கடலில் மிதவைகள் அமைத்து பாசி வளர்க்கும் முகம்மது நூஹ். 
உயிர் மூச்சு

கடலில் விவசாயம் செய்து அசத்தும் விவசாயி

எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: நிலத்தில் மட்டுமல்ல; கடலிலும் விவசாயம் செய்ய முடியும் என்பதை 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிரூபித்து வருகிறார் முகம்மது நூஹ் (44) என்ற கடல் விவசாயி. ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளான மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடற்பகுதியில் மீன்வளம் அண்மைக்காலமாக குறைந்து வருவதால், மீனவர்கள் மாற்றுத் தொழில்களை நோக்கிச் செல்கின்றனர்.

இதனால் கூண்டுகள் அமைத்து மீன் வளர்க்கவும், மிதவைகள் அமைத்து பாசிவளர்க்கவும் மத்தியக் கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையம் (CMFRI) பயிற்சி அளித்தது. இதில் பயிற்சி பெற்ற மண்டபம் முனைக்காடு பகுதியைச் சேர்ந்த முகம்மது நூஹ் (44) என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக கடலில் கூண்டு அமைத்து கோபியா மற்றும் கொடுவா மீன்களையும், மிதவைகள் அமைத்து பாசியும் வளர்த்து வருகிறார்.

          

இந்தக் கடல் விவசாயம் குறித்த தனது அனுபவங்களை ‘நிலமும் வளமும்' வாசகர்களுக்காக அவர் பகிர்ந்து கொண்டார். மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தில் பயிற்சி பெற்ற நான், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கடலில் கூண்டு அமைத்து மீன் வளர்த்து வருகிறேன்.

கடற்கரையில் இருந்து குறைந்தபட்சம் 100 மீட்டரில் இருந்து அதிகபட்சம் 2 கி.மீ. வரை கடலில் மீன் பண்ணைகளுக்கான கூண்டுகள் அமைக்கலாம். இதற்காக 6 மீட்டர் சுற்றளவு கொண்ட மிதவை கூண்டை இரும்பு மற்றும் பாலி எத்திலினைக் கொண்டு அமைக்க வேண்டும். அதன் நடுவில் குறைந்தபட்சம் 7 மீட்டர் கடலுக்குள் மூழ்கிய நிலையில் வலையை அமைக்க வேண்டும்.

ஒரு கூண்டுக்குள் 25 கிராம் எடை கொண்ட அதிகபட்சமாக 1,000 கோபியா, கொடுவா உள்ளிட்ட மீன் குஞ்சுகளை விடலாம். மீன் குஞ்சுகளுக்கு உணவாக புழுக்கள், பாசிகள், சிறியரக மீன்களைக் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு மீன் குஞ்சும் 10 மாதத்தில் ஒன்றரை முதல் இரண்டு கிலோ வரை எடை கொண்டதாக வளரும். ஒரு கிலோ மீன் அதிகப்பட்சம் ரூ.450 வரை விலை போகும். 10 மாதத்தில் ஒரு கூண்டுக்கு ஒரு டன் வரை மீன் மகசூல் எடுக்கலாம். ஒரு கூண்டுக்கு செலவு போக சுமார் ரூ.2 லட்சம் லாபம் கிடைக்கும்.

கோபியா மீன்களுக்கு உலக அளவில் கடும் கிராக்கி உள்ளது. புரதச்சத்து நிறைந்த இந்த மீன்களை வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களும், வெளிநாட்டினரும் போட்டிப்போட்டு வாங்குவதால் இதற்கான ஏற்றுமதி வாய்ப்புகளும் பிரகாசமாக உள்ளன.கொடுவா மீன் குஞ்சுகளை ஆந்திராவிலிருந்து வாங்குகிறோம். கொடுவா மீனை விட, கோபியாமீன்கள் அதிகம் லாபம் தரக்கூடியவை. வேகமாகவும் வளரும். தற்போது கோபியா மீன் குஞ்சுகளுக்கு தட்டுப்பாடு உள்ளது. இந்தத் தட்டுப்பாட்டைப் போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாசி வளர்ப்பு: கூண்டுக்குள் மீன் வளர்ப்பு போலவே, கடல் பாசி வளர்ப்பும் இங்குள்ள மீனவர்களுக்கு லாபம் தரும் தொழிலாக உள்ளது. ஒருங்கிணைந்த பண்ணைய முறையில், மீன் வளர்ப்புடன் சேர்த்து கடல் பாசியையும் வளர்த்து வருகிறேன். உணவு பதப்படுத்துதல், ஊறுகாய், ஐஸ்க்ரீம், பால் பொருட்கள், ஜெல்லி, பானங்கள், நறுமணங்கள் தயாரிப்பு, கால்நடை, கோழி, செல்லப் பிராணிகளுக்கான தீவனங்கள் தயாரிப்பு ஆகியவற்றிலும், விவசாய நிலங்களுக்கு இயற்கை உரமாகவும் கடல் பாசி பெருமளவில் பயன்படுகிறது.

மூங்கில்களை சதுர அல்லது செவ்வக வடிவில் மிதவைகளாக செய்து, கடலில் மிதக்க விட வேண்டும். அவற்றின் மீது நார் கயிறு அல்லது நைலான் கயிறுகளில் பாசியின் நாற்றை வைத்து, அந்த மிதவைகளைக் கடலில் கல் நங்கூரம் துணையுடன் மிதக்க விட வேண்டும். இதில் ஒரு கிலோ ‘கப்பா பைகஸ்' எனும் கடற்பாசியை கயிற்றில் கட்டி கடலில் போடும்போது, ஒன்றரை மாதத்தில் அதிகபட்சம் 10 கிலோ வரை வளர்ந்து, மகசூல் கொடுக்கிறது.

காய வைக்கப்பட்ட பாசி, அதன் ரகத்திற்கு ஏற்ப கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை வியாபாரிகள் விலை கொடுத்து வாங்கிச் செல்கின்றனர். மாதம் ஒன்றுக்கு 300 கிலோ கடல் பாசி உற்பத்தி செய்யும் ஒருவர், குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரம் வரை வருமானம் ஈட்ட முடியும். இவ்வாறு முகம்மது நூஹ் தெரிவித்தார். இந்த மீன்வளர்ப்பு மற்றும் பாசி வளர்ப்பை வேளாண்மைத் தொழிலாக மத்திய, மாநில அரசுகள் அங்கீகரிக்க வேண்டும்.

கடலில் கூண்டில் வளர்க்கும் மீன்களையும், கடலில் மிதவைகளில் வளர்க்கும் பாசிகளையும் வாங்குவதற்கு கொள்முதல் நிலையங்களை உருவாக்க வேண்டும். வங்கிக் கடன், காப்பீடு வழங்க வேண்டும் போன்றவை கடல் விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கைகளாக உள்ளன. இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றினால், கடல் விவசாயத்தில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் கடலை சார்ந்து வாழும் மீனவர்களின் வாழ்க்கைத் தரமும் மேம்படும்.

- (தொடர்புக்கு: 98948 40382)

- mohamedrafi.s@hindutamil.co.in

SCROLL FOR NEXT