உலகம் முழுவதும் பல இராமாயணங்கள் இயற்றப்பட்டாலும், ஒவ்வொன்றும் தனித்தன்மை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. அவற்றில் உள்ள சிறு சிறு வேறுபாடுகள், கதையின் போக்கை சற்று மாற்றி சுவாரஸியம் கூட்டுகின்றன.
தசரதச் சக்கரவர்த்தியின் மகன்களில், இராமன் கோசலைக் கும், பரதன் கைகேயிக்கும், இலக்குவ – சத்ருக்கனர்கள் சுமித்திரைக்கும் பிறந்தவர்கள் என்பதுதான் வால்மீகி இராமாயணம்.
கௌஸல்யா ஜனயத் ராமம் திவ்ய லக்ஷணஸம்யுதம்
பரதோ நாம கைகேய்யாம் ஜஞ்ஞே ஸத்ய பராக்ரம:
அத லமண சத்ருக்னௌ ஸுமித்ரா ஜனயத் ஸுதௌ
பெரும்பாலான இராமாயணங்கள் இப்படியே கூறுகின்றன. மராட்டி மொழியில், 16-ம் நூற்றாண்டில், ஏகநாதரால் இயற்றப்பெற்ற பாவார்த்த இராமாயணம், தசரதச் சக்கரவர்த்திக்கு நான்குப் பிள்ளைகள் என்றேதான் காட்டுகிறது; ஆனால், தாய்மார்களின் கணக்கில்தான் சிறு வித்தியாசம். தன் பிள்ளைக்குத்தான் பட்டம் கட்டவேண்டும் என்று சக்கரவர்த்தியிடம் வலியுறுத்திக் கொண்டிருந்த கைகேயி, யாகத்தின் பாயசம், மூன்று பத்தினிகளுக்கும் பகிரப்பட்டதைக் கண்டு சினம் கொண்டாள்.
தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாயசத்தை ஏந்திக்கொண்டு கோசலையும் சுமித்திரையும் நகர, பாயசப் பாத்திரத்தை ஓரமாக வைத்த கைகேயி ஆத்திரத்தோடு நின்றாள். பருந்து ஒன்று பறந்து வந்து பாத்திரத்தை கவ்விக் கொண்டு பறந்தது. மேலும் ஆத்திரத்தோடு நின்றாள். அன்போடு அவளை அணைத்துச் சமாதானப்படுத்திய கோசலை, தன்னுடைய பங்கில் பாதியைக் கொடுத்தாள்.
பாக் தேதாம் கைகேயிஸீ, கௌஸல்யா அதி உல்லாஸீ
ஸவதீபாவ் நாஹீம் மானஸீம் தேத உல்லாஸீம் நிஜபாக
சக மனைவி என்னும் பொறாமை இல்லாத கோசலை, பாயசத்தின் பங்கை, உற்சாகத்தோடு கைகேயிக்குக் கொடுத்தாள்.
ஜைஸீ கௌஸல்யேசீ விதீ தைஸீச ஸுமித்ரேசீ ஸத்புகத்தி
பாப் ஸத்ஸங்காசீ ஸித்தீ தே அர்தார்த நிஜபாக்
கோசலை எவ்வாறு நினைத்தாளோ அவ்வாறே சுமித் திரையின் செய்கையும் இருந்தது. தன்னுடைய பங்கில் பாதியை அவளும் கொடுத்தாள். பெருமாட்டிகள் மூவரின் கருக்களும் வளர்ந்து, மகப்பேற்றுக் காலமும் நெருங்கியது. இரண்டு பங்குகளைப் பெற்றிருந்த கைகேயிக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்தனர்.
ஏக் ஸ்ரீராமாசா பாக், ஏக் லக்ஷ்மணாசா விபாக்
ஒருவன் இராமனின் பாகம் (பரதன்); இன்னொருவன் இலக்குவனின் பாகம் (சத்ருக்கனன்). 1870-களில், குஜராத்தி மொழியில், இராம கதையைப்பாடினார் கிரதர தாஸ மஹாகவி. கதையை வெகு சுவாரஸியமாக மொழிகிறார். புத்ரகாமேஷ்டி யாகத்தின் பிரசாத அன்னத்தின் பெரிய கவளத்தை மூத்த மனைவியான கோசலையிடம் கொடுத்தார் தசரத மஹாராஜா. மீதமிருந்ததை இரு பாகங்களாக்கி, கைகேயியிடமும் சுமித்திரையிடமும் ஒவ்வொன்றைக் கொடுத்தார். கைகேயிக்கோ ஆத்திரம் தாங்க வில்லை.
