கோவையைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவிகள் மித்ரா, ஸ்ரீதேவி இருவரும் நேபாளத்தில் நடைபெற்ற இந்தோ - நேபாளம் சர்வதேச சிலம்பப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளனர். இருவருமே தேசிய, சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்ற அனுபவம் மிக்கவர்கள்.
ஏழு வயது முதல் சிலம்பம் கற்றுவரும் மித்ரா, மற்ற விளையாட்டுகளைவிடச் சிலம்பத்தில் தன்னுடைய தனித்திறமையைக் காட்ட முடியும் என்பதற்காக இதைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அப்பா மணிவண்ணன், அம்மா சுமித்ரா இருவரும் தங்கள் மகளின் விருப்பத்துக்குத் துணைநிற்க, பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுவருகிறார் மித்ரா. கண்ணைக் கட்டிக்கொண்டு ஒன்றரை மணிநேரம் சிலம்பம் சுழற்றிய மகளின் உலகச் சாதனையைப் பெருமையுடன் குறிப்பிடுகிறார் மித்ராவின் தந்தை மணிவண்ணன். சிலம்பம் சுழற்றிய கைகள் வீணையிலும் விளையாடுகின்றன.
கூடைப்பந்து, கால்பந்து போன்று அணியாக விளையாடுவதைவிடத் தனியாக விளையாடுவது ஸ்ரீதேவியின் விருப்பம். அதனால்தான் சிலம் பத்தைத் தேர்ந்தெடுத் தார். பாலசுப்பிரமணியன் - ராதா தம்பதியின் மகளான ஸ்ரீதேவி, 2024இல் மத்தியப்பிரதேசத்தில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் பங்கேற்றுப் பதக்கம் வென்றிருக்கிறார். மாநில, தேசிய, சர்வதேச அளவில் பல போட்டிகளில் பங்கேற்றுவரும் இருவரும் கோவை புனித காணிக்கை மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள். படிப்புக்கு நடுவில் விளையாட்டுக்கும் நேரம் ஒதுக்கி, பாரதியின் வரிகளைக் கடைப்பிடித்து வருகின்றனர் இந்த வீராங்கனைகள்.