ஆனந்த ஜோதி

திருநீலக்குடி நீலகண்டேஸ்வரர் | பரிகார ஸ்தலங்கள்

முனைவர் கே.பி.வித்யாதரன்

குடந்தை - காரைக்கால் சாலையில் 16 கிமீ தொலைவில் உள்ள திருநீலக்குடி நீலகண்டேஸ்வரர் கோயில், ஆயுள் பலத்தை அதிகரிக்கும் கோயிலாக போற்றப்படுகிறது. இத்தலத்தில் எம பரிகாரம், ராகு கேது தோஷ பரிகார பூஜைகள் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

தல வரலாறு: மிருகண்டு முனிவர், அவரின் மனைவி புத்திரப் பேறு வேண்டி இறைவனை வழிபட்டு வந்தனர். அவர்கள் பக்தியை மெச்சிய இறைவன் அவர்கள் முன்பு தோன்றி, 1,000 ஆண்டுகள் வாழும் துர்க்குணங்கள் நிறைந்த மகன் வேண்டுமா அல்லது 16 வயது வரை மட்டும் வாழும் தலைசிறந்த மகன் வேண்டுமா என்று கேட்க, மிருகண்டு முனிவர் தம்பதி தங்களுக்கு 16 வயது மகனே வேண்டும் என்றனர். இறைவன் அருளால் அவர்களின் மகன் மார்க் கண்டேயர் சிறந்த சிவபக்தராக விளங்கினார்.

          

அவருக்கு 16 வயது நடக்கும் போது அவரின் பெற்றோர் இறைவன் கூறியபடி விதிக்கப்பட்ட ஆயுள் 16 வயதுதான் என்பதைக் கூறினர். சிவபெருமானே அவரின் ஆயுளைக் காக்க முடியும் என்று மார்க்கண்டேயர் ஒவ்வொரு சிவஸ்தலமாக தரிசித்து வரும்போது திருநீலக்குடி தலத்துக்கும் வந்து ஈசனை பல காலம் வழிபட்டார். நிறைவில் ஈசன் தோன்றி, “யாது வரம் வேண்டும்?” என்று வினவ, மார்க்கண்டேயரும் தமது விருப்பத்தை தெரிவித்தார்.

அவரது விருப்பப்படி, இத்தலத்தில் சிரஞ்சீவியாக இருக்க மார்க்கண்டேயருக்கு ஈசன் வரம் அளித்தார். அமிர்தம் பெற வேண்டி தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை சிவபெருமான் உண்டார். அது அவர் வயிற்றுக்குள் செல்லாமல் தடுக்க உமையம்மை அவரின் கழுத்தைப் பிடிக்க விஷம் அவர் கழுத்தில் தங்கியது. இறைவனும், ‘நீலகண்டேஸ்வரர்’ என்று பெயர் பெற்றார்.

கோயில் சிறப்பு: இத்தலத்தில் மூலவருக்கு நாள் முழுவதும் எண்ணெய்யால் அபிஷேகம் செய்யும்போது அனைத்து எண்ணெயும் சிவலிங்கத்துக்கு உள்ளேயே உறிஞ்சப்பட்டு விடுவது அதிசயமாக உள்ளது . ஈசன் ஆலகால விஷம் உண்டு தொண்டையில் விஷம் இருப்பதால் அந்த விஷத்தன்மையைக் குறைக்க வேண்டியே இங்கு எண்ணெய் அபிஷேகம் செய்யப்படுகிறது என்பது ஐதீகம். இந்த எண்ணெயை உட்கொண்டால் தீராத நோய்கள் குணமாகும் என்று கூறப்படுகிறது. பிரம்மா, தேவகண்டர், வசிஷ்டர், சூரபத்மன், காமதேனு ஆகியோர் வழிபட்டு சாப நிவர்த்தி பெற்ற தலம் இதுவாகும்.

சிறப்பு அம்சம்: 5 இலைகள் கொண்ட வில்வமரம் தனிச்சிறப்பு வாய்ந்தது, தெய்வீக பலா மரத்தில் காய்க்கும் பலாப்பழத்தை அறுத்து அதன் சுளைகளை சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பின்னர்தான் அதை நாம் சாப்பிட வேண்டும். சுவாமிக்கு நைவேத்தியம் செய்யாமல் பலாப்பழத்தை வெளியே கொண்டு சென்றால், அது பயனற்றுப் போகும் என்று கூறப்படுகிறது.

கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 6-12, மாலை 4-8 மணி வரை.

மூலவர்: நீலகண்டேஸ்வரர்

அம்பாள்: அனுபமஸ்தினி, பக்தாபிஷ்டபிரதாயினி

SCROLL FOR NEXT