அன்றிலிருந்து இன்றுவரை எங்களுடையது கூட்டுக் குடும்பம்தான். பாட்டி, அம்மா, சகோதரிகள் எல்லாம் சமையலறையைப் பார்த்துகொண்டதால் நான் அந்தப் பக்கம் சென்றதே இல்லை. படித்து முடித்த உடனே வேலை கிடைத்ததால் நண்பர்கள் மூன்று பேர் சேர்ந்து ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தோம். சமையல் என்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பது அப்போதுதான் புரிந்தது. இன்றுபோல் அன்று யூடியூப் கிடையாது. ஒருவழியாகச் சமைக்கக் கற்றுக்கொண்டேன்.
பிறகு சொந்த ஊருக்கே மாற்றல் கிடைத்துவிட அன்றைக்குச் சமையலறைக்குள் புகுந்த நான் இன்று வரை தினமும் காய்கறி நறுக்குவது, தேங்காயைத் துருவி கூட்டு - குருமா - குழம்பு எனத் தேவைக்கேற்ப அரைப்பது, ரசப்பொடி செய்வது, துவையல் - சட்னி அரைப்பது என அலுவலகம் செல்வதற்குள் சிலவற்றை முடித்துவிடுவேன்.
அலுவலகம் முடிந்து வரும்போது மறுநாள் சமையலுக்குத் தேவையான காய்கறிகளை வாங்கி வந்துவிடுவேன். மாதாந்திர மளிகைப் பொருள்களை வாங்கி டப்பாக்களில் கொட்டிவைத்துவிடுவேன். சாம்பார் பொடி அரைப்பது, கோதுமை மாவு அரைப்பது போன்ற அரவை மில் வேலைகளையும் நான்தான் செய்வேன். மனைவியும் வேலைக்குச் செல்பவர் என்பதால் திருமண ஆன பிறகும் என் சமையல் வேலைகளைத் தொடர்ந்தேன். சகோதரிகள் பிரசவத்திற்கு அம்மா வீடு வந்தபோது பத்தியக் குழம்புக்கு அரைத்து வைத்தது நான்தான். என் மகள்களின் புகுந்த வீட்டிற்குப் போனால், என் வீட்டில் செய்த அதே வேலைகளை அங்கும் செய்வேன். பேத்திகள் எங்கள் வீட்டில்தான் தங்கிப் படிக்கின்றனர். வீட்டில் அனைவரது ஆடைகளையும் அயர்ன் பண்ணிக்கொடுப்பதும் நான்தான்.
70 வயதை நெருங்கும் நான் எப்போதும் அனைவருக்கும் சொல்வது: ‘சமையல் என்பது பெண்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்டதல்ல. சமையலில் சிறந்தவரை நளன் என்றுதானே அழைக்கிறோம்? ஆண்களும் சமைக்கலாம். முடிந்த வேலைகளில் உதவலாம்.’
குழிப்பணியாரம்: நான் செய்யும் காரப்பணியாரமும் காரச்சட்னியும் எங்கள் வீட்டில் அனைவரது விருப்ப உணவு. இதற்கு அதிகம் புளிக்காத இட்லி மாவு மட்டும் போதும். வாணலியில் எண்ணெய் விட்டுக் கடுகு, பெருங்காயம் தாளித்து, பொடியாக அரிந்த பெரிய வெங்காயம், பீன்ஸ், கேரட் சேர்த்து வதக்க வேண்டும். அதில் சிறிதளவு சாம்பார் பொடி சேர்த்து வதக்கி, இட்லி மாவில் கொட்டிக் கலந்து பணியாரமாகச் சுட்டெடுக்க வேண்டும். காலை, மாலை எப்போது வேண்டுமானாலும் இதைச் சாப்பிடலாம். விருந்தினர் வருகையின்போதும் செய்து அசத்துவோம். சட்னிக்கு, தக்காளி, வெங்காயம், உப்பு, காரப் பொடி சேர்த்துத் தண்ணீர் விடாமல் அரைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு தாளித்து, அரைத்த சட்னியையும் சேர்த்து லேசாக வதக்கி இறக்கினால் காரச்சட்னி தயார். - எஸ்.சுரேந்திரன், முகலிவாக்கம், சென்னை.