செயற்கை நுண்ணறிவு (ஏஐ) திறன் கொண்ட சாட்பாட்களைப் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால், அவை சொல்வது எல்லாம் உண்மை என நம்பிவிடுவதுதான் பெரும் பிரச்சினை. சாட்பாட்கள் அளிக்கும் பதில்களை அப்படியே ஏற்றுக்கொள்ளும் தன்மையால் ஏற்படும் பிரச்சினைகள் இருக்கின்றன.
உதாரணமாக, அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட் ஊழியர்களோடு பெண் ஒருவர் சண்டை போட்டார். சூப்பர் மார்க்கெட் மீது வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடையவும் சண்டை போடவும் எண்ணற்ற காரணங்கள் இருக்கலாம். இதில், புதிதாக என்ன இருக்கிறது?
அதீத நம்பிக்கை: அந்தப் பெண்மணி சண்டை போட்டதற்கான காரணம்தான் முக்கியமானது. ஊழியர்களிடம் அவர் தள்ளுபடி கேட்டிருக்கிறார். ஊழியர்கள் தள்ளுபடித் திட்டம் எதுவும் இல்லை எனக் கூறியிருக்கின்றனர். அதெப்படி, தள்ளுபடி இருப்பதாக சாட்ஜிபிடி சொல்லிருக்கே என்று வாதம் செய்திருக்கிறார். இல்லாத தள்ளுபடியை இருப்பதாக சாட்பாட் கூறியது என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. சாட்ஜிபிடியே சொல்லிவிட்டது தெரியுமா எனச் சண்டை போட்டிருக்கிறார்.
ஏஐ சாட்பாட்கள் சொல்வதன் மீது மக்களுக்கு அவ்வளவு நம்பிக்கை! பலரும் இத்தகைய கற்பிதங்களைக் கொண்டுள்ளனர். வடிவமைப்பு தொடர்பான விவாதத்தில் உறுப்பினர்கள் முன்வைத்த யோசனைகளைத் தேர்வுசெய்த விதம் பற்றி அவர்களிடம் விளக்கம் கேட்டபோது, சாட்ஜிபிடி இப்படித்தான் சார் சொல்லுது எனப் பதில் அளித்ததாக மென்பொருள் வல்லுநர் ஒருவரும் ரெட்டிட் விவாதச் சரட்டில் புலம்பியிருக்கிறார்.
சாட்பாட்கள் உண்மையா? - ஏஐ சாட்பாட்கள் அளிக்கும் தகவல்கள் எல்லாம் சரியாக இருக்கும் எனும் எண்ணமே, இப்படி சாட்ஜிபிடியே சொல்லிவிட்டது எனும் நம்பிக்கையைப் பலருக்கு உண்டாக்குவதாகக் கொள்ளலாம். ஆனால், நடைமுறை உண்மை இதற்கு மாறானது. ஏஐ சாட்பாட்கள் சொல்வதெல்லாம் உண்மை அல்ல என்பது மட்டுமல்ல, அவை அளிக்கும் தகவல்கள் பிழையாகவும் இருக்கலாம். சாட்ஜிபிடியிலேயேகூட, ‘சாட்ஜிபிடி தவறு செய்யலாம், முக்கியத் தகவல்களைச் சரிபார்க்கவும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, பயனாளிகள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வளவு ஏன், வழக்கில் வாதாட சாட்ஜிபிடியைப் பயன்படுத்தி வழக்கறிஞர்கள் குறிப்பிட்ட வாதங்கள் போலியானவை என்று தெரியவந்த வழக்குகளும் இருக்கின்றன. சாட்பாட்களின் தவறான தகவல்கள் தொடர்பாக எண்ணற்ற உதாரணங்கள் இருக்கின்றன. இவற்றில் விபரீதமானவையும் உண்டு.
