நலம் வாழ

நல்லவரா? கெட்டவரா? | உள்ளங்கையில் ஒரு சிறை 05

டாக்டர் ஜி. ராமானுஜம்

ஒரு திரையரங்கத்துக்குள் நுழைகிறீர்கள். இருட்டில் தடுமாறி இருக்கையில் அமர்கிறீர்கள். உங்கள் இருக்கை உறுத்துகிறது. பக்கத்தில் இருவர் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். எங்கோ பாப்கார்ன் மணம். அவ்வப்போது திறன்பேசி ஒலி. இவை எல்லாவற்றிலும் உங்கள் கவனம் திரும்புகிறது. சற்று நேரம் கழித்து கவனம் மெல்ல மெல்ல திரைப்படத்தில் செல்கிறது. சுற்றி உள்ள விஷயங்கள் இப்போது உங்கள் கவனத்தில் இல்லை, ஒருவேளை அந்தத் திரைப்படம் நன்றாக இருக்கும்பட்சத்தில்!

நம் கவனம் என்பது ‘ஃபோகஸ்லைட்’ போன்றது என ஏற்கெனவே பார்த்தோம். எது முக்கியமோ அதை மையப்படுத்தி (center), நம் கவனத்தைக் குவித்துத் தேவையில்லாததை விளிம்பில் (periphery) வைக்கிறோம். இப்படி வெளியுலகிலிருந்து வரும் தூண்டுதல்களில் எது தேவை, எது தேவையில்லை என்பதை மூளையின் சில பகுதிகள் வடிகட்டி (Filter), முக்கியமான விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்த வைக்கிறது.

          

அதாவது பிரதமர், முதல்வர் ஆகியோர் போன்று முக்கியத் தலைவர்கள், பிரபலங்களுக்கு வரும் மனுக்கள், கடிதங்களைப் பிரித்து முக்கியமானவற்றை மட்டும் அவர்களின் பார்வைக்கு வைக்கும் அந்தரங்கச் செயலாளர்கள் இருக்கிறார்கள் அல்லவா? அதுபோல் மூளையின் சில பகுதிகள் தேவையற்ற தகவல்களை வடிகட்டி, கவனம் செலுத்த வேண்டிய விஷயங்களை மட்டும் மூளையில் அதற்குரிய இடத்துக்கு அனுப்பும்.

ஒரு வேதிப்பொருள்: இங்கு ஒன்றை அறிய வேண்டும். நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் அனைத்தும், ஐம்புலன்கள் வழியே மூளைக்குத் தகவல்களாகச் சென்றுகொண்டேதான் இருக்கின்றன. அதில் விளிம்பில் இருப்பது மையத்துக்கும், மையத்தில் இருப்பது விளிம்புக்கும் மாறிக்கொண்டே இருக்கும் (Attention shift). திரையரங்கில் படத்தை ஒன்றிப் பார்க்கும்போது நான்கு வரிசை தள்ளி ஓர் அலறல் சத்தம் கேட்டால், சட்டென்று உங்கள் கவனத்தின் மையம் அங்கு திரும்பிவிடும்.

இப்படித்தான் ஒரு கல்யாண வீடு அல்லது விருந்தில் தட்டேந்தி (பஃபே தான்) உணவருந்திக்கொண்டே உறவினர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். சுற்றி இருக்கும் ஒலிகளை, இரைச்சல்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு அடுத்தவர்களைப் பற்றி அவர் பேசும் வம்புக்கதைகளில் சுவாரசியமாகக் கவனத்தைக் குவிக்கிறீர்கள். சுற்றியுள்ள இரைச்சல் உங்கள் கவனத்தில் இல்லை. அப்போது அருகில் இருக்கும் யாரோ திடீரென உங்கள் பெயரைக் குறிப்பிட்டுப் பேசினால், சட்டென்று உங்கள் கவனம் அதில் சென்றுவிடும்.

ஆர்வமாகத் திரும்பி கவனிக்க ஆரம்பிப்பீர்கள்! உங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்களில் எதில் உங்கள் கவனம் இருக்க வேண்டும் என்பதை முடிவுசெய்வது உங்கள் மூளையின் சில பகுதிகள் என்று பார்த்தோம். குறிப்பாக மூளையின் முன்பகுதி (Frontal lobe), தாலமஸ் (Thalamus) என்னும் பகுதிகள். இச்செயலுக்கு உறுதுணையாக இருக்கும் ஒரு வேதிப்பொருள் டோபமின் (Dopamine) என்னும் அமினோ அமிலம். திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தைக் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து அறிமுகப்படுத்துவார்கள்.

