மூலகாப்பியமான வான்மீகத்தைத் தொடர்ந்து, பல்வேறு பிராந்திய மொழிகளில், காப்பியங்களாகவும் கதைப் பாடல்களாகவும் இராமகாதை இயற்றப் பெற்றது. அனைத்து இராமாயணங்களும் இராமகாதையின் அடிப்படை தார்மிகத்தை அப்படியே நிலைநிறுத்துகின்றன.
ஏகநாதர் என்னும் அருளாளரால், மராட்டி மொழியில் இயற்றப்பெற்ற காப்பியம், பாவார்த்த ராமாயணம் என்பதாகும். சமூக-பொருளாதார-அரசியல் சிக்கல்கள் சூழ்ந்து கொண்டிருந்த வேளையில், சாதாரண நிலையிலிருந்த மக்களுக்கு அமைதியையும் நிம்மதியையும், இராமன் கதை மட்டுமே வழங்க முடியும் என்று நம்பிய சான்றோரில் ஏகநாதரும் ஒருவர்.
பாவார்த்த இராமாயணம் என்னும் பெயரே, ஏகநாதரின் சிந்தனையை நமக்குத் தெளிவாக்கும். இது வெறும் கதையன்று. ‘இதற்குள்ளிருக்கும் பாவத்தை, உட்பொருளை, உணர்வுகளை விளங்கிக் கொள்ள வேண்டும்; காட்டுக்குப் போவதும், மனைவியைத் தொலைப்பதும், யுத்தம் செய்வதும் வெறும் முகாந்திரங்களே; உள்ளிருக்கும் பொருள் வேறு’ என்பது ஏகநாதரின் செய்தி.
கதைப் போக்கிலேயே சில மாற்றங்களைச் செய்து, உட்பொருளை உணர்த்துகிறார். புத்திர காமேஷ்டி யாகம் நடைபெறுகிறது. யாகபலனான பாயசத்தை பத்தினி களிடையே பகிர்ந்து கொடுக்கவேண்டிய நேரம். இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை குலகுருவான வசிட்டர் எடுத்துக் கூறுகிறார்.
கௌஸல்யா தே தர்மபத்னீனீ. ஸுமித்ரா வரிலீ ஸாத்வீ ம்ஹணோனி. கைகேயீ வரிலீ ஸுந்தரபணீம், ரூபயௌவனீம் கர்விஷ்ட -
கோசலை அறப்பத்தினி; சுமித்திரையோ மென்மையானவள்; கைகேயி தன்னுடைய அழகால், இளமையால் கர்வம் கொண்டவள்.
இந்த கர்வம், கைகேயியைக் கோபப்படவும் செய்கிறது. மூன்று பத்தினிமாருக்கும் பாயசத்தைப் பகிர்வானேன்? தனக்கு மட்டுமே என்பதுபோல் எண்ணுகிறாள்.
வசிட்டரிடம் கூடத் தன்னுடைய சினத்தைக் காட்டுகிறாள். எப்படியோ பாயசம் மூவருக்கும் பகிரப்படுகிறது. கோசலையும் சுமித்திரையும் மரியாதையோடு பாயசத்தை ஏந்திச் செல்ல, கைகேயி மட்டும் அசிரத்தையாகப் பாயசக் கிண்ணத்தை வைக்கிறாள். எங்கிருந்தோ பறந்து வரும் பருந்து, அந்தக் கிண்ணத்தைத் தூக்கிக் கொண்டு போய்விடுகிறது. ஒரு பக்கம் ஆக்ரோஷம், ஒரு பக்கம் அவஸ்தை என்று கைகேயி தவிக்கும்போது, கோசலை சமாதானப்படுத்துகிறாள்.
ஆம்ஹாம் தும்ஹாம் ஏக ஸங்காத, ஆம்ஹாம் தும்ஹாம் ஏக போகார்த்த,
ஆம்ஹாம் தும்ஹாம் ஏக காந்த, ஸக்ய ஸக்யார்த்த ஆம்ஹாம் தும்ஹாம்
‘நாம் எல்லோரும் ஒன்று; நாம் ஒன்றாகச் சேர்ந்து நன்மையை அனுபவிக்க வேண்டும்; நாம் தோழமை பூண்டவர்கள்’, என்றுரைக்கும் கோசலை, பாயசத்தில் பங்கு தருகிறாள்.