சினத்திலும் தவிப்பிலும் புலம்பத் தொடங்கினாள்: ‘எப்படி இப்படி? பெரிய பாகத்தைக் கோசலைக்கு எப்படிக் கொடுக்கப் போயிற்று? அரசருக்கு நான் தானே பிரியமானவள். இவருக்கு எவ்வளவு உபகாரங்களை நான் செய்தி ருக்கிறேன்! யுத்தத்தில் காப்பாற்றினேன். இனிமேலும் நான்தானே பெரியவகைப் பெருமிதங்களைப் பெற்றுத் தரப்போகி றேன்.’ இவ்வாறு புலம்பிக்கொண்டிருக்கும்போதே அதிசயமொன்று நடந்தது.
புயல் போல் பறந்து வந்த பருந்தொன்று, கைகேயி கையிலிருந்த பாத்திரத்தைப் பற்றிக் கொண்டு பறந்தேவிட்டது. அச்சமும் அவலமும் அவளைப் பீடித்தன. அவளின் கண்களில் தாரை பெருக, கோசலைக்குக் கண் ஜாடை காட்டினார் சக்கரவர்த்தி. சுமித்திரையும் புரிந்து கொண்டாள். தங்களின் பாகங்களிலிருந்து பங்கெடுத்து இருவரும் கைகேயியிடம் கொடுத்தார்கள். கைகேயி மகிழ்ச்சி அடைந்தாள்.
கேகைனா வே புத்ர தே ஹரினா, சங்கசக்ர அவதார் ஜி
பரத சத்ருகன நாமஜ பாட்யாம்
கைகேயிக்குப் புதல்வர்கள் இருவர் பிறந்தனர்; பரத சத்ருக்கன பெயர் கொண்ட இவர்கள், சங்கு சக்கர அம்சங்கள் ஆவர். இதெல்லாம் இருக்கட்டும். பருந்து கொண்டு போன பாகம் என்னானது? கதை கொஞ்சம் திரும்புகிறது. கேசரி என்றொரு வானரத் தலைவன்; அஞ்சனீ இவன் மனைவி.
இவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை. சிவனாரைத் துதித்துப் பிள்ளை வரம் வேண்டி ருஷ்யமுக மலையில் அஞ்சனீ தவம் செய் தாள். ஏழாயிரம் ஆண்டுகள் செய்த தவத்துக்கு இரங்கிப் பிரசன்னமான சிவனார், என்ன வேண்டுமென்று வினவினார். பிள்ளை பாக்கியம் கேட்டாள்.
‘ருத்ர ஜே அகியாரமா, தே ப்ரகடஷே துஜ பேட் -
‘ருத்திரர்கள் பதினொரு பேரும் ஒன்றுசேர்ந்து உன்னுடைய வயிற்றில் உதிப்பார்கள். கைகள் இரண்டையும் கூப்பி, வாயுதேவனைத் துதித்து இந்த மந்திரத்தைக் கூறு. வாயு உனக்குப் பிரசாதம் கொடுப்பான். அதை உண்டுவிடு’ என்று விவரமாக உரைத்தார். மந்திரத்தை அஞ்சனீ ஜபிக்கத் தொடங்கியவுடனேயே, வேகமாகக் காற்றடித்தது.
அதே சமயம், கைகேயியின் பாயசப் பங்கைக் கவ்விக் கொண்டு பறந்த பருந்து, காற்றால் அலைக்கழிந்தது. பருந்தின் அலகிலிருந்து அன்னபிண்டம் நழுவ, அதைத் தாங்கிய காற்றுதேவன், அஞ்சனீயின் அழகைக் கண்டு அன்பு பூண்டவனாக, அதனை வழங்கினான்.
ப்ரஸாத் படியோ கர விஷே, தே ஜோயி ஹரகீ ஏஹ
சிவ மந்த்ர பணீனே அஞ்சனீயே பக்ஷ கீதோ தேஹ
கையில் பிரசாதம் விழுந்ததும் களிப்படைந்த அஞ்சனீ, சிவமந்திரம் செப்பியபடியே அதனை உண்டாள். இவ்வாறு, புத்ரகாமேஷ்டி யாகத்தின் அன்னபிண்டமானது, ஏகாதச ருத்திரர்களின் அம்சத்தோடு, வாயுதேவனின் அம்சமும் கலந்து, அஞ்சனீயின் வயிற்றில் அனுமன் உதிக்கக் காரண மானது.