நலம் வாழ

கர்ப்பகால நீரிழிவு: சத்தமின்றி ஓர் அச்சுறுத்தல் | நவம்பர் 14: உலக நீரிழிவு நாள்

டாக்டர் வி.மோகன்

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கர்ப்பம் தரிப்பது முக்கியமான காலக்கட்டம். மகிழ்ச்சியளிக்கும் பயணம். ஆனாலும், எதிர்பாராதவாறு உடல்நலத்துக்குப் பல சவால்களை இது கொண்டுவரக்கூடும். இந்தியாவில் கர்ப்பகால நீரிழிவு (GDM) என்பது கர்ப்பம் தரித்த நான்கு பெண்களில் ஒருவரைப் பாதிக்கிறது.

பலநேரத்தில் இப்பாதிப்பு கண்டறியப்படுவதில்லை அல்லது குறைத்து மதிப்பிடப்படுகிறது. அறிகுறிகள் எதுவும் வெளிப்படாமல் கர்ப்பகால நீரிழிவு ஏற்படுவதே இதற்குக் காரணம். இதனால், கர்ப்பம் தரித்த தாய்க்கும் வளரும் குழந்தைக்கும் ஆபத்து அதிகம். எனவே, இந்தியாவிலுள்ள ஒவ்வொரு பெண்ணும் அறிந்திருக்கவேண்டிய அச்சுறுத்தல் இது.

எப்படிப் பாதிக்கிறது? - பொதுவாகக் கர்ப்பம் தரித்த 24ஆவது வாரத்தையொட்டி நிகழ்கிற நீரிழிவின் ஒரு வகை இது. வளர்ச்சியடையும் கருவின் காரணமாக உணவுத் தேவை அதிகரிக்கும்போது, அதை எதிர்கொள்ளப் போதுமான இன்சுலினை உற்பத்திசெய்ய உடலால் இயலாமல் போகலாம். பிரசவத்துக்குப் பிறகு, கர்ப்பகால நீரிழிவு பாதிப்பு மேலும் தொடரலாம் அல்லது தொடராமலும் போகலாம். எதுவாக இருந்தாலும், இது ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பு பெரும்பாலான நேரத்தில் நீண்டகாலம் நீடிக்கக் கூடியது.

          

மரபியல் அம்சங்கள், மாவுச்சத்து அதிகமுள்ள உணவு வகைகள், வாழ்க்கைமுறை காரணிகளால் கர்ப்பகால நீரிழிவு வருவதற்கு அதிகச் சாத்தியத்துடன் இந்தியப் பெண்கள் இருக்கின்றனர். சுமார் 25%, அதாவது, இந்தியாவில் கருவுற்ற பெண்களில் நான்கில் ஒருவருக்குக் கர்ப்பகால நீரிழிவு இருக்கிறது. இதனால், கருத்தரித்த அனைத்துப் பெண்களும் தவறாமல் குறிப்பிட்ட இடைவெளியில் இதைக் கண்டறிவதற்கான பரிசோத னையை மேற்கொள்ள இந்திய அரசு பரிந்துரைக்கிறது.

கர்ப்பகால நீரிழிவைச் சரியாக நிர்வகிக்கவில்லை என்றால் குறைப்பிரசவம், அதிக உடல் எடையுடன் குழந்தைகள் பிறப்பது போன்ற சிக்கல்கள் வரக்கூடும் அல்லது சிசேரியன் முறையில் பிரசவம் நிகழக் கூடும். நீண்டகால அடிப்படையில் இப்பாதிப்புள்ள தாய், குழந்தை இருவரும் இரண்டாம் வகை நீரிழிவு, உடல்பருமன் வருவதற்கான கூடுதல் சாத்தியத்தைக் கொண்டிருப்பார்கள்.

