வீட்டில் இருக்கும் பெண் குழந்தைகளும் ஆண் குழந்தைகளும் ஆரோக்கியமாக வளர வேண்டும் என்றால், அந்த வீட்டில் இருக்கிற பெரியவர்கள்தான் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன் வீடுகளில் மனைவியைக் கணவன் ‘டி’ போட்டு அழைப்பது இயல்பு. ஆனால், என் அப்பா என் அம்மாவை ராஜலட்சுமி என்று பெயர் சொல்லிக்கூடக் கூப்பிட மாட்டார். மேடம் என்றுதான் கூப்பிடுவார். “மேடம் இங்கே வா, மேடம் காபி கொண்டு வா” என்பார். கோபம் வந்தாலும், “என்ன மேடம் இப்படிப் பண்ணிவிட்டாய்?” என்று கேட்பார். ஆனால், மேடம் என்கிற மரியாதை குறையாது. அப்பா, அம்மாவை மதிக்கிறார் என்கிற உணர்வு வர வர சகோதரன், சகோதரியை மதிப்பான். அந்த வீட்டில் இருக்கிற பெண்கள் எல்லாம் மதிக்கப்பட வேண்டும் என்றால், வீட்டில் இருக்கிற பெரியவர்கள் அனைவரும் பெண்களை மரியாதையுடன் நடத்த வேண்டும்.
வீட்டில் மரியாதையுடன் கூடிய கண்ணோட்டம் இருந்தால்தான் அந்த வீட்டுப் பெண் பருவம் அடையும்போது கேலியோ, மட்டமான உணர்வோ இருக்காது. பருவவயதில் குழந்தைகளின் மனதுக்குள் இருக்கிற குழப்பங்கள், ஆசாபாசங்களைப் புரிந்துகொள்ளப் பெற்றோர் உதவவேண்டும். இணையமும் யூடியூபும் உதவுவதைவிட, அரையும்குறையுமாகத் தெரிந்துகொண்ட நண்பர்கள் உதவுவதைவிடப் பெற்றோர் நிச்சயமாக உதவ முடியும்.
சேர்ந்தே வளர்வோம்: நான் பெண்கள் பள்ளியிலும் பெண்கள் கல்லூரியிலும் படித்தேன். ஆனால், அந்தக் காலம் வேறு, இந்தக் காலம் வேறு. ஆணையும் பெண்ணையும் சிறு வயதில் இருந்தே பிரித்துவைப்பதால் ஆண் என்றால் சிலிர்ப்பு, பெண் என்றால் புளகாங்கிதம் என்கிற நினைப்பு வளரும். எந்த வீட்டில் அப்பாவும் அம்மாவும் நல்ல தோழர்களாக, நல்ல முன்னுதாரணங்களோடு இருக்கிறார்களோ அந்த வீட்டில் வளரும் ஆண்பிள்ளை, நிச்சயமாகப் பெண் குழந்தைகளை மரியாதையோடு நடத்துவான். சிறு வயதில் இருந்தே ஆணும் பெண்ணும் ஒன்றாகச் சேர்ந்து வளரும்போது வேண்டாத கிளர்ச்சி, தேவையில்லாத அசட்டுத்தனத்தைத் தவிர்க்க முடியும். இருவரும் பரஸ்பர, ஆரோக்கியமான நட்புடன் வளர முடியும்.
இன்றைய குழந்தைகள் நமக்குத் தெரியாத பல விஷயங்களை ஊடகம் மூலமாகத் தெரிந்துகொள்கிறார்கள். நான் பள்ளியில் படித்தபோது நடந்த விஷயத்தைச் சொல்கிறேன். இந்தச் சம்பவத்தைச் சொல்கிறேன் என்பதற்காக எல்லாருமே மோசம் என்று சொல்லவரவில்லை. விதிவிலக்குகள் எல்லா இடங்களிலும் உண்டு. ஆனாலும், இந்த விஷயத்தை மனதில் வைத்துக்கொள்வது உங்களுக்கு உதவும் என்பதற்காகச் சொல்கிறேன்.
ஆர்வத்தைக் கட்டுப்படுத்துவோம்: எங்களுடன் படித்த ஒரு பெண்ணின் வீட்டில் ஏகக் கட்டுப்பாடு. யாரையும் தலைநிமிர்ந்து பார்க்கக் கூடாது, ஆண்கள் வாடையே இருக்கக் கூடாது. காரில் வந்துவிட்டு காரில்தான் வீடு திரும்புவாள். இப்படி இருக்கிற சூழலில் பள்ளி இறுதியாண்டு முடிப்பதற்கு முன்னால் கார் டிரைவரோடு சென்றுவிட்டாள். இதை எதற்குச் சொல்கிறேன் என்றால், ஒன்றை மூடி வைக்கிறபோது அதன் மீதான ஆர்வம் அதிகரிக்கும். ஒன்று கூடாது என்று விலக்க விலக்க அது என்னவென்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் குழந்தைகளுக்கு வரும். ‘Curiosity kills the cat’ என்பார்கள். ஐந்தறிவு உள்ள விலங்குக்கே அந்த நிலை என்றால் ஆறறிவு இருக்கிற நமக்கு சிலவற்றின் மீது ஆர்வம் தோன்றுவது இயல்புதானே. அந்த மாதிரி ஆர்வம் வரும்போது அது சரியா, தவறா எனக் குழந்தைகளுக்கு நாம்தான் விளக்க வேண்டும்.
