பாரம்பரிய விதை நெல் தெளிக்கும் கவிதா. 
உயிர் மூச்சு

ஆசிரியர் பணியைத் துறந்தார்: 110 பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்கும் கவிதா

ஆ.நல்லசிவன்

விவசாயத்தின் மீது அதிகரித்த ஆர்வம் காரணமாக ஆசிரியர் பணியிலிருந்து விலகிய கவிதா, இப்போது பலருக்கு வழிகாட்டும் முன்னோடி இயற்கை விவசாயியாகப் பரிணமித்துள்ளார். இவர் 110 பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாத்து வருகிறார். பழநி அடுத்துள்ள ஆயக்குடி கிராமத்தைச்சேர்ந்த கவிதா, தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். விவசாயத்தின் மீது ஆர்வம் அதிகரித்ததால், ஆசிரியர் பணியிலிருந்து விலகி முழு நேர விவசாயி ஆகிவிட்டார்.

இது தொடர்பாக அவருடன் நடத்திய உரையாடலில் இருந்து… பழநி அடுத்துள்ள ஆயக்குடி கிராமத்தில் இயற்கையோடு ஒன்றியிருக்கும் தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறோம். நான் பழநியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தேன். அப்போது, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் குறித்தும், இயற்கை விவசாயம் குறித்தும் நிறைய படிக்க வாய்ப்பு கிடைத்தது. ஒரு கட்டத்தில் நாமும் முழுநேர விவசாயத்தில் ஈடுபடலாமா என்ற ஆர்வம் ஏற்பட்டது.

          

இது குறித்து குடும்பத்தாரிடம் விவாதித்தபோது, அவர்களும் ஒப்புக்கொண்டனர். இதனால் ஆசிரியர் பணியை விட்டு விவசாயத்துக்கு வந்துவிட்டேன். இதையடுத்து, 2016இல் ஆயக்குடியில் 16 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு வாங்கினோம். முதல் வருடம் கலப்பின விதைகள், ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தியதால் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கவில்லை. மேலும், நஷ்டமும் ஏற்பட்டது. அதன் பின்னர், நம்மாழ்வார் வழியில் முழுமையான இயற்கை விவசாய சாகுபடி செய்வது என்று முடிவு செய்தேன்.

அதே நேரத்தில், இயற்கை விவசாயத்துக்கு பாரம்பரிய நெல் ரகங்கள்தான் ஏற்றவை என்பதை அறிந்து கொண்டேன். இதற்காக, தமிழகத்தின் பல மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு சென்று, பாரம்பரிய நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளை நேரில் சந்தித்து, அவர்களின் அனுபவங்களைக் கேட்டறிந்தேன்.

இந்த சந்திப்புகள் எனக்கு நம்பிக்கையைக் கொடுத்தன. இது மட்டுமின்றி, நம் நிலத்தில் உடனேயே அதிக விளைச்சலை எதிர்பார்க்க முடியாது என்பதையும், இயற்கை விவசாயத்துக்கு ஏற்ற வகையில் நிலத்தை பண்படுத்தி, மண்ணின் வளத்தைப் பெருக்க சில ஆண்டுகள் தேவைப்படும் என்பதையும் புரிந்து கொண்டேன்.

அதனடிப்படையில் நிலத்தைப் பண்படுத்தி, முதலில் 13 ஏக்கரில் தூயமல்லி, பூங்கார், காட்டுயானம், கூம்பாளை உள்ளிட்ட பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்யத் தொடங்கினேன். நான் சாகுபடி செய்த பாரம்பரிய ரகங்களில் இருந்து 110 வகையான நெல் வகைகளின் விதைகளை சேகரித்து, பாதுகாத்து வருகிறேன்.

பாரம்பரிய நெல் சாகுபடியில் ஈடுபட ஆர்வமுடன் வரும் விவசாயிகளுக்குத் தேவைப்படும் விதைகளை நான் இப்போது விநியோகம் செய்கிறேன். அதேபோல், பாரம்பரிய அரிசி வகைகளை விரும்பும் உள்ளூர் நுகர்வோருக்கு நேரிலும், வெளியூரில் இருப்பவர்களுக்கு பார்சல் வழியாகவும் அரிசி விற்பனை செய்கிறேன்.

இயற்கை விவசாயத்தின் மீது நான் வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை. இப்போது பாரம்பரிய நெல் சாகுபடியில் நல்ல விளைச்சல் கிடைக்கிறது. இது தவிர, 3 ஏக்கரில் மா, கொய்யா, தென்னை மற்றும் காய்கறிகளையும் இயற்கை முறையில் சாகுபடி செய்து வருகிறேன்.

இப்போது எனக்கு இயற்கை விவசாயத்தில் முழு நம்பிக்கை கிடைத்து விட்டது. விவசாயிகளுக்கும், விவசாயத்தில் ஆர்வமுள்ள பலருக்கும் இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதை இப்போது பிரதானப் பணியாக செய்து வருகிறேன். இவ்வாறு கவிதா கூறினார்.

இயற்கை விவசாயத்தில் காட்டும் பெரும் ஈடுபாட்டின் பலனாக, நம்மாழ்வார் விருது, நெல் ஜெயராமன் விருது என பல விருதுகள் இந்தப் பெண் விவசாயியைத் தேடி வந்திருக்கின்றன. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை விவசாயம் பற்றி நம்மாழ்வார் பேசத் தொடங்கிய காலத்தில், தமிழ்நாட்டில் நிச்சயமாக இது ஒரு மக்கள் இயக்கமாக மலரும் என்று நம்பிக்கை தெரிவித்தார். நம்மாழ்வாரின் நம்பிக்கையை உண்மையாக்கிய சாட்சியாக, கவிதா போன்ற நூற்றுக்கணக்கான விவசாயிகள் இப்போது தமிழ்நாடு முழுவதும் இயற்கை விவசாயத்தை ஓர் இயக்கமாகவே நடத்தி வருகிறார்கள்.

(தொடர்புக்கு: 92453 93394)

- nallasivan.a@hindutamil.co.in

SCROLL FOR NEXT