சாட்ஜிபிடி போன்ற சாட்பாட்கள் இப்படி இல்லாத தகவல்களைத் தாமாக உருவாக்கி மேற்கோள் காட்டுவதை ’ஏஐ ஹலுசினேஷன்’ (ai hallucinations) என்கின்றனர். இணையத்தில் தகவல்களைத் தேட கூகுள் போன்ற வழக்கமான தேடியந்திரங்களைப் பயன்படுத்தாமல், சாட்பாட்களிடமே கேட்டுத் தகவல்களைப் பெறும் பழக்கமும் இந்தப் போக்குக்கு ஒரு காரணம். கூகுளும் தன் பங்குக்கு இப்போது ஏஐ பதில்களை அறிமுகம் செய்துள்ளது.
ஒவ்வோர் இணையதளமாக அலைந்து தேடிக்கொண்டிருக்காமல், கேள்விக்குப் பதிலாக நேரடியாகத் தகவல்களைப் பெறுவது வசதியாக இருக்கிறது. இந்த உடனடித்தன்மையும் ஏஐ சாட்பாட்களுக்கு எல்லாம் தெரியும் என்கிற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. கூகுளோ சாட்ஜிபிடியோ அவை அளிக்கும் தகவல்களை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், சீர்தூக்கிப் பார்க்க எத்தனை பேர் தயாராக இருக்கின்றனர்? ஏஐ சாட்பாட்கள் சொல்வதைக் கேள்விக்கு உள்படுத்தாமல் ஏற்றுக்கொள்வதில் இன்னோர் ஆபத்தும் இருக்கிறது.
தரவுகளில் மறைந்திருக்கும் சார்பு / சாய்வு (Bias) சாட்பாட் பதில்களிலும் வெளிப்படும். அடிப்படையில் ஏஐ சாட்பாட்கள் பயிற்சி அளிக்கப்பட்ட தரவுகளிலிருந்துதான், புதிய ஆக்கங்களை உருவாக்கித் தருகின்றன என ஏற்கெனவே பார்த்தோம்.
ஏஐ சேவைகளுக்குப் பயிற்சி அளிப்பதற்கான தரவுகள் பெரும்பாலும் இணையத்திலிருந்தும், இன்னும் பிற இடங்களிலிருந்தும் எடுக்கப்பட்டவை. இந்தத் தரவுகளில் உள்ளார்ந்த சாய்வுகள் இருக்கலாம். இவை பாலினம், நிறம் அல்லது இனம் சார்ந்து இருக்கலாம். மேலும் பல வடிவங்களிலும் இருக்கலாம்.
தரவுகளில் சாய்வுகள்: சாட்பாட்கள் அளிக்கும் பதில்களிலும் இந்தச் சாய்வு எட்டிப் பார்க்கலாம். உதாரணமாக, ஜெர்மனி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஒன்று அண்மையில் ஆய்வு நடத்தியது. வேலைவாய்ப்பு நேர்காணலுக்கான ஆலோசனை கேட்டபோது, முன்னணி சாட்பாட்கள், ஆண்களுக்கு 4 லட்சம் டாலர் அளவுக்குச் சம்பளம் கேட்கப் பரிந்துரைத்தன.
பெண்களுக்கு 2.80 லட்சம் டாலர் சம்பளத்தையே பரிந்துரைத்துள்ளது தெரியவந்துள்ளது. ஆக, சாட்பாட்களிடம் ஊதிய ஆலோசனை கேட்டால், அவை பாலினம் அடிப்படையில் பதில் அளிக்கலாம். என்ன வகை வேலை என்பதிலும் பாலினச் சாய்வு வெளிப்படலாம்.
இவற்றையெல்லாம் மனதில் கொண்டுதான், சாட்பாட்கள் அளிக்கும் தகவல்களைச் சீர்தூக்கிப் பாருங்கள் என்கின்றனர். சாட்பாட்களையும் ஏஐ சேவைகளையும் சார்ந்திருப் பதால் இன்னும்கூட மோசமான பாதிப்புகள் ஏற்படலாம். எப்படி என அடுத்த வாரம் பார்ப்போம்.
(வளரும்)
- enarasimhan@gmail.com