பெண் இன்று

அசாதாரணக் கலைவாழ்வு! | பெண் கோணம்

Guest Author

பெண்களின் அரசியல் பங்களிப்பை, பொதுவெளிச் செயல்பாடுகளைப் பெரிய அளவில் நிகழ்த்திக் காட்டியதில் காந்திக்கு முக்கியப் பங்கு உண்டு. காந்தியோடு இணைந்து பணியாற்றிய பெண்களின் அனுபவங்களை எழுதலாம் என்கிற யோசனையோடு, காந்திய அகராதி என நான் விரும்பி வாசிக்கும் ‘The detailed chronology of Mahatma Gandhi’ (தொகுப்பு: C.B.Dalal) புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருந்தேன். அதில் 1940 வருட நிகழ்ச்சி நிரலில் ஜூலை மாதத்திற்கான அடிக்குறிப்பில் தலால் ஆர்வமூட்டும் ஒரு குறிப்பைத் தந்திருந்தார். கிளேர் ஷெரிடன் வடிவமைத்து அளித்திருந்த காந்தியின் மார்பளவுச் சிலை பம்பாயின் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் மியூசியத்திற்கு அளிக்கப்பட்டது என அந்த அடிக்குறிப்பு கூறியது. ஆர்வத்துடன் கிளேர் ஷெரிடன் குறித்த குறிப்புகளைத் தேடத் தொடங்கினேன்.

கிளேர் ஷெரிடன் (1885-1970), ஒரு வகையில் வின்ஸ்டன் சர்ச்சிலின் உறவினர். மிகச் சிறந்த சிற்பி. உலகின் பல்வேறு நாடுகளுக்குப் பயணித்து அன்றைய காலக்கட்டத்து முக்கிய வரலாற்று ஆளுமைகளைச் சிலையாக வடித்தவர். பல நாடுகளுக்கும் பயணித்து சிலைகள் வடிவமைத்த தன் அனுபவங்களை அவர் புத்தகங்கள் ஆக்கியிருக்கிறார். அவருடைய பல புத்தகங்களில் ஒன்றான ‘To the four winds’ என்கிற புத்தகத்தின் ஓர் அத்தியாயம், காந்தியை கிளேர் சந்தித்ததையும் அவரது சிலை வடித்த அனுபவத்தையும் விவரிக்கிறது. மிக ஆர்வமூட்டும் பகுதி அது.

          

முதல் சந்திப்பு: பல ஆளுமைகளின் மார்பளவுச் சிலைகளை வடிவமைத்த கிளேருக்கு காந்தியின் சிலையை வடிவமைக்க வேண்டும் என்கிற பேரவா இருந்தது. அவருடைய உறவினர் ஒருவர் அப்போது சரோஜினி நாயுடுவின் நட்புப் பட்டியலில் இருந்தார். அவர் மூலம் முயலலாம் என அவர் யோசனை கூறினார். சரோஜினி நாயுடுவுக்குக் கடிதம் எழுதியபோது, அவர் ஏற்கெனவே கிளேரின் நூல் ஒன்றினைச் சிறையில் இருக்கும்போது வாசித்திருந்தார். சரோஜினிக்கும் கிளேரைச் சந்திக்கும் ஆர்வம் இருந்தது. இந்தச் சந்திப்பு நிகழ்வதற்குத் தோதாக, லண்டன் வட்டமேஜை மாநாட்டுக்குக் காந்தி செல்லவிருந்தார். லண்டனில் அவரைச் சந்தித்து, சிலை வடிக்க நேரம் கேட்டிருந்தார் கிளேர்.

1931ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் தேதி. லீசெஸ்டர் ஸ்கொயரில் இருந்த விக்டரி ஹாலில், ஒரு கூட்டம் ஏற்பாடாகியிருந்தது. லண்டன் நகரத்துப் பெருமனிதர்கள் பலரும் அங்கு திரண்டிருந்தனர். அங்குதான் கிளேர் முதன்முதலில் காந்தியைப் பார்க்கிறார். அவருடைய அரையாடையும் பொக்கை வாயும் வெளிப்படையாகத் துருத்தி நின்ற காதுகளும் மொட்டைத் தலையும் கறுத்த கால்களையும் மீறி காந்தியின் ஈர்க்கக்கூடிய அம்சம் மற்ற எதையும் கவனிக்கவிடவில்லை என கிளேர் எழுதியிருக்கிறார்.

