களஞ்சியம்

நிலவில் நீர், மண் | அறிவுக்குக் கொஞ்சம்...

செய்திப்பிரிவு

பூமியின் துணைக்கோளான நிலவில் என்னென்ன இருக்கிறது என்று அறிய உலக நாடுகள் முண்டியடிக்கும் நிலையில், அதன் துருவப்பகுதிகளில் பனிநீர், மண் இருப்பதற்கான சான்றுகள் கிடைத்திருப்பதாகக் கூறியிருக்கிறது இஸ்ரோ.

சந்திரயான்-2 சுற்றுக்கலம் மேம்படுத்தப்பட்ட ராடார் மூலமாக, 2019 முதல் ஐந்தாண்டு காலத்தில் பெறப்பட்ட 1,400 தரவுகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட வரைபடத்தில் இது தெரிய வந்துள்ளது.

          

நிலவின் இரு பக்கமிருந்தும் கிடைத்த இத்தரவுகள் நிலவில் நீர் இருப்பு, மேற்பரப்பின் கடினத்தன்மையில் மாறுபாடு, மண்ணின் அடர்த்தி, துளைத்தன்மை (porosity) ஆகியன குறித்த ஆய்வுகளை அடுத்தகட்டத்திற்குக் கொண்டுசெல்லும்.

பாய்ச்சலைத் தந்த கண்டுபிடிப்பாளர்! - முறுக்கப்பட்ட ஏணி போன்ற, இரட்டைச் சுருள் போன்ற முப்பரிமாணக் கட்டமைப்பை டிஎன்ஏ கொண்டுள்ளது. உயிரியல் துறையில் பெரும்பாய்ச்சலை ஏற்படுத்திய இக்கண்டறிதலை ஜேம்ஸ் கிரிக் உடன் இணைந்து உலகுக்கு அறிவித்தவர் ஜேம்ஸ் வாட்சன்.

மூலக்கூறு அமைப்பு பற்றி ரோசலிண்ட் பிராங்க்ளின், மௌரீஸ் வில்கின்ஸ் உருவாக்கிய எக்ஸ்ரே விலகல் படங்களை அடிப்படையாகக் கொண்ட இவர்களது ஆய்வுக்கு 1962இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதன் பின்னர் மரபியல் துறை ஆராய்ச்சியில் வாட்சன் ஈடுபட்டு வந்தார்.

கடந்த 6ஆம் தேதியன்று தனது 97ஆவது வயதில் காலமானார். தான் நிறுவிய கோல்டு ஸ்பிரிங் ஹார்பர் ஆய்வகமே கதி என்று இரண்டாண்டுகளுக்கு முன்புவரை இருந்த வாட்சனின் அர்ப்பணிப்பு இளம் அறிவியலாளர்களுக்கு ஒரு முன்னுதாரணம்!

இமய நிலநடுக்கப் பின்னணி: இமயமலைப் பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதற்கான காரணம் சமீபத்திய புவியியல் ஆய்வொன்றில் கண்டறியப்பட்டிருக்கிறது. இமயமலை உருவாவதற்குக் காரணமான இந்தியத் தட்டு அம்மலைக்கு அடியில் சிதைந்து வருவது முப்பரிமாண முறையில் அமைந்த நிலநடுக்கத் தரவுகளில் இருந்து தெரிய வந்திருக்கிறது.

திபெத்தின் தென்பகுதியிலுள்ள யடோங் குலு, கோனா சங்க்ரி இடையே இது நிகழ்வதும், இந்தியத் தட்டின் கீழ்ப்பகுதியான ‘லிதோஸ்பெரிக் மேன்டில்’ மேல்பகுதியில் இருந்து அகன்று பூமிக்குள் புதையுண்டு வருவதும் நிரூபணமாகியுள்ளது. நிலநடுக்கம் அதிகமாவதற்கான காரணம் மட்டுமல்லாமல், பூமியின் அடிப்பரப்பில் பல்லாண்டுகளாக நிகழ்ந்துவரும் கண்டங் களுக்கு இடையேயான நகர்வினால் மலைகள் எப்படி உருவாகின்றன என்பதையும் இது தெளிவுபடுத்துவதாகச் சொல்கின்றனர் புவியியலாளர்கள்.

வெப்பமும் தீவிரமடையும் புயலும்! - அட்லாண்டிக் கடல்பகுதியிலுள்ள நாடுகளுக்கு இதுவரையில்லாத அளவுக்குப் பயத்தைக் காட்டியிருக்கிறது ‘மெலிசா’. 5ஆம் நிலைக் கடும்புயல் வகையைச் சார்ந்த இது, ஜமைக்கா நாட்டில் கரையைக் கடந்தபோது மணிக்கு 296 கி.மீ. வேகத்தில் சுழன்றாடியிருக்கிறது.

புயலின் கண் பகுதியில் மாற்றமின்மை, மையப்பகுதி நீரின் அதிவெப்பநிலையில் உயர்வு போன்றவற்றால், இவ்வகைப் புயல்கள் வழக்கமாக அடையும் உடனடித் தீவிர நிலையை இன்னும் வேகமாக அடைந்திருக்கிறது மெலிசா.

கடல்நீரின் ஆண்டு சராசரி வெப்பநிலையைவிட, புயலின்போது 2 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்ததால், அதன் வேகம் தொடர்ந்து அதிகரித்ததாகச் சொல்கின்றனர் வானிலையாளர்கள். கடந்த 125 ஆண்டுகளில் உருவான கடும்புயல்களின் மொத்த எண்ணிக்கையில் 29% கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுவது, புவி வெப்பமாதலின் அதிபயங்கர விளைவைச் சுட்டிக்காட்டுகிறது.

SCROLL FOR NEXT