களஞ்சியம்

இனிப்பு மாத்திரையான அறிவியல்! | பரண்

ஆதி வள்ளியப்பன்

தமிழில் அறிவியல் நூல்கள் என்றவுடன் 80, 90களில் வாசித்தவர்களுக்கு முதலில் நினைவுக்கு வருபவை ரஷ்ய அறிவியல் மொழிபெயர்ப்பு நூல்களே. அறிவியல் என்றால் கடினமானது, புரிந்துகொள்ள முடியாதது, சிக்கலானது என்றே நம்பப்பட்டுவந்தது. இப்போதும்கூட பாடநூலைத் தாண்டி அறிவியலை விரும்பிப் படிப்பவர்கள் நம்மிடையே குறைவு.

ஒரு பாடத்தை நமக்குப் பிடிக்கவைப்பது, அந்தப் பாடத்தை நடத்தும் ஆசிரியர் கையில் இருக்கிறது என்று சொல்வார்கள். அந்தப் பாடத்தை அவர் எப்படி அணுகுகிறார், மாணவர்களுக்கு எப்படி சுவாரசியமாக-பிடித்த மாதிரி சொல்லிக்கொடுக்கிறார் என்பதில் அடங்கியிருக்கிறது சூட்சுமம்.

          

இதுபோல் அறிவியல் உலகம் எவ்வளவு சுவாரசியமானது என்பது அதைச் சொல்லும் முறையில்தான் அடங்கியுள்ளது என்பதைப் புரியவைத்தவை ரஷ்ய அறிவியல் நூல்களே. இதற்கு எடுத்துக்காட்டாக ‘பொழுதுபோக்கு பௌதிகம்’, ‘விளையாட்டு கணிதம்’, ‘அனைவருக்குமான உடல் இயங்கியல்’, ‘நெஞ்சை ஈர்க்கும் வானவியல்’, ‘இயற்கை விஞ்ஞானியின் கதைகள்’, ‘வேதியியலைப் பற்றி 107 கதைகள்’ எனப் பல நூல்களைப் பட்டியலிடலாம்.

மைலோன் கன்ஸ்தன்தீனோவ்ஸ்கி எழுதி இரா.பாஸ்கரன் தமிழில் மொழிபெயர்த்த சிறார் அறிவியல் நூல் ‘தண்ணீர் ஏன் ஈரமாயுள்ளது?’ (1986). மாஸ்கோ நூல்களில் செவ்வியல் இலக்கியம், சிறுவர்-சாகச நூல்கள், அறிவியல், வரலாறு, அரசியல் உள்ளிட்டவற்றை வெளியிட்ட ராதுகா பதிப்பகத்தின் வெளியீடு இது. மிர் பதிப்பகம், முன்னேற்றப் பதிப்பகம் என ஒவ்வொரு மாஸ்கோ பதிப்பு நிறுவனமும் குறிப்பிட்ட வகை நூல்களை வெளியிட்டன. ரஷ்யாவிலிருந்து கப்பல் கப்பலாக வந்திறங்கிய இதுபோன்ற நூல்கள் மிகவும் சல்லிசான விலையில் நீண்ட காலத்துக்கு விற்கப்பட்டு வந்தன.

வேதியியலின் அடிப்படைகள்: நூலின் தலைப்பு தண்ணீரைப் பற்றியதாக இருந்தாலும் அடிப்படை வேதியியலை நூல் அறிமுகப் படுத்துகிறது. பொருள்கள் எதனால் ஆனவை? எல்லாப் பொருள்களையும் பகுத்துக்கொண்டே போனால் அணுக்கள் கிடைக்கும். தனித்தனி அணுக்கள் வெவ்வேறு வகைகளில் கூடினால் எப்படி வேறுவேறு தனிமங்கள் கிடைக்கின்றன? அவை எப்படி வெவ்வேறு சேர்மங்கள், கலவைகளாக உருவாகின்றன எனப் பல கேள்விகளுக்கு எளிமையான எடுத்துக்காட்டுகளுடன் விளக்கம் தருகிறது இந்த நூல்.

