வாழ்வு இனிது

மண்ணுத்தின்னி | மயில்கள் அகவும் பெருநிலம் 05

என்.ஸ்ரீராம்

ஆடிக் கோடைக்காற்று விசைகொண்டு செம்மறிப்பட்டிக்குள் புகுந்து கடந்தது. இரவெல்லாம் கடுங்குளிரில் செம்மறிகள் சிட்டெடுத்து நடுங்கின. பட்டிக்குள் கோடைக்காற்று நுழைவதைத் தடுக்க கரைவெளி வயல் பருவக் காரருடன் சேர்ந்து பனையோலை ஒதுக்குப்படல்களை அப்பா கட்டினார்.
செம்மறிகளை மேய்ப்பதற்குச் சரியான ஆள் கிடைக்காமல் சிரமப்படுவதைப் பருவக்காரரிடம் சொன்னார் அப்பா. அந்தியில் வேலை முடிந்து புறப்படும்போது பருவக்காரர், “எங்கவூர்ல ஒரு பையன் இருக்கான். கூட்டிக்கிட்டு வரட்டுங்களா?” எனக் கேட்டார்.

அப்பா சம்மதித்தார். மறுதினம் கோடைமழை தூறிய விடியற்பொழுதில் பருவக்காரர் செம்மறி மேய்க்கும் பையனையும் அவனுடைய தந்தையையும் தோட்டத்திற்கு அழைத்து வந்திருந்தார். பையன் காதுகளில் பித்தளைக் கடுக்கு அணிந்திருந்தான். சுருள்சுருளாய் செம்பட்டைத் தலைமுடி. ராஜபற்கள் உதடுகளுக்கு வெளியே துருத்தியிருந்தன. வயிறு மட்டும் ஊதிப் பிதுங்கியிருந்தது. பையனின் தோற்றம் அப்பாவை யோசிக்கவைத்தது. பருவக்காரர் விடுவதாக இல்லை.

          

“மாசக்கூலியாக எத்தனை வள்ளம் (நான்கு படி) தவசமுன்னு (தானியம்) சொன்னீங்கன்னா, இப்பவே பையன ஆடுமேய்க்க அனுப்பிறலாமுங்க. “நரி, நாய்க வந்தா இவன் ஊளை யிட்டுருவான், கூட்டிக்கிட்டுப் போயிருங்க.” “பையன் ரெண்டு நாளைக்கு ஆடு மேய்க்கட்டும். ஒழுங்கா மேய்ச்சான்னா வெச்சுக்குங்க. இல்லீன்னா தொரத்தி வுட்டுருங்க.” அன்றே பையன் பட்டியக்கிடைக்குச் சென்று செம்மறிகளைத் திறந்து விட்டான். அப்பா எதுவும் பேசாமல் பார்த்துக்கொண்டிருந்தார்.

செம்மறிகள் தோட்டத்திற்குத் தென் புறமாகக் குடைச்சீத்தை வெளிக்குள் நுழைந்து மறைந்தன. பின்மதியத்தில் பொழுது மேற்கே சரிந்தது. அம்மா என்னைக் கூப்பிட்டுப் பதற்றமாகப் பேசினார். “ஆடுகள ஓட்டிப்போன பையன் இன்னும் மத்தியான சோத்துக்கு வரல. ஒரு எட்டு என்னாச்சுன்னு போய்ப் பாருடா.” நான் தவிட்டுப்புறாக்கள் குரலிடும் குடைச்சீத்தை வெளிக்குள் போய்த் தேடினேன். செம்மறிகள் மந்தையிட்டு மேய்ந்துகொண்டிருந்தன.

விரிந்த குடைச்சீத்தையின் கிழக்குப் படர்ந்த நிழலில் பையன் அமைதியாக உட்கார்ந்திருந்தான். “ஏன் சோறு திங்க வரல?” “பசிக்கல.” நான் திரும்பி வீட்டுக்கு வந்து அம்மாவிடம் சொன்னேன். பையன் பட்டினி கிடக்கிறானே என அம்மா விசனப்பட்டார். அந்தக் கோடைக்காற்றுக் காலம் முடிவுற்ற சமயத்தில், பையன் ஆடு மேய்க்க வரவில்லை. தோட்டத்தில் செம்மறிகளை மேய்க்க அப்பா சிரமப் பட்டார்.

இருள் சூழும்போது பையனின் தந்தை பட்டியக்கிடைக்கு வந்து அப்பாவைச் சந்தித்தார். “அவன் மண்ணுத்தின்னிங்க. கொழந்தையிலிருந்து இப்ப வெரைக் கும் அவனால மண்ணு திங்கற பழக்கத்த நிறுத்த முடியல. இப்பவும் மண்ணைத் தின்னுத்தின்னு வயிறு உப்பிக்கிச்சுங்க. பெரியாஸ்பத்திரில சேர்த்திருக்கேன். ஒடம்பு செரியானதும் ஆடு மேய்க்க வந்திருவானுங்க.”

