அந்தி மஞ்சள் வெயில் படிந்த மண்சாலை ஓரத்துத் தும்பைகளில் தசரதப் பட்டாம்பூச்சிகள் தேன் உறிஞ்சிக்கொண்டிருந்தன. நான் மிதிவண்டியில் குரங்கு பெடலடித்து நல்லிமடத்தின் வடக்குப்புறத்திற்குச் சென்று சேர்ந்தேன். மாராண்டியின் வீடு பாவடிக்கற்களின் ஊடே காமாட்சியம்மன் கோயிலை ஒட்டி இருந்தது. வீட்டைச் சுற்றிலும் கைத்தறி நெசவாளர்களின் நூற்பாவுகள் பாவடிக்கற்கள் இடையேயான மூங்கிலில் காய்ந்துகொண்டிருந்தன.
எருமைக் கட்டுத்தரையும் வெள்ளாட்டுக் கொட்டாரமும் கொண்ட வீடு. வெள்ளாட்டுக்குட்டிகளை அடைக்கும் கொடாப்புப் பக்கத்திலிருந்து மாராண்டி என்னைப் பார்த்துவிட்டு வாசலுக்கு வந்தார். நெற்றியிலும் கைகளிலும் மார்பிலும் திருநீறு பூசி சந்தனப் பொட்டு இட்டிருந்தார். நான் பெரியப்பா சொல்லச் சொன்னதை அப்படியே ஒப்பித்தேன்.
“தைப்பொங்கலுக்கு மக்யாநாளு புத்துக்கண்ணுக்குச் சேவல் அறுக்கணும். பூசை செய்ய மாராண்டிய மறக் காம தோட்டம் வரச் சொன்னாங்க.”மாராண்டி தன் பழுத்த வயோதிகத் தோற்றத்துடன் முன்னகர்ந்து என்னை நெருங்கினார். நான் கால்களால் உந்தி மிதிவண்டியை நகர்த்துவதற்குள் என்னை எட்டிப் பிடித்துக்கொண்டார். கிச்சுக்கிச்சு மூட்டினார். நான் மிதி வண்டியைக் கீழே தள்ளிவிட்டு ஓட முயன்றேன். மாராண்டி மேலும் கெட்டியாகப் பிடித்தபடி பயமுறுத்தும் குரலில் சொன்னார்.
“இனி நீங்க எங்க ஊட்டுலதான் வளரணும். உங்க அப்பா, அம்மாவுக்குப் பையன் கெடையாது.” நான் துள்ளித் தப்பிக்க முனைந் தேன். மாராண்டியின் குரல் கடுமை யாயிற்று. “நானு உங்கள நல்லா வளர்த்தி, ராத்திரியில வேட்டைக்கு வர்ற முனியப்புச்சிக்குப் பலி குடுக்கப் போறேன். நான் அச்சத்தில் அழுது கத்த ஆரம்பித்தேன். பாவடியில் நூற்பாவு களைச் எடுத்துக்கொண்டிருந்த நெச வாளர் வீட்டுப் பெண்கள் ஓடிவந்தனர். மாராண்டியிடமிருந்து என்னைப் பிடித்திழுத்து, அனுப்பிவைத்தனர்.
தைப்பொங்கலுக்கு மறுநாள். மாராண்டி வைகறையிலேயே தோட்டத்திற்குப் பூஜைக்கூடையுடன் வந்து விட்டார். வடமேற்கு மூலையில் இரு கிளுவைவேலிகள் கூடுமிடத்திலிருந்த மண்புற்றை மம்பட்டியால் சிரைத்துச் சுத்தப்படுத்தினார். சேவல்களின் கழுத்தறுத்துச் சொட்டிடும் ரத்தத்தைப் புற்றுக்கண்களுக்குள் சிந்தவிட்டார். விஷப்பாம்புகளை விரட்டும் விருத்தம் பாடியபடி பூஜையைத் தொடங்கினார். பொழுது கிளம்பி மேலேறியபோதும் பூஜை முடிவுறவில்லை. சிறுவர் களான நாங்கள் பசியினால் சோர் வடைந்துவிட்டோம். பெரியப்பாவின் கிட்டத்தில் போய் தணிந்த குரலில் சொன்னோம்.
“பூசைய சீக்கிரத்துல முடிக்கச் சொல்லுங்க.” “மாராண்டி முனி... கிட்டக்கப் போக முடியாதுடா.” நாங்கள் புரியாமல் பெரியப்பா வைப் பார்த்தோம். “நம்ம செங்காட்டூரு முனியப்புச்சி சாட்டுல மாராண்டிதான் முனி. அப்போ நாங்க முனிவிரட்ட படாதபாடு படு வோம்.” அந்த வயதில் முனிவிரட்டுவது பற்றி விளங்கவில்லை. நான் கல்லூரி முடித்திருந்த தருணம். இளமதியம் ஒன்றில் மாராண்டி எங்கள் வீட்டு ஆசாரத்துக் (வீட்டின் முன்னறை) காரைத்தரையில் கால்நீட்டி அமர்ந் திருந்தார். அம்மாவும் பெரியம்மாவும் கேலியாகச் சிரித்தபடி கேட்டனர்.
