இந்து டாக்கீஸ்

கொலைகளின் இறக்குமதி! | சுட்ட கதை 05

கருந்தேள் ராஜேஷ்

ஒரே கல்லூரியில் படித்துவரும் நெருங்கிய நண்பர்கள் ஒவ்வொருவராகக் கொல்லப்பட்டால் என்ன ஆகும்? இது 80 மற்றும் 90களின் ஹாலிவுட்டில் பரவலாகப் பல படங்களில் பயன்படுத்தப்பட்ட ஒரு வரிக் கதை. அவற்றில் ‘ஸ்கிரீம்’ (Scream), ‘அர்பன் லெஜண்ட்’ (Urban Legend), ’ஐ நோ வாட் யு டிட் லாஸ்ட் சம்மர்’ (I know what you did last Summer) ஆகிய படங்களின் ஒப்புமையைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

இந்த வரிசையில் ஹாலிவுட்டில் வெளியான படம் ‘அர்பன் லெஜண்ட்’ (Urban Legend -1998). ஆனால் இது, 1996இல் வெளியான ‘ஸ்கிரீம்’ ’ படத்தைச் சரமாரியாகச் சுட்டு எடுக்கப்பட்டதாக விமர்ச கர்கள் பொங்கி எழுதினர். உண்மை யிலேயே ‘ஸ்கிரீம்’ படத்தின் பாதிப்பிலேயே ‘அர்பன் லெஜண்ட்’ இருந்தது.

          

ஒரு கல்லூரியின் ‘டார்மிட்டரி’ விடுதி அறையில் தங்கியிருந்த பல மாணவர்களை ஒரு பேரா சிரியர் கோரமாகக் கொலை செய்தி ருப்பார். அந்தப் படுகொலைகள் நடந்து 25 வருடங்கள் ஓடிவிட்டன. தற்போது மீண்டும் அங்கே தங்கியிருக்கும் மாணவர்கள் ஒவ்வொருவராக மர்ம நபரால் கொல்லப்படுகிறார்கள். இறுதியில் தான் கொலைகாரன் யார் என்று தெரியும்.

கொலை செய்யப்பட்ட மாணவர்களில் சிலர், ஒரு கோர விபத்துக்குக் காரணமாகி விடுவார்கள். அந்த விபத்தில் இளைஞன் ஒருவன் அநியாயமாக உயிரிழந்திருப்பான். உயிரிழந்த வனின் காதலியான பிரெண்டா என்பவள், இந்தக் கல்லூரிக்கு வந்து, ‘டார்மிட்டரி’யில் குழுவாகத் தங்கியிருக்கும் மாணவர்களை வரிசையாகக் கொலை செய்வாள்.

படத்தின் இறுதியில், வேறு சில புதிய மாணவர்கள், பிரெண்டா செய்த கொலைகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பார்கள். அப்போது பிரெண்டாவே அங்கு வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வாள். ‘நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பதுபோல் அந்தக் கொலைகள் நடக்கவில்லை; அதன் பின்னணிக் காரணமே வேறு’ என்று பேசத் தொடங்கும்போது திரைப் படம் முடியும்.

இதுதான் ‘அர்பன் லெஜண்ட்’ படத்தின் சுருக்கமான கதை. ‘கட்’ செய்தால் கோலிவுட்! ஒரு கல்லூரி. அங்கே நெருங்கிய நண்பர்களாகச் சில மாணவர்கள். அவர்கள் ஒவ்வொருவராகக் கொலை செய்யப்படுகின்றனர். கல்லூரி கட்டப்படும் முன் அந்த இடத்தில் நாகா என்கிற பெண் உயிரோடு புதைக்கப்பட்டு, அவளது ஆவி சுற்றிவருவதாக ஒரு கதை இருக்கும்.

தவிர, அந்தக் கல்லூரி யிலேயே பல வருடங்களுக்கு முன்பு ஒரு தீவிபத்து நடந்திருக்கும். அதில் தப்பிய ஒரே நபர் அந்தக் கல்லூரியின் முதல்வர் பன்னீர்செல்வம். அவர்தான் கொலை செய்கிறார் என்று மாணவர்கள் சந்தேகப்படுவார்கள். ஆனால் அவரும் கொலை செய்யப்பட்டுவிடுவார்.

இறுதியில், அந்த மாணவர்களின் கூட்டத்தில் இருக்கும் மாயா என்கிற பெண்தான் கொலைகாரி என்று தெரியவரும். ஏன் கொலை செய்தாள் என்பது படம் பார்த்தவர்களுக்கு இந்நேரம் நினைவுக்கு வந்திருக்கும். இதிலும் இறுதியில் சில மாணவர்கள் நாகா என்கிற ஆவியின் கதையைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கையில் அங்கே மாயா வந்து, அந்தக் கதை பற்றி அவளது கருத்தைப் பேசுவாள். இதுதான் 2003இல் வெளியான ‘விசில்’ படத்தின் கதை.

இதன் இயக்குநர்கள் ஜேடி ஜெர்ரியே ‘ஹாலிவுட் ஸ்லாஷர்’ படங்களின் பாதிப்பிலேயே 'விசில்’ படத்தைத்தமிழில் எடுத்தோம் எனச் சொல்லி யிருக்கிறார்கள். ‘விசில்’ வந்த புதிதில் அதன் திரைக்கதைக்காகப் பேசப்பட்டது. இமானின் இசையில் ‘அழகிய அசுரா’ பாடல் வைரல் ஆனது. படத்தில் ஷெரினின் நடிப்பும் பேசப்பட்டது.

குறிப்பு: ‘விசில்’ படத்தில் விவேக்கின் காமெடி, ‘வாட் வுமன் வாண்ட்’ (What Women Want’ என்கிற ஹாலிவுட் படத்திலிருந்து எடுக்கப்பட்டது. அதில், பெண்கள் தங்கள் மனதில் நினைப்பதெல்லாம் படத்தின் நாயகன் மெல் கிப்சனுக்குத் தெரிந்துவிடும். இதில் விவேக்குக்கு அந்தச் சக்தி கிடைத்துவிடும்.

- rajesh.scorpi@gmail.com

SCROLL FOR NEXT