விட்டுக்கொடுக்கும் மாண்பு: வட்ட மேஜை மாநாட்டு நிகழ்வுகள் தவிர, ஏராளமான நிகழ்வுகள் ஒருங்கிணைக்கப் பட்டிருந்தன என்பதால் காந்தியைச் சந்திப்பது என்பது சற்றுச் சிரமமாக இருந்திருக்கிறது. Jo Davidson (1885-1952) என்கிற சிலைவடிப் பாளருக்கும் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அவர் பாரீஸிலிருந்து இதற்காக வந்திருந்தார். அக்டோபர் 17ஆம் தேதி காலை நைட்பிரிட்ஜ் என்கிற இடத்தில் இருவரையும் ஒருசேரச் சந்தித்த காந்தி, நகைச்சுவையைக் கேட்டதைப் போல் மனம் விட்டுச் சிரித்தார். எனினும், கிளேர் தன் களிமண் பொருள்களைத் தள்ளி வைத்துவிட்டுத் தான் ஜோவுக்கு வழிவிட்டுவிட்டதாகக் கூறினார். அதற்கு காந்தி சிரித்துக்கொண்டே, “ஒரு பெண் ஒரு ஆணுக்கு எப்போதுமே விட்டுத்தர மாட்டார் என நினைத்திருந்தேன்” என்று சொல்லியிருக்கிறார்.

மீண்டும் அக்டோபர் இருபதாம் தேதி, கிளேருக்குச் சிலை வடிக்க நேரம் ஒதுக்கப்பட்டது. தான் பணிபுரிந்த விதத்தையும் அங்கு நடந்த நிகழ்வுகளையும் கிளேர் தமது புத்தகத்தில் வெகு சுவாரசியமாகப் பதிவுசெய்துள்ளார். அறிமுகப்படுத்தப்படும் முன் காந்தி, “நீங்கள் மிஸ் டேவிட்ஸன்னா?” எனக் கிளேரைக் கேட்கிறார். அவர், தான் கிளேர் ஷெரிடன் எனக் கூறவும் காந்தி சிரித்தபடியே “ஓ! அப்படியானால் நீங்கள் வின்ஸ்டன் சர்ச்சிலின் உறவினரல்லவா? அதனால் நீங்கள் இங்கு வரவேற்கப்படாமல் போகலாம் என நினைத்திருப்பீர்கள். ஆனால், உங்கள் வருகை வரவேற்கப்படுகிறது. அவர் என்னைச் சந்திக்க விரும்பவில்லை. அதற்குப் பதிலாக நீங்கள் என்னைச் சந்தித்ததை அவரிடம் சென்று சொல்லுங்கள். நான் அவ்வளவு மோசமானவன் அல்ல” எனக் கூறி வரவேற்றார்.

காந்தி, தமது ராட்டையில் நூல் நூற்றபடியே இருக்கச் சற்று தள்ளி அமர்ந்து கிளேர் சிலை வடிவமைப்புப் பணியைச் செய்தார். தொடர்ந்து பார்வையாளர்கள் சாரிசாரியாக வந்தவண்ணமே இருந்ததையும் அவர் களோடு காந்தி நடத்திய உரையாடல்களையும்கூடப் பதிவுசெய்துள்ளார். ஆங்கிலிகன் திருச்சபையைச் சேர்ந்த மதத்தலைவர் (canon) ஒருவர் வந்தபோது, ஆச்சரியகரமாக காந்தி தன் நூற்பை நிறுத்திவிட்டு எழுந்து நின்று அவரை வரவேற்றுச் சில நிமிடங்கள் உரையாடியதையும் கிளேர் பதிவுசெய்துள்ளார்.

