ஆனந்த ஜோதி

பிறவித் துன்பம் போக்கும் திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர்

ரங்க ராமானுஜ தாஸன்

செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் 28-வது தேவாரத் தலமாகும். இங்கு சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பிரம்மதேவனின் எட்டு மானச புத்திரர்கள் சாரூப்ய பதவிக்காக தவம் இருந்தனர். முடிவில் சாரூப என வரம் கேட்பதற்குப் பதில், சாயுட்சய என கேட்டதால் கழுகாக மாறிவிட்டனர்.

எனவே யுகத்துக்கு இருவர் என்று கழுகுகளாக இங்குவரும் அவர்கள், சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் உண்டு செல்வர். நண்பகல் நேரத்தில் இக்காட்சியைக் காணலாம். (14 ஆண்டுகாலம் பிரதோஷ நாளில் முறையாக சிவாலய தரிசனம் செய்பவர்கள், சாரூப்ய பதவி பெற்று, சிவகணங்களாகி விடுவார்கள்.) பூஷா , விருத்தா என்ற இரு முனிவர்கள் சாரூப பதவி வேண்டித் தவம் செய்தனர்.

          

இறைவன் தோன்றி வரம் தரும்போது, “இப்போது சாயுட்சயப் பதவி தருகிறேன். இப்பதவியில் சில காலம் இருங்கள். பிறகு சாயுஜ்யம் தருகிறோம்” என்றார். அதை ஏற்க மறுத்த முனிவர்களை, “கழுகு உருவம் அடைக” என்று சாபமிட்டார். முனிவர்கள் கழுகுகளாய்ப் பிறந்தனர். சம்பு, ஆதி எனும் பெயருடன் மலைக் கோயிலை வலம் வந்து, தாங்கள் உண்டாக்கிய பட்சி தீர்த்தம் அருகில் உள்ள பாறையில் நாள்தோறும் அமுதுண்டு இறைவனை வழிபட்டு வருகின்றனர்.

தினமும் ராமேஸ்வரத்தில் ஸ்நானம் செய்து கழுகுன்றத்தில் ஆகாரம் உண்டு காசியில் அடைக்கலம் ஆவதாக ஐதீகம். கழுகுகளுக்கு அமுதூட்டும் செயல் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. (சாயுட்சயம் – கழுகு, சாரூப – அவன் உருவம் பெற்று விளங்குதல், சாயுச்சிய – அவனுடன் இரண்டறக் கலத்தல் – மரணமில்லாத வாழ்வு) திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் 1,400 ஆண்டுகால தொன்மை வாய்ந்தது.

திருக்கழுகுன்றம் திருமலைக் கோயிலின் ஒரு கல் மண்டபம் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் (கி.பி. 610-640) காலத்தில் கட்டப்பட்ட சிவனுக்குரிய குடவரைக் கோயில் என்று தொல்பொருள் ஆராய்ச்சி யாளர்கள் கருதுகின்றனர். 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர், சோழர், பாண்டியர், ராஷ்டிரகூடர் காலத் திய கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. வேதமே மலையாக இருப்பதால் ‘வேதகிரி’ என இத்தலம் பெயர் பெற்றது. வேதாசலம், கதலிவனம், கழுக்குன்றம் என்பன இத்தலத்துக்குரிய வேறு பெயர்கள்.

மலைமேல் ஒரு கோயில்; ஊருக்குள் ஒரு கோயில் உள்ளது. இவை முறையே திருமலை, தாழக்கோயில் என்றழைக்கப் படுகிறது. 500 அடி உயரமுள்ள இம்மலையில் நாள்தோறும் உச்சிப்பொழுதில் கழுகு வந்து உணவு பெற்றுச் செல்லுவதால் இதற்கு ‘பட்சிதீர்த்தம்’ என்றும்; திருக்கழுகுன்றம் என்றும் பெயராயிற்று. மலைமீது ஏறிச் செல்ல படிகள் அமைக்கப்பட்டுள்ளன. கிரிவலம் வருவது இன்றும் வழக்கத்தில் உள்ளது.

கல்மண்டபத்தில் மீது செங்கற்களால் அமைக்கப்பட்டுள்ள மிகப் பழமையான கோயில், தாழக்கோயில் ஆகும். மார்க்கண்டேயர் இறைவனை வழிபடப் பாத்திரமின்றித் தவிக்க இறைவன் சங்கை உற்பத்தி செய்து தந்ததாகவும், அது முதல் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறப்பதாகவும் சொல்லப்படுகிறது. திருமலையைச் சுற்றி 12 தீர்த்தங்கள் உள்ளன. அம்பாளுக்கு (திரிபுரசுந்தரி) மார்பில் ஸ்ரீ சக்கரப் பதக்கம் சார்த்தப்பட்டுள்ளது.

ஆண்டில் ஆடிப்பூரம், பங்குனி உத்திரம், நவராத்தியில் வரும் நவமி ஆகிய மூன்று நாட்களில் மட்டுமே அம்பாளுக்கு முழு அபிஷேகம் செய்யப்படுகிறது. நாள்தோறும் பாத பூஜை மட்டுமே நடக்கிறது. ஈசனுக்கு, கார்த்திகை மாதத்தில் திங்கள்கிழமைதோறும் 1,008 சங்குகளால் அபிஷேகம் நடைபெறும். இத்தல ஈசனை வழிபட்டால் பிறவித் துன்பம் அகலும்.

இருப்பிடம்: செங்கல்பட்டு - மாமல்லபுரம் சாலை வழியில் செங்கல்பட்டில் இருந்து 14 கிமீ தூரத்திலும், மாமல்லபுரத்தில் இருந்து 10 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

SCROLL FOR NEXT