அதுபோல் இவரை நன்றாகக் கவனித்துக்கொள்ளுங்கள்! இவர்தான் நம் கட்டுரைத் தொடரில் அடிக்கடி முக்கியப் பங்காற்ற உள்ளார். நம் கவனம் எதில் செல்லப்போகிறது என்பதை முடிவுசெய்வது, இந்த டோபமின் என்னும் வேதிப்பொருளைச் சுரக்கும் மூளை நரம்புகள்தான். கவனம் குவிக்க உதவுபவை இவைதான்.

இந்த டோபமின் என்னும் வேதிப்பொருளைச் சுரக்கும் மூளை நரம்புகளின் செயல்பாடுகள் குறையும்போது நம்மால் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த முடியாது. கவனத்தை எதில் குவிப்பது என்கிற குழப்பம் ஏற்படும். குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளில் முக்கியமானது கவனச் சிதறல், அதீதத் துறுதுறுப்பு (Attention Deficit Hyper activity) சார்ந்த பாதிப்பு.

இந்தச் சிறுவர்களுக்கு மூளையில் டோபமின் செயல்பாடு குறைவாக இருப்பதால் எந்த விஷயத்திலும் கவனம் குவிக்க முடியாமல் இருப்பார்கள். தொடர்ச்சியாக ஒரு செயலில் அவர்களால் ஈடுபட முடியாது. ஒன்றிலிருந்து பத்துவரை எழுதச் சொன்னால் நான்கிற்குப் பிறகு வேறு எங்கோ திசை திரும்பிவிடுவார்கள். கவனமின்மையால் பொருள்களை மறந்துவிடுவார்கள்.

திசை திரும்பும் கவனம்: இதற்கும் திறன்பேசிகளுக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? புறச்சூழலில் ஆர்வமூட்டும் ஒரு விஷயம் இருந்தால், நம் கவனம் அதில் செல்லும் எனப் பார்த்தோம். இதைச் செய்வதும் டோபமின்தான். நிறைய விஷயங்கள் ஆர்வத்தைத் தூண்டுவதாக இருந்தால் நமது கவனத்தை இந்த டோபமின், ‘இங்கே பார்! அங்கே பார்!’ எனத் திசைதிருப்பிக் கொண்டே இருக்கும். திறன்பேசிகளிலிருந்து வரும் நோட்டிபிகேஷன்கள் நம் கவனத்தை ஈர்க்கக்கூடியவை.

அவை எழுப்பும் ஒலி, அத்தகவல் குறிப்புகளை அறிவிக்கும் அழகான வண்ணமயமான குறியீடுகள் (Symbols, Emojis) என நமது கவனத்தைத் திசைதிருப்புகின்றன. இவற்றில் எல்லாம் என்னவோ முக்கியமான விஷயம் இருக்கிறது என நினைத்து, அவற்றில் எல்லாம் நம் கவனத்தைச் சிதறடித்துக்கொண்டே இருக்கிறோம்.

நிறைய தூண்டுதல்கள் இருக்கும்போது கவனச்சிதறல் ஏற்படும். வீட்டில் சாப்பிடும்போது இட்லி மட்டும்தான் இருக்கிறது என்றால், ஏழெட்டு இட்லிகளை மட்டும் சாப்பிட்டுவிட்டால் வயிறு நிறைந்துவிடும். அதுவே ஒரு பெரிய ஐந்து நட்சத்திர ஓட்டலில் பஃபே விருந்து என்றால் சூப்களே நான்கைந்து இருக்கும்.

‘ஸ்டார்டர்’கள் எனப்படும் தொடக்க உணவு வகைகள் ஏழெட்டு இருக்கும். இதுபோக பத்துப் பதினைந்து உணவுத் தொடுகறிகள், பத்துப் பதினைந்து இனிப்பு ஐஸ்கிரீம் நிலையங்கள் (Food courts) என்றிருந்தால், எதைச் சாப்பிடுவது, எதை விடுவது எனக் குழப்பம் ஏற்படும். இதை எடு, அதை எடு என மூளையில் டோபமின் கொந்தளித்துக்கொண்டிருக்கும். இதையே தான் நமது கவனக்குவிப்புக்கு திறன்பேசிகள் செய்துகொண்டிருக்கின்றன.

கவனத்தைக் குவிக்க உதவும் டோபமினே கவனத்தைச் சிதறடிக்கவும் செய்கிறதா? அப்படி யென்றால் ‘நாயகன்’ திரைப்படத்தில் கேட்பது போல் டோபமின் நல்லவரா? கெட்டவரா? தொடர்ந்து பார்ப்போம்!

(வெளியேறுவோம்)

- drgramanujam@gmail.com

SCROLL FOR NEXT