அப்பா மௌனமாகவே இருந்தார். ஆடு மேய்க்க வேறு ஆள் தேடிக் கொண்டிருந்தார். திடீரெனப் பையன் பழையபடி வந்து செம்மறிகளை மேய்த்தான். நாங்கள் பையனை ‘மண்ணுத்தின்னி’ என்று அழைக்கத் தொடங்கினோம். அவன் கைராசிக்குச் செம்மறிகள் பெருகின. செம்மறிகளை நோய்நொடிகளும் தாக்கவில்லை. மழையும் மிகுதியாகப் பொழிந்து காலமும் செழித்தது. நான்கைந்து வருடங்களுக்கு மேல் எங்கள் செம்மறி களை நல்லபடியாக மேய்த்துக் கொண்டிருந்தான்.

ஒரு மழைக்கால அந்தி மங்கும் போது செம்மறிகள் மட்டும் தோட்டம் வந்தன. அன்றும் நான்தான் மேய்ச்சல் காட்டுக்குள் போய்த் தேடினேன். வேலாமரத்தினடியில் அவன் மல்லாந்து படுத்தபடி மயங்கிக் கிடந்தான். வயிறு உப்பியிருந்தது. இருட்டியபோது அவன் தந்தையும் பருவக்காரரும் வந்து சவ்வாரி வண்டியில் அவனை ஏற்றினர். தாராபுரம் பெரியாஸ்பத்திரியில் கொண்டு போய்ச் சேர்த்தனர். இனி அவன் பிழைக்க மாட்டான் என்று தெரிந்து விட்டது. அப்பா செம்மறிகள் மேய்க்க வேறு ஆளை நியமித்துவிட் டார். அந்த மழைக்காலம் முடிவுற்றது.

பிறகு ஏறுவெயில் படிந்த இளங்காலைப் பொழுதொன்றில் மண்ணுத் தின்னி எங்கள் வீட்டு வாசலில் வந்துநின்றான். செம்மறிகள் மேய்ப்பதற்கு வேறு ஆள் இருப்பதை அறிந்துகொண் டான். எதுவும் பேசாமல் கண்ணீர் மல்கத் திரும்பிப் போய்விட்டான். நான் தாராபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்த தருணத்தில் எங்கள் சித்தப்பாவுக்குக் காசநோய் முற்றிவிட்டதாகத் தனியார் மருத்துவமனைகள் கைவிரித்துவிட்டன. சித்தப்பா தைரியசாலி.

பெரியாஸ்பத்திரியில் போய்த் தனியாகத்தங்கிக் கொண்டார். தினமும் பள்ளி செல்லும் காலையில் சித்தி கொடுத்தனுப்பும் இருவேளை சாப்பாட்டைச் சித்தப்பாவுக்கு நான்தான் கொண்டு போய் கொடுத்துக் கொண்டிருந்தேன். ஒருநாள் நோயாளிகளின் அறைக் குள்ளிருந்து யாரோ கூப்பிடுவதாக உணர்ந்தேன். சன்னலோரம் எட்டிப் பார்த்தேன். மண்ணுத்தின்னிதான் அழுக்கடைந்த பச்சைவிரிப்பின் மீது உட்கார்ந்திருந்தான். புருவம் முதற் கொண்டு உடம்பில் எல்லா முடி களும் உதிர்ந்துவிட்டிருந்தன.

கைகால்களும் சூம்பி வற்றிவிட்டன. ஆங்கிலத் திரைப்படத்தில் வரும் வேற்றுகிரக வாசிபோல் காணப்பட்டான். “மூணு வருசமா இங்கதான் கெடக்கறேனுங்க. சந்தை நாளு மட்டும் அப்பன் வந்து பார்க்கும். என்னைய இங்கிருந்து ஊருக்குக் கூட்டிக்கிட்டுப் போயிருங்க. எப்பவும்போல உங்க தோட்டத்துல ஆடு மேய்ப்பேன்.” அவனுக்கு மூச்சிளைத்தது. கண்கள் கசிந்தன. நான் என்னிடமிருந்த ஐந்து ரூபாய்த் தாளை அவனிடம் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன். சில மாதங்களில் அவன் இறந்துவிட்டான். சித்தப்பா பிழைத்துக்கொண்டார்.

இருபத்தைந்து வருடங்கள் கடந்தோடின. பெரியாஸ்பத்திரியில் சாவின் நிழல் தெரிய உட்கார்ந்திருந்த மண்ணுத்தின்னியின் உருவம் என்னை ‘மண்கால் வேட்கை’ குறுநாவலை எழுத வைத்தது. குறுநாவல் பிரசுரமான காலாண்டிதழை சென்னை வந்திருந்த அப்பாவிடம் காட்டினேன்.
“நம்ம பண்ணையத்துக்கு வரும் போது அவனுக்குப் பத்து வயசு இருக்குமுன்னு நெனைச்சேன். அப்பவே அவனுக்கு இருபது வயசாம். மண்ணைத் தின்னுத்தின்னு வளரல. கலியாணம் செஞ்சு எல்லாராட்டமும் வாழணுமுன்னு அவ்வளவு ஆசை யிருந்துச்சு அவங்கிட்ட. பாவம் சின்ன பையனாவே இருந்து செத்துப் போயிட்டான்.”

(மனிதர்கள் தோன்றுவார்கள்)

- shriramabhi07@gmail.com

SCROLL FOR NEXT