பெண் இன்று

மரங்களின் தாய் | அஞ்சலி

செய்திப்பிரிவு

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சாலுமரத திம்மக்கா 114 வயதில் நவம்பர் 14 அன்று மறைந்தார். விடுதலைக்கு முந்தைய மைசூருவில் பிறந்த திம்மக்கா, சிக்கய்யாவை மணந்துகொண்டு ராம்நகரில் குடியேறினார். குழந்தைகள் இல்லாததால் தன் கணவரோடு சேர்ந்து நெடுஞ்சாலையின் இருமருங்கிலும் 350க்கு மேற்பட்ட ஆலமரங்களை நட்டு வளர்த்தார். அதனால், ‘மரங்களின் வரிசை’ எனப் பொருள்தரும் ‘சாலுமரத’ என்கிற பட்டப்பெயர் திம்மக்காவின் பெயரோடு ஒட்டிக்கொண்டது.

2019இல் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக இந்த மரங்கள் வெட்டப்படவிருந்த நிலையில் அன்றைய கர்நாடக முதல்வர் குமாரசாமியைச் சந்தித்து, மரங்களை வெட்டக் கூடாது எனக் கோரிக்கை வைத்தார். திம்மக்காவின் அயராத செயல்பாட்டால் 70 ஆண்டுகால மரங்கள் வெட்டப்படாமல் காக்கப்பட்டன. தற்போது இவற்றின் மதிப்பு மட்டுமே ஒன்றரைக் கோடி ரூபாயைத் தாண்டும். இந்த நெடுஞ்சாலை ஆலமரங்களின் பராமரிப்புப் பணியை கர்நாடக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

          

முறையான கல்வி பெறாத திம்மக்கா, கல்குவாரியில் பணியாற்றியவர். மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான மரங்களை நட்டிருக்கிறார். 1991இல் சிக்கய்யா இறந்துவிட, அதற்குப் பிறகும் திம்மக்கா தன் சுற்றுசூழல் பணிகளைத் தொடர்ந்தார். காடு வளர்ப்புத் திட்டங்களில் இணைந்து பணியாற்றினார். தன் கிராமத்தில் மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் அமைக்கப்படக் காரணமாக இருந்தார். இப்பணிகளைப் பாராட்டி மத்திய அரசு திம்மக்காவுக்கு 2019இல் பத்ம விருது வழங்கிக் கௌரவித்தது.

SCROLL FOR NEXT