நம் நாட்டில் கோழிகளுக்கு அடுத்து, முட்டைகளுக்காக வாத்துகள் அதிக அளவில் வளர்க்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், செங்கல்பட்டு, நாமக்கல், காஞ்சிபுரம், வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் வாத்து வளர்ப்பு அதிக அளவில் நடைபெற்று வருகிறது. வாத்துகள் பெரும்பாலும் எங்கெல்லாம் மேய்ச்சல் நிலம், குளம், குட்டைகள் இருக்கின்றதோ, அங்கெல்லாம் வாத்துகளை ஓட்டிச் சென்று மேய்த்து வளர்க்கும் முறை நம் மாநிலத்தில் மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா முதலிய அண்டை மாநிலங்களிலும் காணப்படுகிறது.
விவசாயம் சார்ந்த ஒருங்கிணைந்த பண்ணையத்திலும் வாத்துகளை வளர்க்க முடியும்.வாத்துகள் கோழிகளை விட அதிக முட்டையிடும்
திறன் உடையவை. வாத்து முட்டையின் எடை கோழி முட்டையின் எடையை விட 15 முதல் 20 கிராம் அதிகமாக இருக்கும். கோழிகளுக்கு கொட்டகை அமைப்பதுபோல அதிகம் செலவு செய்து வாத்துகளுக்கு கொட்டகைகள் அமைக்கத் தேவையில்லை. இரவில் வாத்தை அடைத்து வைப்பதற்கு சிறு மூங்கில் பட்டி இருந்தால் போதுமானது.
வாத்துகள் அதிகாலையில் 5 மணி முதல் முட்டையிட ஆரம்பிக்கின்றன. காலை 9 மணிக்குள் 95 சதவீத வாத்துகள் முட்டையிடுவதால், அதன் பிறகு மேய்ச்சலுக்கு அனுப்பி விடலாம். வாத்துகள் இரண்டு முதல் மூன்று வருடம் வரை தொடர்ந்து முட்டையிடும் தன்மை கொண்டவை. கோழிகளைப் போல வாத்துகளை எளிதில் நோய்கள் தாக்குவதில்லை.
முட்டைக்காகவும், இறைச்சிக்காகவும் வளர்க்கப்படும் வாத்துகளில் பல இனங்கள் உள்ளன. முட்டையிடும் இனத்தில் காக்கி கேம்பல் என்பது சிறந்த இனம் ஆகும். இவை, ஆண்டுக்கு 250 முதல் 300 முட்டைகள் வரை இடும். இதற்கு அடுத்தபடியாக, இந்தியன் ரன்னர் இனம், 200 முதல் 250 முட்டைகள் வரை கொடுக்கும். இறைச்சி இன வாத்துகளில் ‘பெக்கின்’ முக்கிய இனம் ஆகும். இது, 8 வாரங்களில் 2 கிலோ வரை வளரும் திறன் கொண்டது.
வாத்துக் குஞ்சுகளை முதல் மூன்று வாரம் வரை மிகவும் கவனமாக வளர்க்க வேண்டும். வாத்துக் குஞ்சுகளுக்கு முதல் வாரத்தில் 90 டிகிரி பாரன்ஹீட் மற்றும் இரண்டாம் வாரம் 85 டிகிரி மற்றும் மூன்றாம் வாரம் 80 டிகிரி பாரன்ஹீட் இருக்குமாறு செயற்கை முறையில் வெப்பம் பராமரிக்க வேண்டும். முட்டையிடும் வாத்துகளுக்கு ஆழ்கூளமுறையில் வளர்க்க 2 சதுர அடி இடவசதி வேண்டும்.
வாத்துக் குஞ்சுகள் கோழிக்குஞ்சுகளை விட வேகமாக வளரக்கூடியவை. ஆதலால் புரதச்சத்து அதிகமுள்ள தீவனத்தை வாத்துகளுக்கு அளிக்க வேண்டும். முதல் 24 வாரங்களுக்கு ஒரு வாத்துக்கு சராசரியாக 18 கிலோ தீவனமும், முட்டையிடும் பருவத்தில் ஒரு வருடத்திற்கு 44 கிலோவும் தேவைப்படுகிறது.
ஒரு முட்டையிடும் வாத்து ஒரு நாளைக்கு 120 கிராம் தீவனம் உட்கொள்கிறது. வாத்துப் பண்ணையாளர்கள் வாத்துகளின் எண்ணிக்கையை டஜன் கணக்கில் கூறுகின்றனர். ஒரு பண்ணையில் குறைந்தது 10 டஜன் முதல் அதிகமாக 50 டஜன் வரை வளர்க்கின்றனர். ஒரு முட்டை ரூ.10, அதிகப்படியான வளரும் பருவ வாத்து ரூ.100, ஒரு கிலோ உயிர் எடை ரூ.150 என பண்ணையாளர்களால் விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது குறைந்த முதலீட்டில், கணிசமான லாபம் பெறும் வகையில் வாத்து வளர்ப்புத் தொழில் உள்ளது. வாத்து முட்டைகள் தமிழ்நாட்டில் அதிகள
வில் உற்பத்தி செய்யப்பட்டாலும், அவை கேரளா மாநிலத்துக்கு அதிக அளவில் விற்பனைக்காக செல்கின்றன. வாத்து இறைச்சியில் மனிதர்களுக்குத் தேவையான அமினோ அமிலங்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள், முக்கியமாக அதிக அளவிலான பன்செறிவுறாக் கொழுப்பு அமிலம் உள்ளது. இந்தக் காரணங்களால் தற்போது வாத்து இறைச்சி மக்களிடையே பிரபலம் அடைந்து வருகிறது.
அதேபோல், அசைவ ஹோட்டல்களில் மட்டன், சிக்கன், காடை போன்று வாத்து இறைச்சி உணவு வகைகளும் அதிகரிக்கும் என்றும், இறைச்சிக் கடைகளில் கோழி இறைச்சியைப் போல வாத்து இறைச்சி விற்பனையும் எல்லா பகுதிகளிலும் அதிகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வாத்து வளர்ப்புத் தொழிலுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்பது நிச்சயம்.
- (கட்டுரையாளர், சென்னை காட்டுப்பாக்கம் கால்நடை அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர். தொடர்புக்கு: 9940590238)