ஆனந்த ஜோதி

செவ்வாய் தோஷம் போக்கும் சிறுகுடி சூட்சுமபுரீஸ்வரர்

முனைவர் கே.பி.வித்யாதரன்

கும்பகோணத்தில் இருந்து 30 கிமீ தொலைவில் உள்ள சிறுகுடி சூட்சும புரீஸ்வரர் கோயில், செவ்வாய் தோஷம் போக்கும் தலமாக போற்றப்படுகிறது. இத்தலத்தில் உள்ள சந்தோஷ ஆலிங்கன மூர்த்தி மிகவும் விசேஷமானதாக போற்றப்படுகிறது.

தல வரலாறு: ஒருமுறை கைலாயத்தில் பரமசிவனும் பார்வதியும் சொக்கட்டான் ஆடினர். அதில பார்வதி வெற்றி பெற்றாள். அதனால் வெட்கமடைந்த சிவபெருமான் எங்கோ மறைந்து விட்டார். கலக்கமடைந்த பார்வதி சிறுகுடி தலத்துக்கு வந்து மங்கள தீர்த்தத்தை உண்டாக்கி, தன் கையால் பிடி மணலை எடுத்து அதை சிவலிங்கமாகப் பிடித்து வைத்து வழிபட்டாள்.

          

அம்பாளுக்கு காட்சி கொடுத்து சுவாமி, அவளை மீண்டும் ஏற்றுக் கொண்டதாக தலபுராணம் கூறுகிறது. சிறுபிடி என்பது மருவி சிறுகுடி என்றாயிற்று. திருக்கயிலையில் இருக்கும் இறைவன் சூட்சுமமாய் மறைந்து இங்கு மீண்டும் தோன்றியதால் இத்த தலத்துக்கு சூட்சுமபுரி என்றும் இறைவனுக்கு சூட்சுமபுரீஸ்வரர் என்றும் பெயர்கள் உண்டாயின. இறைவன் சிறுகுடியீசர் என்றும் அழைக்கப்படுகிறார்.

கோயில் சிறப்பு : மூலவர் சுயம்புத் திருமேனி. அம்பிகை கைப்பிடி அளவு மணலால் பிடித்துவைத்து மங்கள தீர்த்தம் உண்டாக்கி வழிபட்ட தலம். சிறுகுடியீசர் என்ற பெயருக்கேற்றவாறு மிகச் சிறிய லிங்கம். ஒருபிடி அளவேயுள்ள மண் லிங்கம். ஆதலால் இதற்கு அபிஷேகம் கிடையாது. நெற்றியில் பள்ளமும் இருபுறமும் கைபிடித்த அடையாளமும் உள்ளது. அம்பிகை இறைவனை ஆலிங்கனம் செய்து கொண்டதால் இத்தழும்புகள் உண்டானது என்பர். லிங்கத் திருமேனி எப்போதும் கவசம் சாத்தியே வைக்கப்பட்டுள்ளது.

சிறப்பு அம்சம்: முன் மண்டபத்தில் நவக்கிரக சந்நிதி உள்ளது. நவக்கிரகங்களில் சனீஸ்வரனுக்கு கீழே சனைச்சரன் என்று பெயர் எழுதப்பட்டுள்ளது. இதற்கு மெதுவாக ஊர்ந்து செல்பவன் என்று பொருள். இதுவே மருவி சனீச்வரன் என்றாயிற்று. நவக்கிரக சந்நிதிக்கு அருகில் ஞானசம்பந்தரின் பெரிய மூலத் திருமேனி. இடுப்பில் அரைஞாண் கயிறு, கழுத்து மாலை ஆகியவற்றுடன் தோற்ற மளிக்கிறார். உற்சவ மூர்த்திகளுள் சந்தோஷ ஆலிங்கன மூர்த்தி சிறப்பானது.

அம்பிகையின் பூஜைக்கு மகிழ்ந்து ஆலிங்கனம் செய்யும் அமைப்பில் அவள் தோள் மீது கை போட்டுக்கொண்டு இறைவன் காட்சி தருகிறார். இத்திருத்தலத்தில் செவ்வாய் பகவான் இறைவனை வழிபட்டுள்ளார். இத்தலத்தில் அங்காரகனுக்கு தனி சந்நிதி உள்ளது. கோயிலுக்கு வெளியே நேர் எதிரிலுள்ள மங்கள தீர்த்தத்தில் நீராடி கோயிலுக்குச் சென்று அங்காரகனை வழிபட்டு வந்தால் செவ்வாய் தோஷங்கள் நீங்கி நலம் பெறலாம்.

அமைவிடம்: கும்பகோணம் - நாச்சியார் கோவில் - கூந்தலூர் - பூந்தோட்டம் சாலையில் கூந்தலூர் கடந்து கடகம்பாடியை அடைந்து அங்கிருந்து வடக்கே அரசலாற்றுப் பாலம் தாண்டி 3 கிமீ தொலைவில் உள்ளது.

கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 6.30-11.30, மாலை 4.30 - 7.30 மணி வரை.

இறைவன் பெயர்: சூட்சுமபுரீஸ்வரர், மங்களநாதர்
இறைவி பெயர்: மங்களநாயகி

SCROLL FOR NEXT