வடிவமைத்த சிலையை அன்று இரவு சரிபார்த்தபோது அது பீடத்திலிருந்து தவறி விழுந்துவிட்டது. கிளேருக்கு அழுகை தாள முடியவில்லை. நினைவில் நின்ற காந்தியின் முக அடையாளங்களை வைத்துச் சிலையைச் செப்பனிட்டு முடித்தார். எனினும் மனதுக்கு உகந்த திருப்தி அதில் வரவில்லை. மன்னிப்புக் கோரி, மீண்டும் சில மணி நேரங்களைக் கோரிப் பெற்று, காந்தியின் சிலையை வடிவமைத்து முடித்தார். காந்தி நடத்தும் பிரார்த்தனைக் கூட்டங்களுக்கு வரலாமா என வினவிய அவரை, காந்தி தாராளமாக வரலாம் என வரவேற்றார். காந்தியுடன் உதவியாளராக வந்திருந்த மீரா பென், விடியற்காலையில் நடக்கும் பிரார்த்தனைக் கூட்டத்திற்கு வந்தால் காந்தியோடு நடை செல்லவும் வாய்ப்புக் கிடைக்கும் என்றார்.

சமரசமற்ற கலையார்வம்: முதல் நாள் மாலையே அந்த இடத்திற்கு வந்துவிட்ட கிளேர், தனக்கு ஒதுக்கப்பட்ட புறாக்கூண்டு போன்ற சிறு அறையில் சற்று கண்ணயர்ந்தார். நவம்பர் மாத லண்டன் குளிரில் விடியற்காலை நான்கு மணிக்குப் பிரார்த்தனைக் கூட்டம். சில நிமிடங்கள் நீடித்த அப்பிரார்த்தனைக் கூட்டத்துக்குப் பின், மேலே போர்த்திய கதர் சால்வையுடன் காந்தி காலை நடைக்குக் கிளம்பினார். அவரைப் பின் தொடர நியமிக்கப்பட்டிருந்த இரண்டு உளவாளிகளும் உடனே எழுந்து பின்தொடர்ந்தனர். அவர்களைப் பார்த்து காலை முகமன் கூறிய காந்தி, இந்த வேளையில் அவர்களுக்குத் தொந்தரவு தருவதற்கு மன்னிக்க வேண்டும் எனப் புன்னகையுடன் கூறினார். காந்தியின் நடை கிட்டத்தட்ட குறுஓட்டம் என்றார் கிளேர். அவரால் பின்தொடர்ந்து நடக்க முடியவில்லை. எனினும் சிறு பாலம் ஒன்றைக் கடக்கும்போது அருகில் நடக்கும் வாய்ப்புக் கிட்டுகையில் சில வாக்கியங்கள் உரையாடினார்.

கிளேர் வடிவமைத்த காந்தியின் மார்பளவுச் சிலை, பம்பாய் அருங்காட்சியகத்தில் 2012 வாக்கில் மீண்டும் வெளிக்கொணரப்பட்டது. 1940இல் இந்தச் சிலை அருங்காட்சியகத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறது. (இது குறித்து காந்தி அன்றைய வைஸ்ராய் லார்டு லிங்லித்கோவுக்கு எழுதிய கடிதம் மகாத்மா காந்தி தொகுப்பு நூல்களில் தொகுதி 72இல் 147ஆம் பக்கத்தில் உள்ளது). லண்டன் வட்ட மேஜை மாநாட்டுக்குச் சென்றிருந்த தர்பங்காவின் மகாராஜா இதனை அன்றைய பம்பாயின் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் அருங்காட்சியகத்துக்கு அன்பளிப்பாக அளித்திருக்கிறார். கிளேர் ஷெரிடனையும் நாம் காந்தியின் வாயிலாக அறிந்து கொள்ள நேர்ந்தது மகிழ்வூட்டுவது. அசாதாரணமான கலை வாழ்வு அவருடையது.

சித்ரா பாலசுப்பிரமணியன், காந்திய ஆய்வாளர்.
chithra.ananya@gmail.com

SCROLL FOR NEXT