ஸத்ஸங்காச்சேன் நிஜமஹிமான், கௌஸல்யா தேத ஆபணாஸமான்
கௌஸல்யே ஸங்கேன் ஸுமித்ரா ஜானா, தே ஆபண பாகார்த,
ஸுஷ்டு மைத்ரீ கௌஸல்யேஸீம், ம்ஹணோனி ஸுமித்ரா ம்ஹணேணேம் தியேஸீ,
தேணேம் ஸுமித்ரா பாவேம்ஸீ, தே கைகேயீஸீ பாகார்த -
தங்கள் மூவரையும் ஒன்றுபோல் கருதிய கோசலை முன்னெடுக்க, அவளும் சுமித்திரையும் தத்தம் பிரசாதப் பங்குகளிலிருந்து கைகேயிக்குப் பாதி பாதி கொடுத்தார்கள். இத்தனைக்குப் பிறகும் கைகேயிக்குப் பொறாமை தீரவில்லை. மூத்த மகன் கானகம் அனுப்பப்பட வேண்டும், இளைய மகனே நாடாள வேண்டும் என்று கருவுற்றிருக்கும் நிலையிலேயே தசரத ராஜனிடம் கூறுகிறாள்.
கைகேயிக்கு பரதன், சத்ருக்னன் என்னும் இரு புதல்வர்கள்; காட்டில் சீதையைத் தனியாக விட்டுச் செல்லும் இலக்குவன், பர்ணசாலையைச் சுற்றிக் கோடு கிழித்தல்; சாயா சீதை வெளிப்படல், வாலி இறந்தபோது, இராமன் மீது கோபப்படும் தாரை இராமனுக்குச் சாபமிடல் என்று பல கதை போக்கு மாற்றங்களை ஏகநாதர் செய்திருந்தாலும், இராமகாதையின் அடிப்படை தார்மிகத்தை அப்படியே நிலைநிறுத்துகிறார்.
ஏழு காண்டங்களில் 297 அத்தியாயங்களில் ஏறத்தாழ 40,000 செய்யுள்களில் அமைந்திருக்கும் பாவார்த்த இராமாயணத்தில், இராமகாதையின் உட்பொருள் முதலிலேயே தெளிவாக உரைக்கப்பட்டு விடுகிறது. அஜன் (தசரதனின் தந்தை) என்பவன் பரம்பொருளின் அடையாளம்; அஜன் என்னும் சொல்லுக்குத் தோற்றம் என்றே பொருள் கொள்ளலாம்; அஜனிடமிருந்து பத்துப் புலன்கள் வெளிப்படுகின்றன; இவையே தசரதன் (பத்து ரதன்) என்னும் பெயர் பெறுகின்றன.
பத்துப் புலன்களுக்கு மகவாக, ஆன்மா (இராமன்) பிறக்கிறது. கோசலை நல்லறிவைக் (சத்வித்யா) குறிக்கிறாள்; சுமித்திரை, தூய அறிவு (சுத்த புத்தி); கைகேயியோ, அவித்யா (அஞ்ஞானம்). கூனி, குவித்யையைக் (குயுக்தி அல்லது தீய அறிவு) குறிக்கிறாள். நல்லறிவு இல்லையானால், அவித்யையானது, குவித்யையால் திசை திருப்பப்படும்.
லக்ஷ்மணன், ஆன்ம வித்யையின் (ஆத்மப் பிரபோதம்) அடையாளம்; பரதன், உணர்வுகளின் அடையாளம்; சத்ருக்னன் சுய ஆதாரம் (நிஜ நிர்தாரம்). ஆன்மாவை, உணர்வுகளின் அனுபவத்தாலும், ஆத்ம வித்யையாலும், சுய ஆதாரம் கொண்டு அறிதலே அறம். வசிட்டர், விசாரத்தின் அடையாளம்; விசுவாமித்திரர், விவேகத்தின் அடையாளம். விவேகமும் விசாரமும் ஆன்மாவுக்கு குருவாகின்றன. ஆன்மாவே, ஆண்டவனாக உயர்கிறது. ஆண்டவனின் (இராமன்) அறிவு ஸ்வரூபமே, சீதை. இரண்டும் ஒன்றையொன்று அறியும்; இரண்டையும் பிரிக்க இயலாது.
(தொடரும்)