‘வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்' என்று கவிஞர் பாடியதுபோல, ஒரு சிறிய இட்லிக் கொப்பரையும் எண்ணெய்ச் சட்டியும் இருந்தால் போதும். பஜாரில் பத்துக்குப் பத்து சதுர அடியில் ஒரு கிளப்புக் கடை ஆரம்பித்து விடலாம். ருசியாக சாம்பார், சட்னி, வடை செய்யத் தெரிந்தால் நாளாவட்டத்தில் நல்ல பேர் எடுத்துப் பெரிய கடையாகவே மாறலாம். ஆனால், பெரும்பாலும் சிறிய இடத்தில் ஆரம்பித்தவர்களில் சிலரே கடையை விரிவாக்கிக்கொண்டே போவார்கள். பலரும் கடையைப் பெரிதாக்கினால் ராசி போய்விடும், வியாபாரம் கெட்டுவிடும் என்று நினைப்பார்கள்.
எங்கள் ஊரில் ‘கணபதி விலாஸ் சைவாள் காபி கிளப்’ ஒன்று உண்டு. அதற்கு கணபதி விலாஸ் என்று பெயர்ப்பலகை இருந்தாலும், கூப்பிடுவதென்னவோ ‘கல்லூர் தாத்தா’ கடை தான். அதை ஆரம்பித்த பெரியவருக்கு ஊர் கல்லூர். அவர் அதிகம் ஆசைப்பட மாட்டார். மத்தியானம் சாப்பாடு, காலை யிலும் மாலையிலும் இட்லி, வடை, பூரி கிழங்கு இவ்வளவுதான் மெனு. வடை, பூரி சீக்கிரமே காலியாகிவிடும். கடைசியில் மிஞ்சுவது சுடச்சுட இட்லி மட்டும்தான்.
அவர் இருக்கும்வரை கடையை விரிவுபடுத்தவே இல்லை. பக்கத்துத் தெருவில்தான் வீடு. வீட்டில் மட்டும் வசதி சற்றே அதிகம். அங்கே நாலைந்து பெரிய கல் ஆட்டுரல்கள் உண்டு. அதில் கணவனை இழந்த பெண்கள் எப்போதும் இட்லிக்கு மாவோ சட்னியோ அரைத்துக் கொண்டிருப்பார்கள். ஒரு பக்கா அரிசி அரைப்பதற்கு 25 பைசா கூலி. பகல் முழுவதும் அரைத்தால் 2 ரூபாய் 50 பைசா கிடைக்கும். அதுவே அப்போது நல்ல சம்பாத்தியம்.
காபிக்கடை முதலாளியம்மா நல்ல மனுஷி. மாலையில் வடை, பூரி என்று ஏதாவது பலகாரம் தருவார். மத்தியான நேரம் வீட்டுக்குப் போகையில் கொஞ்சம் ரசம் அல்லது சாம்பார், கூட்டு ஏதாவது தந்து அனுப்புவார். அவர்கள் வீட்டுக்குப் போய் சோறு மட்டும் வடித்துக் கொண்டால் அன்றைய பாடு கழிந்துவிடும். பெரியவரின் வாரிசுகள் காலத்தில்தான் பக்கத்திலிருந்த ஒரு கடையையும் சேர்த்து வாங்கிச் சற்றே பெரிதாக்கி னார்கள்.
தோசை, அடை என்று மெனுவையும் அதிகரித்தார்கள். பிள்ளைகள் தலையெடுத்த பின், பெரியவர் மதியச் சாப்பாடு போடும் வேளையில்தான் கடைக்கு வருவார். அவர் கடையில் வட்டகைச் சாப்பாடு பிரபலம். ஆரம்பத்தில் ஒரு வட்டகை (கிண்ணம்) 25 பைசாவாக இருந்தது.
