வாழ்வு இனிது

தெருக்கூத்து ஆதிகேசவன்

செய்திப்பிரிவு

விருத்தாச்சலம் அருகில் உள்ள புலியூரைப் பிரபலமாக்கியவர் நாடக ஆசான் ஆதிகேசவன். விவசாயக் கூலிகளாக வயல் வேலையை மட்டுமே நம்பி இருந்த மக்கள், நாளடைவில் வாழ்வாதாரம் தேடி கட்டிடத் தொழிலாளர்களாகவும் கூலியாள்களாகவும் மாறிவிட்டனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தெருக் கூத்துக் கலையின் மீது தீராத ஆர்வம் கொண்டிருந்த ஆதி கேசவன், நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்தில் ஒப்பந்தத் தொழிலாளராகப் பணியாற்றி வந்தார். தெருக்கூத்துக் கலை மீதுகொண்ட பற்றுக்காக அந்த வேலையை விட்டுவிட்டார். ‘தெருக் கூத்து சக்கரவர்த்தி’ கோவி. சடகோபனிடம் 23 வயதில் மாணவ ராகச் சேர்ந்தார். இன்று 15 பேர் கொண்ட தெருக்கூத்துக் குழுவின் தலைவராக உயர்ந்திருக்கிறார்.

          

“அந்தக் காலம்போல் இப்போது மக்கள் கூத்து பார்ப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. அதனால் என்னைப் போன்ற கலைஞர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது. ஆண்டுக்கு ஆறு மாதங்கள் மட்டுமே எங்களுக்கு வேலை இருக்கும். அடுத்த ஆறு மாதங்கள் வேறு வேலை தேடிச்
சென்றுவிடுவோம்.

ஆனால், எனக்குத் தெரிந்த ஒரே வேலை இது மட்டும் தான். இந்தக் காலக்கட்டத்தில் நாடகத்திற்குத் தேவையான சிவபுராணம், கந்தபுராணம், ராமாயணம் போன்ற நூல்களைப் படித்துக் கொண்டிருப்பேன். வருமானம் இல்லாத இந்தக் காலக்கட்டம் கொடுமையானது. அரசாங்கம் முதியோருக்கான ஓய்வூதியம் போல் எங்களுக்கும் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தால் உதவியாக இருக்கும்” என்கிறார் பல்வேறு விருதுகளைப் பெற்ற ஆதிகேசவன்.

- கொ. தீனேஷ்வர், பயிற்சி இதழாளர்

SCROLL FOR NEXT