விருத்தாசலம் நகருக்கு மேற்கே 2 கிமீ தொலைவில் மணவாளநல்லூரில் அமைந்துள்ள கொளஞ்சியப்பர் கோயிலில் சுயம்பு வடிவிலான முருகன் மூலவராக அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் ‘பிராது’ எனும் வழக்குப் பதிவு செய்யும் முறை, சூறை விடுதல் போன்ற நிகழ்வுகள் நடைமுறையில் உள்ளன.
பிராது என்கிற வார்த்தைக்கு முறையீடு, குற்றச்சாட்டு, புகார், குறை கூறல் என்பது பொருள். இயல்பு வாழ்க்கையில் தங்கள் புகார்களை நீதிமன்றத்தில் முறையிடுவது போல, மக்கள் தங்கள் புகார்களை, வேண்டு கோளை ஒரு காகிதத்தில் எழுதி கொளஞ்சியப்பரை நீதிபதியாக கருதி சமர்ப்பிப்பது வழக்கம்.
சமர்ப்பித்த மூன்று நாட்களுக்குள்ளோ, மூன்று வாரங்களுக்குள்ளோ, மூன்று மாதங்களுக்குள்ளோ, மூன்று வருடங்களுக்குள்ளோ முறையிடப்பட்ட குறை, புகாரின் தன்மையைப் பொறுத்து கொளஞ்சியப்பரே ஆய்ந்து நல்ல முடிவை தந்து, குறையை தீர்த்து, வேண்டுகோளை நிறைவேற்றி வைப்பதாக நம்பப்படுகிறது.
வெளியூர்களில் இருந்தும் கூட பலரும் இங்கு வந்து இந்த பிராது பிராத்தனையை மேற்கொள்கின்றனர். மக்கள் காகிதத்தில் எழுதி கொடுக்கும் குறைகள் முதலில் மூலவரான கொளஞ்சி யப்பர் சந்நிதியில் வைக்கப்பட்டு பூஜிக்கப்படுகிறது. அதன்பிறகு, கோயில் வளாகத்தின் உள்ளேயே இருக்கும் முனியப்பர் சந்நிதியின் முன்புறத்தில் அமைந்துள்ள சூலம், ஈட்டி போன்றவற்றில் கட்டப்படும்.
தங்கள் வேண்டுதல், கோரிக்கை நிறைவேறிய பிறகு மக்கள் மீண்டும் இந்தக்கோயிலுக்கு வந்து தங்கள் பிராதை திரும்பப் பெற்றுக்கொள்கின்றனர். இத்தலத்தில், பூஜித்து விபூதியிடப்பட்ட வேப்பெண்ணெய் மருந்தாக வழங்கப் படுகிறது.