இராமநாதபுரம் மாவட்டம் தொண்டிக்கு அருகிலுள்ள குணங்குடி என்ற கிராமத்தில் 1792-ம் ஆண்டு மஸ்தான் சாகிப் பிறந்தார். இவருடைய இயற்பெயர் சுல்தான் அப்துல் காதிர் என்பதாகும். இளம்வயது முதலே ஆன்மிக தாக்கம் கொண்ட இவர் கீழக்கரை தைக்கா சாகிப் ஒலியுல்லாஹ் என்கிற செய்கு அப்துல் காதிரிடம் சென்று இஸ்லாமிய மார்க்க கல்வியும் காதிரிய்யா தரீக்காவின் ஞானநெறி முறைகளையும் கற்றுணர்ந்து தெளிந்தார்.
மஸ்த் என்றால் போதை, இவர் இறைக்காதலின் போதையில், லயித்து இருந்ததால் இவரை எல்லோரும் ‘மஸ்தான்’ என்றே அழைத்தனர். திரிச்சிராபுரம் மவ்லவி ஷாம் சாகிபிடமும் இவர் ஞானதீட்சை பெற்றார். இவர் திருமணத்தை தவிர்த்தார்.
இறைக்காதலில் மூழ்கி இவர் இறைவனை அடைவதில் அதிக கவனம் செலுத்தினார். வேதத்தின் உட்கருத்தை அறிந்து உணர வேண்டும் என்பதையும், இறைவனின் பேரருள் எல்லையற்றது, எல்லாவற்றையும் சூழ்ந்துள்ளது என்பதையும் எடுத்துக் கூறுகிறார். மெஞ்ஞான நிலையை உய்த்துணர தனது வாழ்நாளின் பெரும்பகுதியை தனிமையிலும், யோக நிஷ்டையில் அமர்வதிலுமே கழித்தார்.
திருப்பரங்குன்றம், சதுரகிரிமலை, புறாமலை, நாகமலை, ஆனைமலை என்று எங்கும் சுற்றித் திரிந்து தவம்புரிந்த சாகிப் எளிமையான உணவையே உட்கொண்டார். குப்பை மேடுகளே இவரது குடியிருப்பாக இருந்தது, முகியித்தீன் சதகம், அகத்தீசன் சதகம், பராபரக் கண்ணி, எக்காலக் கண்ணி, மனோன்மணிக் கண்ணி போன்ற கீர்த்தனைகளை தமிழ் உலகுக்கு தந்துள்ளார். இவர் பாடிய பாடல்களை இவரது தோழர்களான சியமங்கலம் அருணாச்சல முதலியார், காயல்பட்டிணம் சேக்னா லெப்பை ஆகியோர் பாதுகாத்து அவற்றை பதிவு செய்து தந்துள்ளனர்.
தனது இறுதிக் காலத்தில் 12 ஆண்டுகள் சென்னையில் வாழ்ந்த இவர் தனது 47-வது வயதில் பூரணத்துவமடைந்து இறைவனடி சேர்ந்தார். இவருடைய நினைவிடம் சென்னையில் ராயபுரத்தில், சுழல் மெத்தைக்கு அருகில் உள்ளது. இவருடைய (உரூஸ்) என்கிற நினைவுநாள் நவ. 6-ம் தேதி ராயபுரத்தில் நடைபெறுகிறது.