உயிர் மூச்சு

தேனீக்களுக்கு வழிகாட்டும் மின்புலத்திசை | இயற்கையில் அறிவியல் 05

ஜோசப் பிரபாகர்

நாம் எங்காவது வழிமாறிவிட்டால் உடனே திறன்பேசியில் ஜி.பி.எஸ். (புவி இடங்காட்டி) உதவியை நாடுகிறோம். சரி, அங்குமிங்கும் அலைந்து திரிந்து தேனெடுக்கும் தேனீக்கள் வழிமாறிவிட்டால் என்ன செய்வது? பரிணாம வளர்ச்சி அதற்கு ஓர் இயற்கையான புவி இடங்காட்டியைக் கொடுத்திருக்கிறது. சூரிய ஒளியின் தளவிளைவுப் பண்புதான் (polarization of sun light) அந்த இடங்காட்டி.

ஒளியின் தளவிளைவு:
நாம் காணும் வானவில்லின் ஏழு வண்ண ஒளி, ரேடியோ அலை, நுண் (மைக்ரோ) அலை, எக்ஸ்ரே கதிர் என எல்லாவித ஒளியும் மின்காந்த அலைகளே. ஒளிக்கு மின்புலமும் காந்தப்புலமும் உண்டு. இவை இரண்டும் எப்போதும் ஒன்றுக்கு மற்றொன்று செங்குத்தாக இருக்கும். சூரிய ஒளியினுடைய மின்புலத்தின் திசை எப்போதும் ஒரே திசையில் இருக்காது. அது சீரற்ற முறையில் மாறிக்கொண்டிருக்கும்.

ஆனால், வளிமண்டலத்துக்குள் நுழையும் சூரிய ஒளியானது காற்று மூலக்கூறுகளில் மோதிச் சிதறும்போது, அதன் மின்புலம் குறிப்பிட்ட ஒரு திசையை நோக்கி மட்டுமே இருக்கும். ஒளியினுடைய மின்புலத்தின் திசை இப்படி மாறாமல் ஒரே திசையில் மட்டும் இருந்தால், அதைத் தளவிளைவு அடைந்த ஒளி என்கிறோம். அதாவது மின்புலமானது ஒரு குறிப்பிட்ட தளத்திலேயே இருக்கிறது. காற்று மூலக்கூறுகளால் சிதறும் சூரிய ஒளியானது, குறிப்பிட்ட சில திசைகளில் இந்தத் தளவிளைவை அடைகிறது.

          

தேனீ எவ்வாறு பயன்படுத்துகிறது? - நம் கண்களால் சூரிய ஒளியின் தளவிளைவுப் பண்பைக்கண்டறிய முடியாது. ஆனால், தேனீக்களுக்கு இந்த தளவிளைவு அடைந்த சூரிய ஒளியானது ஒரு திசைகாட்டி (காம்பஸ்) போலப் பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக, கிழக்குத்திசையில் இருந்து சூரிய ஒளி வந்து ஒரு காற்று மூலக்கூறில் மோதினால், அத்திசைக்குச் செங்குத்தான திசையில் (வடக்கு, தெற்கு, மேல், கீழ்) சிதறும் சூரிய ஒளியானது தளவிளைவு அடையும்.

அதாவது மின்புலம் ஒரு குறிப்பிட்ட திசையில் மட்டுமே இருக்கும். பூக்களின் பூந்தேனைச் சேகரிக்கும் தேனீக்கள் சூரிய ஒளியின் இந்தப் பண்பைப் பயன்படுத்திப் பகலில் குறிப்பிட்ட நேரத்தில் சூரியன் எந்தத் திசையில் இருக்கிறது என்று கண்டறிந்து அதற்கேற்றாற்போல் உணவுத்தேடலை மேற்கொள்கின்றன.

மேகங்களால் சூரியன் மறைக்கப்பட்டாலும்கூடத் தளவிளைவு அடைந்த சூரியஒளியைக் கொண்டு தனக்கு வேண்டிய திசையை நோக்கிச் செல்கிறது. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக அறிவியல் அறிஞர்கள் சூரியஒளியின் தளவிளைவுப் பண்பை, தேனீக்கள் எவ்வாறு பயன்படுத்துகின்றன என்று பரிசோதனைகள் மேற்கொண்டு ராயல் சொசைட்டி பிலாசபிகல் டிரான்சாக்சன்ஸ் இதழில் வெளியிட்டுள்ளனர்.

தேனீக்களின் இந்த வழிமுறை ட்ரோன் தொழில்நுட்பத் துறையில் முக்கியப் பங்களிக்கிறது. புவி இடங்காட்டி வேலை செய்யாத இடங்களில் பறக்கும் குட்டி ட்ரோன்களுக்குச் சூரிய ஒளியின் தளவிளைவைப் பயன்படுத்திச் சரியான திசையில் எவ்வாறு செல்வது என்பது குறித்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

சாண வண்டுகளும் நிலவும்: இன்னோர் ஆச்சரியமான விஷயத்தை ஸ்வீடன் லுண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆப்ரிக்காவில் உள்ள சில சாண வண்டுகள் இரவில் நிலவின் தளவிளைவடைந்த ஒளியை வைத்து, சாண உருண்டையைத் தனது இருப்பிடத்துக்கு உருட்டிச் செல்கிறது என்று கண்டறிந்துள்ளது.

ஒரு சாண வண்டு இரையைக் கண்டறிந்ததும் அதை உருண்டையாக உருட்டி அவ்விடத்திலிருந்து மிக விரைவாகத் தனது இருப்பிடத்திற்குக் கொண்டுசெல்ல வேண்டும். தாமதித்தால் இன்னொரு சாண வண்டு போட்டிக்கு வந்துவிடலாம். சாண உருண்டையை மிக விரைவாகத் தனது இருப்பிடத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டுமென்றால் அது நேர்க்கோட்டில் அமைய வேண்டும்.

இந்த நேர்க்கோட்டுப் பயணத்துக்குக் காற்றில் பட்டு தளவிளைவடைந்த நிலவின் ஒளியைத் திசைகாட்டிபோலப் பயன்படுத்துகிறது. இது புகழ்பெற்ற நேச்சர் பிரிப் கம்யூனிகேஷன்ஸ் ஆய்விதழில் வந்துள்ளது. சூரிய ஒளியைவிட லட்சம் மடங்கு வலிமை குறைந்தது நிலவின் ஒளி.

ஆனால், இவ்வளவு வலிமை குறைந்த நிலவொளியைக்கூட சாண வண்டுகள் புவி இடங்காட்டிபோலப் பயன்படுத்துவது பரிணாம வளர்ச்சியின் ஆச்சரியம்தான். நகரமயமாக்கலின் விளைவாக ஒளி மாசு அதிகமாவதால் இவ்வண்டுகள் குழம்பிப்போவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நிலா இல்லாத நாள்களில் இந்த வண்டுகள் பால்வெளி மண்டலத்தின் ஒளியை வைத்துத் தனது பாதையை வகுத்துக்கொள்கின்றன என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. எனவே, ஜி.பி.எஸ். போன்ற நவீனக் கருவிகள் நம்மிடம் மட்டுமே இருப்பதாக கர்வம் தேவையில்லை.

- கட்டுரையாளர், இயற்பியல் விரிவுரையாளர்; josephprabagar@gmail.com

SCROLL FOR NEXT