பெண்கள் அறிய வேண்டியது: 25 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பகால நீரிழிவு அல்லது இரண் டாம் வகை நீரிழிவு குடும்பத்தில் மற்றவர்களுக்கு இருந்த வரலாறு, அதிக உடல் எடை அல்லது உடல்பருமன், சினைப்பை நோய் அறிகுறி (PCOS) அல்லது அதிக ரத்த அழுத்தம் போன்றவை கர்ப்பகால நீரிழிவுக் கான முக்கியக் காரணிகள். கர்ப்ப கால நீரிழிவு வராமல் ஆரம்ப நிலையிலேயே தடுப்பு நடவடிக்கை களை எடுப்பதற்கு இந்தக் காரணி களைப் பற்றிப் பெண்கள் அறிந்திருக்க வேண்டும்.

நோயறிதல், சிகிச்சை: பெரும்பாலும் அறிகுறிகள் எதையும் கர்ப்பகால நீரிழிவு கொண்டிருப்பதில்லை. அதனால், கர்ப்ப காலத்தின்போது ஆரம்ப நிலையி லேயே இந்நோய்க்கான அடிப்படைப் பரிசோதனையைச் செய்துகொள்வது அவசியம். ஆரம்பத்திலேயே பாதிப்பு கண்டறியப்பட்டால் தாய்க்கும் சேய்க்கும் வரக்கூடிய சிக்கல்களைத் தடுக்க முடியும்.

உணவுமுறை மாற்றங்கள், உடற்பயிற்சி/உடல் உழைப்பு, ரத்தச் சர்க்கரை அளவைக் குறிப்பிட்ட இடைவெளியில் கண்காணிப்பது போன்றவற்றின் மூலம் கர்ப்பகால நீரிழிவைத் திறம்பட நிர்வகிக்கலாம். சில பெண்களுக்கு இன்சுலின் அல்லது மருந்துகள் தேவைப்படலாம். ஆரம்பத்திலேயே சிகிச்சையைத் தொடங்கினால் பேறுகால வலிப்பு நோய், சிரமமான பிரசவங்கள், பிரசவத்துக்குப் பிந்தைய இரண்டாம் வகை நீரிழிவு உருவாவது போன்ற சிக்கல்களையும் ஆபத்துகளையும் குறைக்க முடியும். எனவே, தாயாகப் போகும் கருவுற்ற பெண்கள் இவற்றை நன்கு புரிந்துகொள்ள வேண்டும். இதுகுறித்த அறிவும், உரிய நேரத்தில் எடுக்கப்படும் நடவடிக்கையும் பாதுகாப் பான கர்ப்பத்துக்கும் சுகமான பிரசவத்துக்கும் அவசியம்.

என்ன செய்யலாம்?

* கர்ப்பகால நீரிழிவை நிர்வகிப்பதற்கு ஊட்டச் சத்து, உடற்பயிற்சி வழிகாட்டல்கள், வாழ்க்கை முறை திருத்தங்கள்/மாற்றங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

* முழு தானிய உணவு வகைகள், பசுமையான காய்கறிகள், பழங்களைச் சாப்பிடுங்கள்.

* பழுப்பு அரிசி, சிறுதானியங்கள், கோதுமை போன்றவற்றில் செய்யப்படும் உணவை அதிகமாக உட்கொள்ளுங்கள். சாப்பிடும் அளவு குறித்துக் கவனமாக இருங்கள்.

* ஒவ்வொரு நாளும் சுமார் 30 முதல் 40 நிமிடங்களுக்கு மிதமான வேகத்தில் நடைப்பயிற்சியைத் தவறாமல் செய்யுங்கள்.

* போதுமான அளவு நீர் அருந்துங்கள்.

* தாய், சேய் உடல்நலத்துக்கு ஆதரவளிக்க ஒரு பிரத்யேக உணவுப் பட்டியலை உருவாக்க, சரிவிகித உணவு நிபுணரிடம் கலந்தாலோசி யுங்கள்.

பயமின்றிச் சமாளிக்க...

