இளமை புதுமை

தவறிய பயணங்கள் முடிவதில்லை! | வாழ்க்கையின் சீக்ரெட் ரெசிபி 26

ஆர்.ஜே. ஆனந்தி

முறுகலான தோசை ஒன்றுக்கு ஆசைப்பட்டு விமானத்தையே தவறவிட்ட ஆளைப் பற்றித் தெரியுமா? வேறு யாருமல்ல, அது நான்தான். முதல் முறையாக விமானத்தில் பறந்தபோது, 'இனிமேல் ஒவ்வொரு ஃபிளைட் டிக்கெட்டையும் பத்திரமா வெச்சுக்கணும்’ என்று முடிவெடுத்தேன். ஆனால், கணக்கிலடங்காத அளவுக்கு விமானத்தில் பறப்போம் என்றெல்லாம் அப்போது கற்பனை செய்திருக்கவில்லை. விமானம், பேருந்து, ரயில் என நான் வெற்றிகரமாக மேற்கொண்ட பயணங்களைவிட, தவறவிட்ட பயணங்கள்தான் மனதில் இன்னும் ஆழமாகப் பதிந்துள்ளன.

எனக்குள் ஒரு வள்ளல்: சொன்னா நம்ப மாட்டீங்க, நான் ஒரு வள்ளல். கல்லூரி முடிந்து கோவையிலிருந்து பணி நேர்காணலுக்காக சென்னை வந்திருந்தேன். சென்னையில் ஒரு பிரபல எஃப்.எம்.மில் வேலையும் கிடைத்துவிட்டது. சிறுவயதிலிருந்து வியந்து பார்த்த ஊர் முழுக்க என்னுடைய குரல் ஒலிக்கப்போகிறது என்று மனதில் மிகுந்த மகிழ்ச்சி. நான் பார்த்திராத புதுச்சேரியிலும் என் குரல் ஒலிக்கப்போகிறது என்பது இரட்டிப்பு போனஸ்.

          

மகிழ்ச்சியோடு கோவைக்கு நானும் பாட்டியும் திரும்பிச் செல்ல ஆயத்தமாகி இருந்தோம். இருவருக்கும் ரயிலில் தட்கலில் முன்பதிவு செய்திருந்தார் அப்பா. அதே நாளில் என் நண்பர்கள் இருவர் சென்னையில் வேறொரு வேலைக்காக வந்துவிட்டு, கோவைக்குப் பேருந்தில் செல்லலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தனர். எனக்குள் இருந்த வள்ளலுக்கு ஒரு யோசனை தோன்றியது.

எனக்கும் பாட்டிக்கும் படுக்கை வசதியுடன் இரண்டு டிக்கெட் உறுதியாகியிருந்தது. ஒன்று, கீழ் இருக்கை, மற்றொன்று நடு இருக்கை. அந்தப் படுக்கையைப் பயன்படுத்தாவிட்டால் 4 பேர் அமர்ந்து செல்ல முடியும். 'ஓபன் டிக்கெட்' வாங்கிவிட்டு டிக்கெட் பரிசோதகரிடம் சொல்லிவிட்டு, அவர்களை எங்களுடன் ரயிலில் நிம்மதியாக அழைத்துச் செல்லலாம் என்று நினைத்தேன்.

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குச் சென்று ரயில் ஏறும் முன்பு, கோடம்பாக்கம் ஹோட்டலில் என் தோழிக்கும் தோழனுக்கும் பிடித்த உணவை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று ஆசை. சில்லி பரோட்டா, சில்லி கோபி, கொத்து பரோட்டா என அனைத்தையும் பார்சல் வாங்கிக்கொண்டு சென்ட்ரல் ஸ்டேஷனுக்குள் சென்றால், ரயிலின் கடைசிப் பெட்டியின் பின்பக்கம் இருக்கும் ‘X'-யை மட்டும்தான் பார்க்க முடிந்தது. ரயில் போயே போய்விட்டது.

அடுத்த ரயிலுக்கு 4 பேரும் ஓபன் டிக்கெட் வாங்கி இடித்துக்கொண்டும் ஒடுங்கிக்கொண்டும் நின்றோம். சுவையாகச் சாப்பிடலாம் என்று வாங்கிவந்த உணவு பார்சல் நசுங்கிக்கிடந்தது. கொஞ்சம் கூட்டம் குறைந்ததும், ரயிலின் பாத்ரூம் அருகே பாட்டியின் சேலையை விரித்து என் தோழியோடு பயணித்ததை என்றைக்குமே மறக்க முடியாது.

பறந்து போன விமானம்: ‘சூரரைப் போற்று' பார்த்திருக்கிறீர்களா? விமானத்தைப் பற்றி அமைந்த அந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக நான் ஏற வேண்டிய விமானத்தை மொறுமொறு தோசைக்கும் ஃபில்டர் காபிக்கும் ஆசைப்பட்டுத் தவறவிட்டேன். சத்தீஸ்கரில் உள்ள ராய்கர் என்கிற இடத்தில் படப்பிடிப்பு நடந்தது. சென்னையிலிருந்து அதிகாலையில் விமானம் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது.

பொதுவாகவே கடைசி நிமிடத்தில் போய்ச் சேர்வதுதான் வழக்கம். வழக்கத்துக்கு மாறாக அன்று சீக்கிரமே விமான நிலையத்துக்குச் சென்றுவிட்டேன். பாதுகாப்புச் சோதனை, பேகேஜ் செக்-இன் என அனைத்தையும் விரைவில் முடித்துவிட்டேன். விமானத்தில் ஏறுவதற்கு ஒரு மணி நேரம் அவகாசம் இருந்தது. அதற்குள் ஒரு மொறுமொறு தோசை சாப்பிட்டு, காபி குடிக்கலாம் என்று ஒரு ஹோட்டலில் அமர்ந்திருந்தேன்.

'நான் எவ்வளவு சீக்கிரமாக வந்துவிட்டேன் தெரியுமா?' என்று நண்பர்களை செல்போனில் அழைத்துப் பெருமை பேசிக்கொண்டிருந்த நேரத்தில்தான், அறிவிப்புப் பலகையில் ‘விமானம் புறப்பட்டுவிட்டது' என்கிற தகவலைப் பார்த்தேன். கையும் காலும் உதற ஆரம்பித்தது. ஏஜென்சி மூலம் புக் செய்திருந்ததால், விமானப் பணியாளரின் அழைப்புகள் எனக்கு வரவில்லை.

அதிகாலை என்பதால் ஏஜென்சி ஊழியர்களும் அழைப்பை ஏற்கவில்லை. விமானம் பறந்து போயிட்டு! அடுத்த விமானத்தில் பதிவுசெய்து, பல மணிநேரம் பயணம் செய்து படப்பிடிப்புத் தளத்துக்குச் சென்றால், “ஓ! நீங்கதான் அந்த ஃபிளைட்டைத் தவறவிட்ட ஆனந்தியா?' என்கிற புது அடையாளம் கிடைத்தது. விமானத்தைப் பற்றிய ஒரு படத்தின் படப்பிடிப்புக்கு விமானத்தையே தவறவிட்டதை எப்படி மறக்க முடியும்? இப்படி வாழ்க்கையில் நாம் வெற்றிகரமாக முடித்த பயணங்களைவிட, தவறவிட்ட பயணங்கள் காலம் கடந்தும் சுவையாகத்தான் இருக்கின்றன!

(ரெசிபி வரும்)

- ananthi.iyappa@live.in

SCROLL FOR NEXT