எனக்குத் தெரிந்த ஒரு அம்மா தன் இரண்டு மகன்களுக்கு 12, 13 வயது ஆனபோது சிகரெட் பாக்கெட்டை அவர்களையே வாங்கிவரச் செய்து, தனக்கு எதிரிலேயே சிகரெட்டைப் பிடிக்கவைத்தார். சிகரெட் பிடிக்கத் தெரியாமல் இருமி, தும்மி அந்தப் பிள்ளைகள் அவஸ்தைபட்டபோது, “தெரிந்துகொள்ளுங்கள். இதுதான் சிகரெட் பிடிப்பதால் வரும் அனுபவம்” என்று சொன்னதோடு சிகரெட் பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் என்னென்ன என்று ரொம்ப அழகாக விளக்கிச் சொன்னார். வளர்ந்த பிறகு அந்தக் குழந்தைகளில் ஒருவர்கூடப் புகைப்பழக்கத்துக்கு அடிமையாகவில்லை. ‘அம்மா எனக்குச் சரியான விஷயத்தைக் கற்றுதந்துவிட்டார்’ என்கிற நம்பிக்கை. இதேபோல் பெண் குழந்தைகளிடமும் ஆண் நண்பர்கள் என்றால் என்ன, உணர்வுகள் என்றால் என்ன என்பதைப் புரியவைக்க வேண்டும்.
பதின்பருவத்தில் பலருக்கும் ‘நான் அழகாக இருக்கிறேனா, என் நிறம் சிவப்பாக இருக்கிறதா, நல்ல உடல்கட்டுடன் இருக்கிறேனா’ என்று நிறைய கேள்விகள் இருக்கும். ‘எனக்கு முடி வளரவில்லையே, முகமெல்லாம் பருவாக இருக்கிறதே’ என்கிற கவலை தோன்றும். இவற்றையெல்லாம் வீட்டில் பகிர்ந்துகொள்ள ஆள் இல்லாதபோது நண்பர்களோடு பகிர்ந்துகொள்வார்கள். இணையத்தில் பலவற்றைப் பார்த்துத் தங்களது ஏக்கங்களை வளர்த்துக்கொள்வார்கள் அல்லது தணித்துக்கொள்வார்கள். இதற்குப் பெற்றோர் வாய்ப்பு அளிக்காமல் தங்கள் குழந்தைகளுக்கு அனைத்தையும் எடுத்துச்சொல்ல வேண்டுமே தவிர, “சும்மா இரு, எல்லாம் வயதானால் சரியாகிவிடும்” என்று பொறுப்பைத் தட்டிக்கழிக்கக் கூடாது.
இரட்டைச் சுமை: அந்தக் காலத்தில், ‘படித்த பெண் திமிராக இருப்பாள், வேலைக்குச் செல்லும் பெண் திமிராக இருப்பாள்’ என்கிற கருத்து இருந்தது. இன்றைக்கு இதுபோன்ற பிற்போக்குத்தனமான எண்ணங்கள் குறைந்துவிட்டன. வேலைக்குச் செல்லும் பெண்கள் இன்றைக்கு ஒரு குடும்பத்தின் சொத்து போல ஆகிவிட்டனர். வேலைக்குச் செல்லும் திருமணமான பெண்கள் பலர், “ஏன் வேலைக்குச் செல்கிறோம் என்று இருக்கிறது. வீட்டிலும் வேலைசெய்து, வெளியிலும் வேலை செய்து இரட்டைச் சுமையைச் சுமக்கிறோம். காலையில் அழுகிற குழந்தையை அடித்து, சாப்பிடாமல் பள்ளிக்கு அனுப்பிவைத்துவிட்டு, முகத்தைத் தூக்கி வைத்திருக்கிற மாமியாரைச் சமாளித்துவிட்டு, செய்தித்தாளும் கையுமாக அமர்ந்திருக்கும் கணவருக்கும் மாமனாருக்கும் உணவு பரிமாறிவிட்டு இருக்கிற வேலைகளை அவதிஅவதியாக முடித்துவிட்டு ஒருவாய்கூடச் சாப்பிடாமல் அலுவலகம் சென்றால், காலையில் குழந்தை அழுதுகொண்டே பள்ளிக்குப் போன கவலையில் வேலையில் கவனம் செல்லாமல் அங்கேயும் திட்டுவாங்கி, மாலை வீட்டுக்குத் திரும்பும் வழியில் மறுநாள் சமையலுக்குக் காய்கறி வாங்கிக்கொண்டு, பேருந்து, ரயில் என்று பயணித்துக் களைத்துப்போய் வரும்போது வீட்டிலும் எங்களைச் சரியாகப் புரிந்துகொள்ளாதபோது நாங்கள் என்ன செய்வது? ஏன் இந்த இரட்டைச் சுமை?” என்று கேட்கிறார்கள். இவர்களின் கேள்விக்கு என்ன பதில்?
(சிந்திப்போம்)