உலகின் மிகப்பெரிய அலையாத்திக் காடான சுந்தரவனமும் புலி நடமாட்டம் குறித்த எச்சரிக்கைப் பலகையும் | படங்கள்: செந்தில்குமரன் | 
உயிர் மூச்சு

புலிகள் வாழும் ஒரே அலையாத்திக் காடு காடு என்ன சொல்கிறது? - 3

செந்தில்குமரன்

உலகின் மிகப் பெரிய அலையாத்திக் காடு, யுனெஸ்கோ மரபுத் தலம், புவியில் உள்ள மிகவும் தனித்துவமான சூழலியல் தொகுதியான - பரந்த ஆற்றுப் பாசனப்பகுதி, கடல், ஆறுகள், சிற்றோடைகள், கடல் அலைகள் மோதும் சேற்றுப்பகுதிகள் ஆகியவை கலந்த சிக்கலான நிலப்பரப்பு மட்டுமல்ல; உலகில் புலிகள் வாழும் ஒரே அலையாத்திக் காடும் மேற்கு வங்கத்தில் உள்ள சுந்தரவனம் தான்.

உலகில் மிகப் பெரிய அளவுடைய வங்கப் புலிகள் சுந்தரவனத்தில் வாழ்கின்றன. பரந்த ஆறுகளை நீந்திக் கடந்து உப்புத்தன்மை வாய்ந்த, நீர் தேங்கிய சூழலுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக் கொள்ளும் திறனுக்காகப் பெயர்பெற்றவை இங்கு வாழும் புலிகள்.

          

இந்த அழகான நிலப்பரப்பில் மனிதர்களுக்கும் புலிகளுக்கும் இடையே ஆழமான, சிக்கலான மோதல் உள்ளது. சுந்தரவனத்தின் மக்கள் பெரும்பாலும் மீனவர்கள், தேன் சேகரிப்பாளர்கள், மரம் வெட்டுபவர்கள். இப்படித் தங்கள் வாழ்வாதாரத்திற்காகக் காடுகளையும் நீரையும் அவர்கள் சார்ந்துள்ளனர்.

புலிகள் வாழும் இந்த நிலப்பரப்பில் ஒவ்வொரு நாளும், அவர்கள் ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். மறுபுறம், புலிகளும் நெருக்கடியை எதிர்கொண்டுவருகின்றன. அதிகரித்துவரும் கடல் நீர்மட்டம், சூறாவளிகள், சுருங்கிவரும் அலையாத்திக் காடுகள் ஆகியவை அவற்றின் இயற்கையான இரையைக் குறைக்கின்றன.

இதனால் அவை மனிதக் குடியிருப்புகளுக்கு அருகில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. சில நேரம் ஆறுகளை நீந்திக் கடந்து உணவைத் தேடிக் கிராமங்களுக்குள் புலிகள் நுழைகின்றன. இது நிகழும்போது, பயமும் பழிவாங்கலும் தொடர்கின்றன. இரு தரப்புக்கும் பாதுகாப்பை ஏற்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, மனித-புலி எதிர்கொள்ளலைக் குறைக்கும் வகையில் மேற்குவங்க வனத் துறை செயல்பட்டுவருகிறது. புலி தடுப்பு வேலி, சமூக விழிப்புணர்வுத் திட்டங்கள், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கான இழப்பீட்டுத் தொகை போன்ற முயற்சிகள் சகிப்புத்தன்மையையும் நம்பிக்கையையும் வளர்க்க உதவுகின்றன. மாற்று வாழ்வாதாரங்களை ஊக்குவிக்கும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், மோதல் இன்னும் முற்றிலுமாகத் தீர்க்கப்படவில்லை.

சுந்தரவனத்தின் கதை மனித-உயிரின எதிர்கொள்ளலின் கதை மட்டுமல்ல - இது மீளும்தன்மையின் கதையும்கூட. மாறிவரும் இந்த நிலப்பரப்பைப் பகிர்ந்துகொள்ள மனிதர்களும் புலிகளும் போராடிவருகின்றனர். சுந்தரவனத்தைப் பாதுகாப்பது என்பது உலகின் மிகவும் அசாதாரணமான சகவாழ்வுக்கான உதாரணங்களில் ஒன்றைப் பாதுகாப்பதாகும். அங்கு வாழ்வது என்பது மக்களுக்கும் காட்டுயிர்களுக்கும் இடையிலான சமநிலை, புரிதல், மரியாதையைப் பொறுத்தே அமைகிறது.

- கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்; artsenthil@gmail.com

SCROLL FOR NEXT