“மாராண்டிக்குக் கல்யாணமாகி ருச்சுன்னு கேள்விப்பட்டோம்?” மாராண்டியின் முகம் இறுகிற்று. நடந்ததைச் சொல்லத் தொடங்கினார். மாராண்டி பங்குனி உத்திரத் தீர்த்தக்காவடிக்குப் பூஜை செய்ய காவடிக்காரர்களுடன் பழநி போயிருக் கிறார். மலையடிவாரப் பட்டக்காரர் மண்டபத்தில் தங்கியிருந்தபோது காவடிக்காரர்களுக்கு மய்யார்பூசை சாப்பாடு (பத்தியச் சாப்பாடு) சமைப்பதில் உதவியிருக்கிறார். சாப்பிட்ட இலையெடுக்கவும் கிணற் றில் நீர்சேந்தவும் எடுபுடிக்காரியாகப் பெண்ணொருத்தி வந்திருக்கிறார். அப்பெண்ணோடு மாராண்டி சகஜமாகப் பேசிப் பழகியிருக்கிறார். மாராண்டி கொஞ்சம் வசதியாக வாழ்வதாக அப்பெண் தப்புக்கணக்குப் போட்டுவிட்டார். ஒண்டிக்காரியான அப்பெண்ணின் மனம் மாராண்டியோடு சேர்ந்துகொண்டால், தன் கஷ்டஜீவனத்திற்கு முடிவு கிடைக்குமென நம்பியது.
காவடிக்காரர்கள் மலையேறி முருகருக்குத் தீர்த்தம்விட்டு மண்டபம் வந்து ஊருக்குப் புறப்பட்டனர். மாராண்டி காவடிச்சாமான்கள் ஏற்றிய மாட்டுவண்டியில் ஏறியபோது அப்பெண்ணும் உடன் ஏறி அமர்ந்து கொண்டார். வெள்ளந்தியான மாராண்டி தப்பாக நினைக்கவில்லை.
மாட்டுவண்டி ஓட்டியவருக்குச் சந்தேகம் ஏற்பட்டுக் கேட்டிருக்கிறார். அப்பெண் மாராண்டியைக் கல்யாணம் செய்துகொண்டதாகக் கூறியிருக் கிறார். ஊர் சிறுவர்களையெல்லாம் மிரட்டும் மாராண்டி, முதன்முறையாகப் பயந்துபோனார். காவடிக்காரர்கள் தலையிட்டு அப்பெண்ணை மாட்டு வண்டியிலிருந்து இறங்கவைத்தனர்.
சட்டென மாராண்டி எழுந்தார். சாமியாடும் தோரணையில் கால்கள் அடவுகட்டின. “அன்னிக்கு அவ மட்டும் மாட்டுவண்டியவுட்டு எறங்காம போயிருந்தா, நானு முனியாடி அவ கொடலை உறுவி மாலைபோட்டிருப்பேன்.” மாராண்டி சாந்தமடைய வெகு நேரமாயிற்று. அதன் பின்புதான் நான் முனியப்புச்சி சாட்டு பற்றிச் செங்காட்டூருக்குள் விசாரித்தேன். உறவினர் பொன்.ராஜேந்திரன் மட்டும் தன் அரும்புமீசைப் பருவத்தில் பார்த்த முனிவிரட்டை விவரித்தார். முனிவிரட்டு என் கண்களுக்குள் காட்சிகளாக விரிந்தது.
அப்பொழுது சித்தாத்ரி வருடம். பருவமழை பொய்த்த காலம். மழை வேண்டி ஊர்காரர்கள் எட்டு தின முனியப்புச்சி சாட்டைத் தொடங்கினர். மாராண்டி விரதமிருந்து முனி ரூபம் தரித்தார். எட்டாவது தின நடுநிசியில் செம்மறிக் கிடாய்கள் பலியிட்டுக் குடல்கள் உருவி முனிக்கு மாலையிட்டனர். எட்டுத்திக்கும் எறிசோறிடச் செம்மறிகளின் ரத்தம் கலந்த சுடுசோற்று மண்கலயத்தை முனி ஏந்திக்கொண்டது. கொட்டுகள் முழங்கி, கொம்புகள் ஊதப்பட்டன. வீடுகளுக்குள் அடைந்துகொண்ட பெண்களும் குழந்தைகளும் பயந்து நடுங்கினர்.
முனி ஊரை வலம்புரியாகச் சுற்றியது. இளவட்டங்கள் கம்புகளுடன் முனிவிரட்டினர். முனி உயிர்பலி வாங்காமல் ஊரை விட்டுப் போகமறுத்தது. காவு கொடுக்காமல் முனியை விரட்ட விடியக்காலையானது. கனமழையும் இறங்கிற்று. உடனே நான் முனிவிரட்டுக் கதையை எழுதி பிரபல வார இதழ் ஒன்றுக்கு அனுப்பி, பிரசுரமாகிவிட்டது.
நண்பர்கள் தையற்கடையில் வைத்து மாராண்டியிடம் அவரது கதை பிரசுரமாகியிருந்த பக்கங்களைக் காட்டினர். மாராண்டி ஓவியத்தையும் எழுத்துகளையும் உற்றுநோக்கினார். பின் என்னை நெருங்கி வந்து கிச்சுகிச்சுமூட்டினார். முனியின் விரல்கள் என்னை ஆசீர்வதித்தாக உணர்ந்தேன்.
(மனிதர்கள் தோன்றுவார்கள்)
- shriramabhi07@gmail.com