வேதிவால் குருவி 
உயிர் மூச்சு

வலசை என்றோர் உலக அதிசயம்!

எஸ்.சிவகுமார்

வேடந்தாங்கலில் வெளிநாட்டுப்பறவைகள் குவிந்து இனப்பெருக்கம் செய்கின்றன என்று பலமுறை பத்திரிகைச் செய்திகளைப் படித்திருக்கலாம் அல்லது தொலைக்காட்சியில் செய்தி பார்த்திருக்கலாம். இந்தியாவில் இனப்பெருக்கம் செய்யும் பறவைகள் இந்தியப் பறவைகளே.

வெளிநாடுகளிலிருந்து வலசை வரும் பறவைகள் வடதுருவப் பகுதிகளில் இனப்பெருக்கம் செய்பவையாகவும், அங்கு குளிர்காலத்தில் நிலவும் கடுமையான குளிர், அதனால் ஏற்படும் உணவுப் பற்றாக்குறையைத் தவிர்க்கத் தென்துருவ நாடுகளில் தஞ்சம் தேடி வருகின்றன.

          

நத்தைகுத்தி நாரை, சங்குவளை நாரை, கூழைக்கடா, சாம்பல் நாரை, கொக்கு இனங்களை வலசைப்பறவைகள் எனப் பெரும்பாலோர் நினைக்கிறோம். இவை யாவுமே உள்நாட்டுப் பறவைகள். வாத்துகள் பறப்பதில்லை எனவும் நினைக்கின்றோம்.

ஆனால், பலவகையான மிகச்சிறிய நீர்ப்பறவைகள், நிலவாழ் பறவைகள், பல வாத்து இனங்கள் பல்லாயிரம் கிலோமீட்டர் கடந்து இந்தியா, உள்பட உலகின் தென்பகுதி நாடுகளுக்கு ஆண்டுதோறும் வந்துசெல்கின்றன. சுமார் 25 வகையான வாத்து இனங்கள் இந்தியாவிற்கு வலசை வருகின்றன.

ஆச்சரியம்: சுமார் 17 கிராம் எடைகொண்ட கொசு உள்ளான்கள் (Little Stint) சற்று ஏறக்குறைய 6,000 கிலோமீட்டர் கடந்து இந்தியாவிற்கு வருகின்றன. இவை இவ்வளவு தூரம் பறப்பதற்கான ஆற்றல் எங்கிருந்து கிடைக்கிறது என்று ஆச்சரியமாக உள்ளதா? அவை நன்கு சாப்பிட்டு உடலில் சேகரித்துவைக்கும் கொழுப்பே அவற்றின் எரிபொருளாகும்.

எனவே, நீண்ட தூரம் பயணித்து வலசை வந்துசேர்ந்தவுடன் சுமார் 17 கிராம் இருக்கும் இப்பறவை, திரும்பிச்செல்லும்போது சுமார் 34 கிராம்வரை எடைகூடிக் காணப்படுகிறது. இது மட்டுமன்றி சுமார் 7 கிராம் எடை கொண்ட நிலவாழ் பறவையான பழுப்பு ஈப்பிடிப்பான்கள் (Asian Brown Flycatcher) போன்றவையும் பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவிற்கு வலசை செல்கின்றன.

நம்மில் பெரும்பாலோர் எண்ணுவது போல் நீர்ப்பறவைகள் மட்டுமே வலசை வருவதில்லை. பலவகையான ஈப்பிடிப் பான்கள் (flycatchers), ஆறுமணிக்குருவி (Indian Pitta), இரைகொல்லிப் பறவைகள் (raptors), காட்டு வாலாட்டி (Forest Wagtail), குயில் வகைகள் (cuckoos), கீச்சான்கள் (Shrikes), கதிர்க்குருவிகள் (warblers) போன்ற நிலவாழ் பறவைகளும் வலசைவருகின்றன.

