இளமை புதுமை

இரண்டாவது இன்னிங்ஸில் சாதித்த அமோல்!

மிது கார்த்தி

பாலிவுட் படமான ‘சக் தே இந்தியா'வில், மகளிர் ஹாக்கி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வார் கபீர் கான் (ஷாருக் கான்). இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் அமோல் மஜூம்தார் தற்போது கபீர் கானுடன் ஒப்பிடப்பட்டு பாராட்டப்படுகிறார்.

சுற்றுப் போட்டிகளில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்ரிக்காவுக்கு எதிரான சுற்றுப் போட்டிகளில் இந்திய அணி தோற்றிருந்தது. இந்த நிலையில் கோப்பை வெல்வதெல்லாம் கனவு என நினைக்கப்பட்ட நேரத்தில், நம்பிக்கையுடன் அணியை வழிநடத்தி ‘மாஸ்டர் மைண்ட்’டாகச் செயல்பட்டவர் அமோல்.

          

மும்பையில் சச்சின் டெண்டுல்கர் படித்த பள்ளியில் படித்து, கிரிக்கெட்டிலும் கால் பதித்த அமோல் மஜும்தாரை, அதிர்ஷ்டமில்லாதவர் என்று சிலர் சொல்லலாம். 1993-94இல் மும்பைக்காக ரஞ்சிக் கோப்பையில் 260 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உலக சாதனை படைத்ததன் மூலம் முதல் தர கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கினார்.

முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த பேட்ஸ்மேனாக அறியப்பட்டவர், ரஞ்சிக் கோப்பையில் மும்பை அணிக்குப் பலமுறை வெற்றிகளைத் தேடிக்கொடுத்தவர். 90களின் பிற்பகுதியில் இந்திய ஆடவர் அணியில் விளையாடுவதற்கு அத்தனை தகுதிகளையும் பெற்றிருந்தவர்.

ஆனால் சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி, விவிஎஸ் லக்ஷ்மண், ராகுல் டிராவிட் எனத் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்திய காலத்தில், இந்திய அணிக்குள் அவரால் வர முடியாமல் போனது. இரண்டு தசாப்தங்களுக்கு முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் கோலோச்சிய அமோல், 48.11 சராசரியுடன் 11,167 ரன்களைக் குவித்திருக்கிறார். இதில் 30 சதங்களும் அடங்கும். 2014இல் ஓய்வுபெற்ற மஜூம்தார், பயிற்சியாளர் அவதாரம் எடுத்தார்.

இந்தியாவின் 19 வயதுக்கு உள்பட்ட, 23 வயதுக்கு உள்பட்ட அணிகளுடன் பங்காற்றிய மஜூம்தார், 2018 - 2020 வரை ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்தார். 2018இல் இந்திய ஆடவர் அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும் சிறிது காலத்துக்கு இருந்திருக்கிறார்.

‘செகண்ட் இன்னிங்ஸ்’ என்றொரு பதம் உண்டு. அந்த வகையில் முதல் இன்னிங்ஸில் உரிய உயரத்தை எட்ட முடியாமல் போன அவர், இரண்டாவதில் சாதித்திருக்கிறார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் ஒன்றில்கூடப் பங்கேற்காத இவர்தான், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கோப்பை வெல்வதற்கு முக்கியக் காரணமாகி இருக்கிறார்.

2023 அக்டோபரில்தான் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அமோல் நியமிக்கப்பட்டார். மகளிர் அணியின் டிரஸ்ஸிங் ரூமில் முன்பு இறுக்கமான சூழல் நிலவிவந்ததாகக் கூறப்படுகிறது. அது அணியின் முன்னேற்றத்தைப் பாதித்தது. ஆனால், அமோலின் அணுகுமுறையால் டிரஸ்ஸிங் ரூம் கலாச்சாரம் மாறியது.

இணக்கமான சூழலை அவர் உருவாக்கினார். பிறகு அணிக்குத் தேவையான ஸ்திரத்தன்மையைக் கொண்டுவந்தார். போட்டிக்கான உத்திகளை வகுப்பது, திட்டமிட்டவற்றை எப்படி முன்னெடுத்துச் செல்வது, வீராங்கனைகளின் திறமையை வெளிக்கொணர்வது போன்றவை சார்ந்து இந்திய அணியில் நிறைய தடுமாற்றங்கள் இருந்தன.

அமோலின் வழிகாட்டுதல் இந்தத் தடுமாற்றங்களுக்கு முடிவுகட்டின. அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌருடன் இணைந்து வெற்றிக்கான சூத்திரங்களை உருவாக்கினார். உலகக் கோப்பையில் முக்கியமான மூன்று சுற்றுப் போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைந்த பிறகு, தொடர்ச்சியாக வெற்றி பெற்று கோப்பையை வெல்ல அமோல் வகுத்த திட்டம் முக்கியமானது.

தோல்வியிலிருந்து வீராங்கனைகள் உடனடியாக மீண்டுவருவதற்கு, ஒவ்வொரு வீராங்கனையின் நம்பிக்கையையும் உழைப்பையும் மீட்டெடுக்க அவருடைய வழிகாட்டல்கள் உதவின. கோப்பை வென்ற பிறகு கேப்டன் ஹர்மன்பிரீத் பயிற்சியாளர் அமோலின் கால்களைத் தொட்டு வணங்கியது, சாதாரணமான குரு வணக்கம் அல்ல. அணிக்கு அவர் அளித்த மகத்தான பங்களிப்புக்கான மரியாதை அது!

SCROLL FOR NEXT