‘வரும்முன் காப்பது நல்லது’ எனச் சொல்வார்கள். நோய் வந்த பிறகு குணப்படுத்துவதற்குப் போராடுவதைவிட, நோய் வராமல் தடுப்பதே புத்திசாலித்தனம். அதேநேரத்தில் நம்மைப் பல்வேறு நோய்களிலிருந்து காப்பாற்றுபவை தடுப்பூசிகள். தடுப்பூசி என்பது மனித உடலில் நோய்
எதிர்ப்பு ஆற்றலை உருவாக்கும் அற்புதமான மருத்துவக் கண்டுபிடிப்பு. காசநோய், டிப்தீரியா, பெர்டுஸிஸ், ரண ஜன்னி, போலியோ, மஞ்சள் காமாலை போன்ற பல உயிர்க்கொல்லி நோய்களைத் தடுப்பதில் இது முக்கியப் பங்காற்றுகிறது.
இந்திய அரசு ‘பல்ஸ் போலியோ திட்டம்’ என்கிற பெயரில் 1995இல் தொடங்கிய திட்டம், இன்று இந்தியாவை போலியோ இல்லாத நாடாக மாற்றியுள்ளது. தற்போது நாடு முழுவதும் ‘மிஷன் இந்திர தனுஷ்’ திட்டத்தின்கீழ் ஒவ்வொரு குழந்தைக் கும் 12 முக்கிய நோய்களுக்கு எதிரான தடுப்பூசியை அரசு அளிக்கிறது அவை: பிசிஜி (காசநோய்க்கு), டிபிடி (தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி), ஓபிவி/ஐபிவி (இளம்பிள்ளை வாதம்), எம்.ஆர். (தட்டம்மை, ருபெல்லா), ஜெஇ தடுப்பூசி (ஜப்பான் என்செபலைட்டிஸ்).
தடுப்பூசியின் பங்கு:
* சில தீவிர நோய்களுக்கு எந்தச் சிகிச்சையும் இல்லை. அவை நம் ஆரோக்கியத்தில் கடுமையான தீங்கை விளைவிக்கும் அல்லது மரணத்திற்குக் கூட வழிவகுக்கும். எனவே, மக்களைப்பாதுகாப்பாக வைத்திருப்பதில் நோய்த் தடுப்பு முக்கியப் பங்காற்றுகிறது.
* தடுப்பூசிக்கு ஆதரவும் எதிர்ப்பும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் டிப்தீரியா, பெர்டுஸிஸ், டெட்ட னஸ், கக்குவான் இருமல், போலியோ, தட்டம்மை போன்ற நோய்களால் ஆண்டுதோறும் 35 - 50 லட்சம் இறப்புகளைத் தடுப்பூசி தடுக்கிறது. கரோனாப் பெருந்தொற்று பரவு வதைத் தடுப்பதில் தடுப்பூசியின் முக்கியத்துவம் உலகுக்கு நன்றாகவே உணர்த்தப்பட்டது.
* பலவீனமான அல்லது செயலிழந்த நோயை உண்டாக்கும் நுண்ணுயிரி யின் அளவை மனித உடலில் செலுத்து வதன் மூலம் நோய்த்தடுப்பு மருந்து செயல்படுகிறது. எதிர்காலத்தில் அந்த நுண்ணுயிரியின் செயலில் உள்ள வடிவம் உடலில் நுழைந்தால், அந்த நுண்ணுயிரிக்கான எதிர்வினை யைக் கண்டறிய இது உடலுக்கு உதவுகிறது.
தடுப்பூசியின் நன்மைகள்
* நோய்த் தடுப்பு மருந்து குழந்தையைக் கொடிய நோய்களிலிருந்து பாது காக்கும். ஒரு காலத்தில் உலகின் பல பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்திய, உயிர்களைப் பலிவாங்குவதாக அறியப்பட்ட நோய்கள், இன்று உலகளாவிய தடுப்பூசி இயக்கங்களின் காரணமாகக் குழந்தைகளை பெருமளவு பாதிக்கவில்லை.
* தொற்றுநோய்கள் பரவுவதைக் குறைப்பதில் தடுப்பூசிகளின் பங்கு இன்றியமையாதது. ஏற்கெனவே பெரியம்மை (small pox) போன்ற நோய்களை அகற்றுவதில் தடுப்பூசி பங்காற்றி உள்ளது.
* தடுப்பூசிகள் தனிநபரை மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதுகாக்கின்றன. தடுப்பூசிகள் ‘சமூக நோய்ப்பாதுகாப்பு’ எனப்படும் நிலையை உரு வாக்க உதவுகின்றன. ஒரு நோய்க்கு எதிராக குறிப்பிட்ட சதவீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டால், அது அதன் பரவலை முற்றிலுமாக நிறுத்த உதவும்.