இரண்டு வட்டகைச் சாப்பாடு, ஒருவருக்குத் தாராளமாகப் போதும். சாம்பார், ரசம், பொரியல், கூட்டு, அப்பளம், மோர், ஊறுகாய் என்று ஐம்பது பைசாவுக்குள் சாப்பாடு கழிந்துவிடும். எமெர்ஜென்சி காலத்தில் ஓட்டல்கள் கட்டாயம் போட வேண்டிய `ஜனதா மீல்ஸ்’ சாப்பாட்டைவிட கல்லூர் தாத்தா கடையில் மலிவாகவும் தரமாகவும் இருந்தது. எமெர்ஜென்சி காலத்தில் ஓட்டல்களுக்குப் பலவிதக் கட்டுப்பாடுகள் இருந்தன.
வாரம் ஒரு நாள் கட்டாயம் விடுமுறை விட வேண்டும். எல்லாப் பலகாரங்களுக்கும் எடையுடன் விலைப் பட்டியல் எழுதிப் போட்டிருக்க வேண்டும். எவ்வளவு பெரிய ஓட்டலிலும் சாப்பாட்டின் விலை எவ்வளவாக இருந்தாலும் ஒரு ரூபாய்க்கு ஜனதா சாப்பாடு, 200 கிராம் சோறு, சாம்பார், ரசம், கூட்டு, மோர், ஊறுகாய் கண்டிப்பாகப் போட வேண்டும்.
நெருக்கடி நிலையின்போது நான் தூத்துக்குடியில் பணியில் சேர்ந்தி ருந்தேன். பயிற்சிக்காலத்தில் 150 ரூபாய் மட்டுமே சம்பளம். மாசக் கடைசியில் இரண்டு நாள்களாவது ஜனதா சாப்பாடு சாப்பிடவில்லை என்றால் பட்ஜெட் இடிக்கும். இவ்வளவுக்கும் நான் அங்கு சாப்பிட்ட `ஆத்தூர் அண்ணாச்சி’ கடையும் சிறிய கடைதான்.
திருச்செந்தூரை அடுத்த ஆத்தூரில், செல்வாக்கோடு வாழ்ந்த மனிதர் அவர். திருச்செந்தூர் யானைக்குத் தினமும் ஒரு பெரிய உருண்டைச் சோறு அவருடைய மண்டகப்படி. கோயிலுக்குப் போனால் அங்குள்ளவர்கள், ஒரு மணி நேரம் முருகன் முன்னால் உட்கார வைத்துவிடுவார்கள்.
அது முடித்து யானைக்குச் சோறூட்ட வந்துவிடுவார். அந்த யானைதான் அவருக்குச் சோற்றுக் கடை வடிவில் சாப்பாடு போடுகிறது என்பார்கள். மைனர் விளையாட்டுகளில் சொத்தெல்லாம் கரைந்த பின் தூத்துக்குடியில் முருகனடிமையாக, பெரிய குடும்பத்தைக் காப்பாற்றக் கிளப்புக் கடை நடத்திவந்தார்.
அவர் கடையில் வெள்ளிக்கிழமை தோறும் சொதிச் சாப்பாடு பிரபலம். ஒரு வெள்ளிக்கிழமை நான் போகிறபோது சாப்பாடு தீர்ந்துவிட்டது. என்னைச் சாப்பிடாமல் அனுப்ப மனசில்லை ஆத்தூர் அண்ணாச்சிக்கு. அவர் பையனுடன் அவர் வீட்டுக்கு அனுப்பிச் சாப்பிட ஏற்பாடு பண்ணினார்.
நான் எவ்வளவோ மறுத்தும் விடவில்லை. மைனர் அண்ணாச்சியின் மனைவியும் பெண்ணும் மரியாதையாகக் கவனித்துப் பரிமாறினார்கள். அந்த விஷயத்தை என் அறை நண்பரிடம் சொன்னபோது, `ஏற்கெனவே அவர் பொண்ணுக்கு உன்னை மாப்பிள்ளை பார்க்கிறார்டா, அதுதான் உபசாரம் பண்ணிருக்காரு, பொண்ணு நல்லாருக்கும், ஆனா நீ யாரையோ காதலிக்கிறியே’ என்றான்!
(அமிழ்தெடுப்போம்)
- kalapria@gmail.com