நாம் சாதாரணமாகப் பயன்படுத்தும் பென்சில் முனையும் கார்பன்தான், மதிப்புமிக்க வைரமும் கார்பன்தான். அதேபோல் ஆக்சிஜன், ஓசோன், நீர், கரியமில வாயு போன்றவற்றை எடுத்துக்காட்டுகளாகக் கொள்வதன் மூலம் எளிதில் தொடர்புபடுத்திக்கொள்ளும் வகையில் விளக்கங்கள் அமைந்துள்ளன. திட-திரவ-வாயு நிலைகள், ஒவ்வொரு நிலையிலும் அணுக்கள் எப்படி இருக்கின்றன, கொதிக்கவைத்தால்/குளிரவைத்தால் என்ன வினைகள் நிகழும் - இப்படி அடிப்படை வேதியியல் குறித்து நமக்கு எழும் அடிப்படைக் கேள்விகளுக்கு இந்த நூல் விடை அளிக்கிறது.

புதுமை வடிவமைப்பு: பொதுவாக அறிவியலைப் படங்கள் இல்லாமல், வெறும் எழுத்துகளில் வறட்டுத்தனமாகச் சொல்லியே பழக்கப்பட்டிருக்கிறோம். மாறாக ஏ4 அளவில் அமைந்திருக்கும் இந்த நூலோ முழு வண்ணப்புத்தகம். 4 பக்கம் எழுத்து, இரண்டு முழுப் பக்க ஓவியம் என்கிற வகையில்தான் இந்த நூல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இடை யிடையே விளக்கப்படங்களும் உள்ளன. இந்த நூலுக்கான ஓவியங்களை வரைந்தவர் அந்திரேய் பிளத்தோனவ். இந்தச் சிறிய நூல் சிறப்பாக வெளியாகியிருப்பதற்கு மூலநூல் ஆசிரியர்-மொழிபெயர்ப்பாளருடன், ஓவியர், வடிவமைப்பாளரும் முக்கியக் காரணம். இன்றைக்கு உள்ள எந்த நவீன வசதிகளும் இல்லாத காலத்தில் மாஸ்கோவில் உருவாக்கப்பட்ட இந்தத் தமிழ் நூல்கள், நூல் வடிவமைப்பில் பல்வேறு புதுமைகளைப் படைத்துள்ளன.

இப்படி அறிவியலை சுவாரசியமாகச் சொல்வதற்கு மாஸ்கோ நூல்கள் கையாண்ட வழிமுறை முன்னோடியானது. இந்த நூலைத் தவிர ‘தொலைநோக்கி சொல்லும் கதை’, ‘குழந்தைகளின் எதிர்காலம்’, ‘இரண்டாம் உலக யுத்தம்’ உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார் இரா.பாஸ்கரன். அதேநேரம், இவரைப் பற்றி அதிக விவரங்கள் கிடைக்கவில்லை.

அறிவியல் அடிப்படை விஷயங்களை இதுபோன்ற நூல்களைப் படித்துத்தான் தெரிந்துகொள்ள வேண்டுமா, இன்றைக்குத்தான் செயற்கை நுண்ணறிவே வந்துவிட்டதே எனச் சிலர் நினைக்கலாம். ஆரம்பத்திலேயே சொன்னதுதான். ஒரு விஷயத்தை-துறையை எப்படி சுவாரசியமாக, எளிமையாக, மனதில் தைப்பதுபோல் சொல்கிறோம் என்பது மிக முக்கியம். இதுபோன்று மனிதச் சிந்தனையில் உதித்த-கற்பனையில் ஊறிய நூல்கள் அதற்கு நிச்சயம் உதவும். அதுவே அறிவியல் மனப்பான்மையையும் அறிவியல் சிந்தனையையும் தலைமுறை தலைமுறையாக வளர்த்தெடுக்கும்.

- valliappan.k@hindutamil.co.in

SCROLL FOR NEXT