* பொதுவாகத் தடுப்பூசிகள் செலவு குறைந்தவை. குறிப்பிட்ட நோய் களுக்கு எதிராகப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான மலிவான வழி. அதாவது சிகிச்சை செலவு, நோயின் போது ஏற்படும் உடல், மன அதிர்ச்சி-காயத்துடன் ஒப்பிடும்போது தடுப்பூசிக்கான செலவு குறைவு.
* தடுப்பூசிகள் பல்வேறு கட்டங் களில் பரிசோதிக்கப்பட்டு, நோய்களைத் தடுப்பதற்கான பாதுகாப்பான, பயனுள்ள வழியாகக் கருதப்ப டுகின்றன. காய்ச்சல், வலி, வீக்கம், சிவந்துபோதல் போன்ற லேசான பக்க விளைவுகளை அவை ஏற்படுத்தலாம். எனினும், ஒட்டுமொத்தமாகப் பாது காப்பானவை. ஏனெனில் கடுமையான சோதனைகளுக்குப் பிறகே அவை அங்கீகரிக்கப்படுகின்றன.
* தடுப்பூசிகள் தற்போதைய தலை முறைக்கு மட்டுமல்ல, எதிர்காலச் சந்ததியினரையும் பாதுகாக்க உதவுகின்றன. உதாரணமாக, தடுப்பூசி களால் பெரியம்மை பாதிப்பு இல்லை என்பதால், வருங்காலச் சந்ததியினர் அதன் அபாயத்தை எதிர்கொள்ள மாட்டார்கள்.
ரூபெல்லாவுக்கு (Rubella)எதிராகத் தடுப்பூசி செலுத்திக் கொண்டால், கர்ப்பிணிப் பெண்கள் அதைத் தங்கள் குழந்தைகளுக்குக் கடத்தும் அபாயம் குறைகிறது. அதனு டன் தொடர்புடைய பிறவிக் குறைபாடுகளைத் தவிர்க்கவும் வாய்ப்பு ஏற்படுகிறது.
ஆர்வம் வேண்டும்: கொடிய நோய்களுடன் குழந்தைகள் வலியோடும் வேதனையோடும் போராடு வதைப் பார்ப்பது எந்தப் பெற்றோருக்கும் நினைத்து பார்க்க முடியாத வலியைத் தரும். எனவே, குழந்தைகள் பாதுகாப்பாகவும், கொடிய நோய்களிலிருந்து பாதுகாக் கப்படுவதையும் பெற்றோர் உறுதிப்படுத்த வேண்டும். எனவே, குழந்தைகளின் நோய்த் தடுப்பூசி அட்டவணையைத் தொடர்ந்து சரியாகப் பின்தொடர வேண்டும். குடும்பத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும்.
கூடுதல் தடுப்பூசிகள்: தேசியத் தடுப்பூசி அட்டவணையில் (National Immunization Schedule) கூடுதல் தடுப்பூசிகள் சேர்க்கப்பட்டுள்ளன. தொடக்கத்தில் BCG, OPV, DPT, Measles என ஆறு நோய்களுக்கான தடுப்பு மருந்துகள் மட்டுமே அட்டவணையில் இருந்தன. தற்போது, கூடுதலாக ஆறு நோய்களுக்கான (Pentavalant, Rotavirus, Rubella, PCV, JE) தடுப்பு மருந்துகள் சேர்க்கப்பட்டுள்ளன. அனைத்துத் தரப்பு மக்களின் சுகாதாரத்தை உறுதிசெய்யும் நடவடிக்கை இது.
தமிழகம் முன்னணி: தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் முன்னணியில் உள்ளது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மூலம் தடுப்பூசிகள் இலவசமாகச் செலுத்தப் படுகின்றன. மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகவும் தமிழகம் உள்ளது.
இங்கு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளில் அனைத்து வார நாள்களிலும் தடுப்பூசி செலுத்தப்படுவது மக்களுக்கு உதவிகரமாக உள்ளது. இந்தச் சமூகத்தை தொடர்ந்து உயிரோட் டமாக வைத்திருக்க, தடுப்பூசிகளைத் தவறாமல் செலுத்திக்கொள்வோம். ஒவ்வொரு குழந்தைக்கும் முழுமையாகத் தடுப்பூசிகள் செலுத்தப்படுவதை உறுதிசெய்வோம்.
- கட்டுரையாளர்: குழந்தைகள் நல மருத்துவர்; sppillai26@yahoo.co.in