ஆனந்த ஜோதி

கொண்டைய ராஜுவின் காலண்டர் கடவுள்கள்!

தஞ்சாவூர்க் கவிராயர்

கோவில்பட்டி கொண்டைய ராஜுவின் கடவுள் பட காலண்டர்களை யார் பார்த்தாலும் சாட்சாத் அந்த கடவுளே தன் வீட்டுக்குள் எழுந்தருளி விட்டதாக பிரமை கொள்வார்கள். பூஜை அறையில் வைத்து வழிபடுவார்கள். நவீன தொழில்நுட்பத்தின் வருகையால் இதுபோன்ற படகாலண்டர்கள் பயன்பாடு குறைந்துவிட்டது. கொண்டைய ராஜூ 1898-ம் ஆண்டு நவ.7-ல் பிறந்தார். பூர்வீகம் ஆந்திரா, தாய்மொழி தெலுங்கு. ஆனாலும் சித்திரங்களுக்கு மொழி எதற்கு? சித்திரங்கள் வரையும் பரம்பரையில் பிறந்தவர்தான் கொண்டைய ராஜு.

இவரது ஓவிய நுட்பங்களை முதன்மை சீடர்களான டி.எஸ்.சுப்பையா, எஸ்.மீனாட்சி சுந்தரம், மு.ராமலிங்கம், டி.எஸ்.அருணாச்சலம், மு.சீனிவாசன், ஜி.செண்பகராமன் ஆகியோர் கற்றுத் தேர்ந்தனர். இவர்கள் தாமே வரைந்த ஓவியங்களில் குருநாதரின் கையெழுத்தைப் பிரதானமாக போட்டு கீழே தங்களின் பெயரைக் குறித்தனர். கோவில்பட்டி கலைஞர்கள் பாணி என்ற பாணியே உருவாகி விட்டது. கொண்டைய ராஜுவின் சீடரான டி.எஸ்.சுப்பையாவின் மகன் மாரீஸ் பல அரிய தகவல்களை தெரிவிக்கிறார்.

          

கொண்டைய ராஜுவின் ஓவிய முகங்களில் சாந்தம் நிலவும். அவர் பல ஆண்டுகள் ரமணாசிரமத்தில் தங்கி இருந்ததால் அவர் வரைந்த முகங்களில் ஒருவித சாந்த பாவம் வந்துவிட்டது. கொண்டைய ராஜு வரைந்த கல்கத்தா காளி முகத்தில் ரௌத்திரம், கோபம், கொடூரம் இருக்காது.

ஒரு தெய்வீகப் புன்னகை தவழும். ஆயுதம் ஏந்தி அசுரனை வதம் செய்யும்போதும் புன்னகை பூக்க இறைவியால் மட்டுமே இயலும். ரவிவர்மா, ஓவியங்களில் புராணக்கதை மாந்தர்களை ஐரோப்பிய பாணியில் அமைத்தார். அவை ஆயில் கலரில் செய்யப்பட்டவை. கொண்டைய ராஜு நாடகத் திரைச்சீலைகளை உருவாக்கியவர்.

ரவிவர்மாவின் மனித ரூப வடிவத்தை எடுத்துக்கொண்டு பரம்பரை ஓவிய மரபில் படங்களை வரைந்தார். கொண்டைய ராஜு தான் வாழ்ந்த ஊரைச் சுற்றி இருந்த வட்டார தெய்வங்களின் (சங்கரன்கோவில்கோமதி, திருச்செந்தூர் முருகன், மதுரை மீனாட்சி, பழநி முருகன்) படங்களை படைத்து கடவுளை தொட்டுவிடும் தூரத்தில் தூரிகையால் தீட்டினார். இதனால்தான் அவை புகழ்பெற்றன.

மாரீஸின் தந்தை குணசீலம் கோயில் மூல விக்கிரகத்தை படம் வரைந்து அங்கு எடுத்துச் சென்றபோது அதை பார்த்த ஊமைப் பெண்ணுக்கு பேச்சு வந்து விட்டதாக மாரீஸ் கூறுகிறார். கொண்டைய ராஜுவின் சீடரான ராமலிங்கத்தின் இளைய மகன் ஜெயக்குமார் சென்னை விருகம்பாக்கத்தில் சித்ராலயம் என்ற பெயரில் கலை அரங்கை நிறுவி நிர்வகித்து வருகிறார். கொண்டைய ராஜு படங்களுடன், 200-க்கும் மேற்பட்ட இந்திய கலைஞர்களின் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிய படங்கள் இக்கலை அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

கிளாஸ் பெயிண்டிங்கில் நிபுணத்துவம்: தஞ்சாவூர் சித்திர பாணியின் புகழ்பெற்ற கிளாஸ் பெயிண்டிங்கில் நிபுணத்துவம் பெற்ற ராஜுக்களின் குடும்பமே தஞ்சையில் வசித்தது. அக்குடும்பத்தைச் சேர்ந்த பரந்தாம ராஜு என்ற கதாபாத்திரத்தை வைத்து கள்ளம் என்ற நாவலை படைத்தார் மறைந்த எழுத்தாளர் தஞ்சை பிரகாஷ். தஞ்சை சித்திரப் படைப்பு பாணியை கொண்டைய ராஜு ஆர்வத்துடன் கற்றுத் தேர்ந்தது குறிப்பிடத்தக்கது. தஞ்சை வெண்ணாற்றங்கரையில் ஒரு வீட்டில் கொண்டைய ராஜுவின் ஓவியம் இருப்பதாகக் கேள்விப்பட்டு அதைப் பார்க்க போனோம்.

ஆலிலைக் கிருஷ்ணன் படம்! கிருஷ்ணன் படத்தின் விளிம்புகளைத் தொட்டுக் காட்டிய பிரகாஷ், “இவை எல்லாம் தங்க ரேக்குகள். விற்றால் பல ஆயிரம் கிடைக்கும். ஆனால் இந்த வீட்டில் பரம ஏழைகளாக வசிக்கும் இவர்கள் விற்க மாட்டார்கள்” என்றார். “கொண்டைய ராஜுவின் கடவுள் படங்களில் எங்கள் சொந்த பந்தங்களில் முகச்சாயல் தெரியும். அதோ பாருங்கள் அந்த முருகன் என் தம்பி மகனின் முகம்” என்றார் ஜெயக்குமார்.

தாய்லாந்துக்கு அழைப்பு: தாய்லாந்து பௌத்த மடாலயத்திலிருந்து விமானச் சீட்டு அனுப்பப்பட்டு அங்கு வந்து தங்கி புத்தர் படங்களை வரையுமாறு கொண்டைய ராஜூவுக்கு அழைப்பு வந்தது. ஆனால் புத்தர் படங்களை மட்டும் அவர் வரைந்து அனுப்பினார். தாய்லாந்துக்கு செல்லவில்லை.

SCROLL FOR NEXT