இப்பறவைகளைக் காண்பதற்கு நீண்ட தொலைவிலுள்ள சரணாலயங்களுக்குச் செல்ல வேண்டும் என்பதில்லை. பறவை நோக்கும் ஆர்வம், கூர்ந்து நோக்கும் திறன் இருந்தாலே இவற்றில் பெரும்பாலான பறவைகளை நம் வீடுகளின் அருகிலேயே பார்க்கலாம்.

சவால்கள்: இந்தியாவில் பறவைகள் வலசை பற்றிய ஆய்வின் முன்னோடி பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகமே (Bombay Natural History Society). இக்கழகம் பறவைகளுக்கு வலயமிட்டு (ring) இந்த ஆய்வுகளை 1927இல் தொடங்கியது. இந்தியாவிற்கு ஐந்து கண்டங்களைச் சேர்ந்த 30 நாடுகளிலிருந்து பறவைகள் வந்துசெல்கின்றன.

இந்தியாவிற்கு வலசைவரும் பெரும்பாலான பறவைகள் மத்திய ஆசிய வலசை வழித்தடத்தை (Central Asain Flyway) பயன்படுத்துகின்றன. அக்டோபர் முதல் மார்ச் வரை இந்தியாவில் வலசைப் பறவைகளைக் காண முடியும். வலசை வரும் பறவைகள் உள்பட அனைத்து இந்தியக் காட்டுயிர்களும் இந்தியக் காட்டுயிர் (பாதுகாப்பு) சட்டம் மூலம் பாதுகாக்கப்பட்டவையாக இருக் கின்றன.

இருந்தபோதும், இன்றளவும் வேட்டைத் தடுப்பு பெரும் சவாலாகவே உள்ளது. பல சவால்களை எதிர்கொண்டு பல்லாயிரம் கிலோமீட்டர் கடந்து நமது நாட்டிற்கு விருந்தாளியாக வரும் பறவைகளின் தனித்தன்மை, அவற்றால் நமக்கும் நமது சுற்றுச்சூழலுக்கும் கிடைக்கும் நன்மைகளை உணர வேண்டும்.

வலசைப் பறவைகளை உணவிற்காக மக்கள் வாங்க மறுப்பதே, வேட்டையாடுதல் குறைவதில் பெரும்பங்கு வகிக்கும். வேட்டையாடப் படுதலைத் தாண்டி மோசமான வானிலையை எதிர்கொள்ளுதல், வாழிட இழப்பு எனப் பல சவால்களை வலசைப் பறவைகள் எதிர்கொள்கின்றன.

ஆய்வு முயற்சிகள்: பறவைகள், அவற்றின் வாழிடப் பாதுகாப்பிற்கு, அவற்றின் எண்ணிக்கை, வாழிடத் தரம் போன்றவற்றைத் தொடர்ந்து கண்காணிப்பது மிகவும் அவசியம். இதை உணர்ந்து சர்வதேச ஈரநிலங்கள் அமைப்பின் (Wetlands International) உலகளாவிய நீர்ப்பறவை கணக்கெடுப்பின் ஓர் அங்கமாக ஆசிய நீர்ப்பறவைகள் கணக்கெடுப்பு ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதத்தில் இந்தியாவிலும் நடத்தப்படுகிறது இது போன்ற கணக்கெடுப்புகள், மக்கள் அறிவியல் திட்டங்களில் (Citizen Science – e.g. www.ebird.org) அதிகமான அளவில் மக்கள் பங்கெடுப்பது மிகவும் அவசியம். இதன்மூலம் பறவைகள் பற்றிய தகவல்கள் திரட்டப்படுவதுடன், பறவைகள் பாதுகாப்பு பற்றிய விழிப் புணர்வும் அதிகரிக்கும். இதன்மூலம் சேகரிக்கப்படும் தகவல்கள் பறவைகள், அவற்றின் வாழிடப் பாதுகாப்பில் பெரும் பங்களிக்கும்.

- கட்டுரையாளர், பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழக உதவி இயக்குநர்; s.swaminathan@bnhs.org

SCROLL FOR NEXT