* கர்ப்பகால நீரிழிவு இருப்பதை அறிவது அதிர்ச்சியளிப்பதாக இருக்கலாம். எனவே, உடல்சார்ந்த செயல்பாடுகளோடு சேர்த்து உணர்வு ரீதியான மனநலத்துக்கும் பெண்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

* குடும்பத்தினர், நண்பர்கள், தோழிகள் அல்லது சிகிச்சை நிபுணர்களிடமிருந்து உணர்வுரீதியான ஆதரவைக் கேட்டுப்பெறுங்கள்.

* யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி போன்றவை பயத்தையும் கலக்கத்தையும் குறைக்க உதவும்.

* மன அழுத்தத்தைக் குறைக்க சமையல், விளையாட்டு, நூல்களை வாசிப்பது, ஓவியம் வரைவது, இசையைக் கேட்பது போன்றவற்றில் ஈடுபடுங்கள்.

* பாதுகாப்பான, ஆரோக்கியமான கர்ப்பகாலத்துக்கும் பிரசவத்துக்கும் உணர்வுரீதியான கவலைகளுக்கு நாம் தீர்வு காண்பது அவசியம்.

அலட்சியமும் ஆபத்துகளும்: தொடக்க நிலையிலேயே கர்ப்பகால நீரிழிவைச் சரியாக நிர்வகிக்கவில்லை என்றால், கருவில் உள்ள குழந்தையின் அளவுக்கு அதிகமான வளர்ச்சி சார்ந்த ஆபத்து, பிரசவத்தின்போது சிக்கல்களுக்கான சாத்தியம் அதிகரிக்கும்.

பேறுகால வலிப்பு, உயர் ரத்த அழுத்தத்துக்கு அதிக அளவிலான சாத்தியம் கர்ப்பம் தரித்த பெண்களுக்கு ஏற்படலாம். கர்ப்பகால நீரிழிவு இருந்த தாய்மார்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்குப் பிறவிலேயே வளர்ச்சிக் குறைபாடுகள், குழந்தை இறந்து பிறப்பது ஆகியவற்றுக்கு அதிகச் சாத்தியம் உண்டு.

அத்துடன் அந்தக் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும்போது உடல்பருமன், இரண்டாம் வகை நீரிழிவு போன்றவை ஏற்படும் ஆபத்தும் உண்டு. கர்ப்பகால நீரிழிவு இருந்த தாய்மார்களுக்கும் பிரசவத்துக்குப் பிந்தைய ஆண்டு களில் இரண்டாம் வகை நீரிழிவு உருவாவதற்கு அதிகச் சாத்தியம் உண்டு.

விழிப்புணர்வு தேவை: கர்ப்பகால நீரிழிவு என்பது வெறுமனே ஒரு தற்காலிகப் பாதிப்பு அல்ல. வாழ்நாள் முழுவதும் நீடிக்கிற தாக்கத்தை இது கொண்டிருக்கிறது. ஆனால், போதுமான விழிப்புணர்வு, உரிய நேரத்தில் முன்கூட்டிய சோதனை, தன்முனைப்புடன் சிகிச்சை, வாழ்க்கைமுறை மாற்றங்களைச் செய்வதன் மூலம் பெண்களால் இதை வெற்றிகரமாகச் சமாளிக்க முடியும். ஊட்டச்சத்து மீது கவனம், தவறாமல் உடற்பயிற்சி செய்வது, மனநலத்தைப் பேணுவதன் மூலம் கருத்தரித்த பெண்கள் அவர்களது ஆரோக்கியத்தையும் பிறக்கப்போகும் குழந்தையின் நலனையும் பாதுகாப்பாகப் பராமரிக்க முடியும்.

- கட்டுரையாளர், நீரிழிவு சிறப்பு சிகிச்சை நிபுணர்; drmohans@diabetes.ind.in

SCROLL FOR NEXT