பெண் இன்று

ஒழுக்கத்தின் அளவுகோல் ஆடையா?

மலர்வதி

நாகர்கோவிலுக்குப் போய்க்கொண்டிருந்தபோது, பேருந்தில் அருகே பயணித்த நடுத்தர வயதுப் பெண் ஒருவர் கைபேசியில் அவரோடு எதிர்முனையில் பேசுபவரோடு அடிக்கடி ‘மேல் சீலையைப் போட்டுட்டு வெளியே போ’ என்று சொல்லிக்கொண்டேயிருந்தார். பேசுவதைப் பார்க்கையில் மகளாக இருக்கலாம் என்றே தோன்றியது. கைபேசியை வைக்கும்போதும் பதற்றமான முகபாவத்தில் ‘மேல் சீலையைப் போட்டுட்டுப் போ’ என்று சொல்லிவைத்தார். இந்த வார்த்தைகளின் வலியுறுத்தலில் பாதுகாப்பற்ற ஒரு சமூகத்தின் அச்சுறுத்தல் இல்லாமல் இல்லை.

பத்துப் பதினைந்து வயதிலே, காதில் விழும் ஒரு சொல்லாடல் இதுவாக இருப்பதை நானும் ஓர்மித்தேன் (நினைத்தேன்). வீட்டைவிட்டு வெளியே கிளம்பும் போதெல்லாம் மறக்காமல் ஒரு சீலைத் துண்டை, ‘சும்மா தோளுல போடு’ என்று தந்துவிடுவார்கள். அந்தச் சீலையின் முனை சிறிது சறுவினாலும், ‘நீ என்ன ஒழுக்கங்கெட்ட வாழ்வு வாழுற?’ என்று முகம் பார்த்துச் சொன்னவர்கள் அதிகம். ஆலயத்திற்குப் போகையில் தலையின் முக்காடு ஒழுங்காக அமையவில்லையென்றால் அதையும் ஒழுக்க மீறலாகவே எழுதினார்கள்.

          

சிறு வயதில் எங்கள் வீட்டருகே வசித்த மனநலம் குன்றிய பெண் ஒருவருக்கு இயல்பிலே இரண்டு மார்புகளும் இல்லாமல் இருந்தது. வெறும் ரவிக்கை மட்டுமே ஒட்டிப்போய்க் கிடக்கும். இதற்காக அந்தப் பெண் வழிப்போக்கு மனிதர்களால் உடல் வதை பெறாமல் இருந்தாரா? இல்லையே. ஏதோ ஓர் இருட்டில் அவளும் வதைக்கு ஆளாகத்தான் செய்தாள். இங்கே தேவை உடலமைப்பன்று; பெண் என்கிற வாசனையே போதுமானதாக இருந்தது சில அறிவற்றவர்களுக்கு.

இங்கே உடலமைப்பு என்பது ஏதோ ஒரு கடையில் போய் வாங்கிப் பொருத்தியது இல்லை. அந்தச் சதைத்திரளுக்குள் ஒரு பெண் மறைத்துப் போட்டிருக்கிறாளே ஒரு மனசு, அதை யாரேனும் வாசித்திருக்க முடியுமா? இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு போகும் பெண்ணை வழிமறித்து, பெரும் பதற்றத்துடன் ‘வண்டியை நிறுத்து’ என முன்வந்து நின்றார் பெண் ஒருவர். ‘ஷால் எப்பிடிப் போட்டிருக்க? செம்மையா போட்டுட்டுப் போ’ என ஏதோ உயிர் போவதுபோல் அலறினார். ஜங்ஷனில் மருந்து வாங்க சாலையைக் கடக்கும்போது டிராஃபிக் போலீஸ் பெண் ஒருவர் ஓடோடி வந்து, ‘ஷால் நழுவுது... ஒழுங்கா போடு. ஆண்களெல்லாம் சீரழியுறது எதனால’ என்றார். ஒரு பெண் போலீஸ் அதிகாரி இப்படிச் சொன்னது இன்னும் கஷ்டமான விஷயம். இந்த மேல் சீலை விலகினால் அவள் அபத்தமானவள் என்பதைக் குறிப்பெடுக்கும் மூடத்தனம் இன்னும் இந்நாட்டிலிருந்து விலகியிருக்கவே இல்லை.

அவளவள் உடலுக்கு ஏற்றப்படியான உள்ளாடைகளை நாள்தோறும் பூட்டிக்கொண்டு வாழ்க்கையை எதிர்கொள்ளும் அவஸ்தை யாருக்கேனும் தெரிய வாய்ப் பிருக்கிறதா? இறுக்கிப் பிடித்திருக்கும் உள்ளாடையால் மூச்சுக்காற்று அமுங்கி ஆங்காங்கே பிடிப்புகள் நேருமே அதை யாரேனும் அறிய முடியுமா? உள்ளாடைகளின் கொக்கிகள் குத்தி நெருடும் வலியை யாரேனும் நினைக்க முடியுமா? பல்வேறு அழுத்தங்களால் அமுங்கிப் போய் ஏதோவொரு நாளில் நோய்களுக்குள் போய் சேருகிற எத்தனை எத்தனை மார்புச்சதைகளை அறிவீர்கள்?

பார்க்கிற பார்வைகளின் அழுக்குகளைக் கழுவக் கற்றுக்கொடுப்பதே காலத்தின் அவசர தேவை. எந்தப் பெண்ணுக்கும் அவளை ஒருபோதும் உடலாகப் பார்க்கத் தெரிவதில்லை. அவளுக்கும் ஆசையிருக்கும். நான் இந்த உடல் மாத்திரமல்ல. இயற்கையின் பெருமகள். ஆகவே, கொஞ்சம் விசாலமாகக் கனமற்று நடக்கலாம். மேல் சீலைகள் காற்றில் அசைவதால் யாருடைய ஒழுக்கமும் கெட்டுப்போகப்போவதில்லை.

SCROLL FOR NEXT