தின் கிராண்ட் விதாரா மாடலின் சில கார்களில் எரிபொருள் நிலை காட்டி மற்றும் எச்சரிக்கை விளக்கு சரியாக செயல்படவில்லை என புகார் எழுந்தது. 2024-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி முதல் 2025-ம் ஆண்டு ஏப்ரல் 29-ம் தேதி வரையில் தயாரிக்கப்பட்ட கார்களில் இந்தப் புகார் எழுந்தது.

இதையடுத்து, மாருதி வெளியிட்ட அறிக்கையில், “39,506 விதாரா மாடல் கார்கள் திரும்பப் பெறப்படும். பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்களின் பணிமனையில் ஒப்படைக்கப்படும் கார்களில் குறைபாடு கொண்ட பாகங்கள் இலவசமாக மாற்றித் தரப்படும்" என கூறப்பட்டுள்ளது.

30 லட்சம் டிமேட் கணக்கு: கடந்த ஓராண்டுக்கு முன்பு சரியத் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள், மே மாதத்துக்கு பிறகு படிப்படியாக மீண்டு வருகின்றன. இதனிடையே, கடந்த அக்டோபர் மாதத்தில் 10 நிறுவனங்கள் மொத்தம் ரூ.44,930 கோடிக்கு புதிய பங்குகளை வெளியிட்டன. இதனால் புதிய முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஈடுபடும் ஆர்வம் அதிகரித்து வருகிறது.

கடந்த 10 மாதங்களில் இல்லாத வகையில் அக்டோபர் மாதத்தில் 30 லட்சம் புதிய டிமேட் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இது செப்டம்பரில் தொடங்கப்பட்ட 24.6 லட்சத்தைவிட அதிகம். இதன்மூலம் ஒட்டுமொத்த டிமேட் கணக்குகளின் எண்ணிக்கை 21 கோடியை தாண்டிவிட்டது.

SCROLL FOR NEXT